பக்தர்களை காக்கும் பாண்டுரங்கன்.
நிரஞ்சனா
ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை இருக்கிறது. அதுபோல இறைவன் தன் கடமையாக நினைப்பது தன் குழந்தைகளான நம்மை நல்வழிபடுத்தி பாதுகாப்பதுதான். இதற்காக தெய்வம் பல சமயங்களில் பூலோகத்தில் தோன்றுகிறார். எங்கும் இறைவன் இருக்கிறார். இறைவனை நேரில் காட்டமுடியுமா? என்று கேட்டால், காற்று இல்லாத இடததில் ஒருநாள் முழுவதும் ஒருவரால் இருக்க முடியுமா? முடியாது அல்லவா. அந்த காற்றை யார் உருவாக்கியது என்றால் மரங்கள் என்பார்கள். அந்த மரங்களை உருவாக்குவது இறைவன். இயற்கை என்றாலே அது இறைவன்.
ஒரு மரத்தின் இலை கூட காற்று அடித்தால் கோபுரத்தில் ஏறும், குப்பைமேட்டிலும் விழும். அது கூட அந்த இலையின் விதியை பொறுத்தது. அந்த விதியை எழுதி வைத்தவன் இறைவன். இப்படி காய்ந்த இலைக்கு கூட இறைவனின் அருள் வேண்டும் என்றால், வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவனின் அருட்பார்வையும் ஆசியும் நிச்சயம் வேண்டும்.
தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வணங்கினால், நம் கவலையை அவர் சுமந்து நமக்கு நிம்மதியை தருவார். பிட்டுக்கு மண் சுமந்தார் சிவபெருமான். உலகமக்களை எந்நேரமும் கண்காணித்து, “பக்தர்களின் கஷ்டத்தை போக்க நான் இருக்கிறேன்“ என்று தன் பக்தர்களுக்கு நம்பிக்கை தரவே இறைவனின் செயல்கள் இருக்கிறது.
பாண்டுரங்கநாதருக்கு விட்டல் என்று பெயர் வந்த காரணம்
பண்டரிபுரத்தில் ஜத்வாமுனிவர் – சாத்யகி என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் ஹரிதாசர். அவர் தன் மனதில் எது படுகிறதோ அதையே செய்வார். கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதையே நம்ப மாட்டார். அதுபோல யாருடைய பேச்சையும் கேட்க மாட்டார். இப்படி இருந்தவர் ஒருநாள் இறைவனின் மேல் பக்தி கொண்டார். இதை கண்ட அவருடைய பெற்றோருக்கு ஆச்சரியம்.. தன் மகனின் வாழ்வை நல்லவிதத்தில் மாற்றிய பாண்டுரங்கனிடம் ஆனந்த கண்ணீரில் நன்றி செலுத்தினார்கள் ஹரிதாசரின் பெற்றோர்கள்.
ஹரிதாசர் எந்நேரமும், “ஹர ராம ஹர கிருஷ்ணா என்று இறைவனுடைய பெயரை அதிக சத்தத்துடன் உச்சரித்துகொண்டும், கீர்த்தனம் பாடிகொண்டும் இருப்பார்.
ஹரிதாசரின் பக்தியை கண்டு ஸ்ரீமந் நாராயணனே மகிழ்ந்து ஹரிதாசரை தேடி வந்தார்.
அன்று நல்ல மழை.
தெருவெல்லாம் சதசதவென இருந்தது. அப்போது ஹரிதாஸரின் வீட்டு வாசலில் ஒரு தெய்வீக குரல்.
“ஹரி. நீ வணங்கும் பாண்டுரங்கன் வந்திருக்கிறேன்.”
ஆம். வந்தது ஸ்ரீமந் நாராயணன்.
“அப்படியா. இருக்கட்டும். நான் என் தாய் தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டு இருக்கிறேன். அதனால் நீங்கள் சற்று காத்திருங்கள். மழை பெய்கிறது. நிற்க முடியாமல் கஷ்டபடாதீர்கள். அருகே இருக்கும் செங்கல் மேல் நில்லுங்கள். வந்து விடுகிறேன்.” என்றார் வீட்டின் உள்ளே இருந்தபடி ஹரிதாஸர்.
ஆசிரியர் மாணவனிடம், “இருக்கையின் மேல் ஏறி நில்.” என்று சொன்னால் மாணவன் நிற்பானே அதுபோல, ஸ்ரீபாண்டுரங்கனும் தன் பக்தரின் அன்பு கட்டளையை ஏற்று செங்கல் மேல் ஏறி நின்றார். அதனால்தான் பாண்டுரங்கனுக்கு “விட்டல்” என்ற பெயரும் வந்தது. “விட்டல்” என்றால் செங்கல் என்ற பொருள் உண்டு.
தன் பக்தனுக்காக செங்கல்மேல் ஏறிநின்று விட்டல் என்ற பெயரும் பெற்றார் இதன் பிறகுதான் பாண்டுரங்கநாதரை விட்டலர் என்று பக்தர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். ஹரிதாசரின் புகழும் மேலும் பரவியது. பாண்டுரங்கநாதர், தன் பக்தர்களின் அன்புக்கு கட்டுபட்டு, அவர்களின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றி அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கி தருவார் பாண்டுரங்கநாதர்.
வீர சிவாஜி உருவத்தில் வந்த பாண்டுரங்கநாதர்
துக்காராம் என்பவரை அறியாதவர் யாரும் இருக்க முடியாது. ஸ்ரீபாண்டுரங்கனின் சிறந்த பக்தர்களில் ஒருவர். இவர் ஒருநாள் ஸ்ரீபாண்டுரங்கனைப் நினைத்து பாடிக்கொண்டே வீதி வீதியாக வந்துக் கொண்டிருந்தார். இவரின் குரலை கேட்ட மகாராஷ்ட்ர மன்னரான சத்ரபதி சிவாஜி ஆனந்தம் அடைந்தார். “இது ஸ்ரீபாண்டுரங்கனின் பக்தன் குரலா? அல்லது அந்த ஸ்ரீபாண்டுரங்கனே வந்து பாடுகிறானா? என்ன இனிமையான குரல்.” என்று மெய் மறந்து மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சென்று ரசிக்க நினைத்தார். இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட மன்னரின் எதிரிகள், அந்த இடத்திலேயே சத்ரபதி சிவாஜியை கொல்ல திட்டம் போட்டார்கள். பகைவரின் சூழ்ச்சி அறியாமல் இரவு பொழுது என்பதையே மறந்து ஆனந்தமாக கேட்டு கொண்டு இருந்தார் வீர சிவாஜி். ஆனால் ஸ்ரீபாண்டு ரங்கனின் சக்தி பெற்ற துக்காராம், சத்ரபதியை சத்ருக்கள் நெருங்குவதை அறிந்து பாடல்களைப் பாடியப்படியே, அரசரை காக்கும்படி மனதுக்குள் ஸ்ரீபாண்டுரங்கனை வேண்டினார். அந்த நிமிடமே ஸ்ரீபாண்டுரங்கன், சத்ரபதி சிவாஜியின் உருவில் எதிரிகளுக்கு தோன்றி குதிரை மீதேறிச் சென்றார். சத்ரபதி சிவாஜிதான் குதிரையில் சென்றுக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துவிட்ட எதிரிகள் ஸ்ரீபாண்டுரங்கனை பின் தொடர்ந்து போய்விட்டார்கள்.
மறுநாள் துக்காராமிடம் இருந்து விடை பெற்று தன் அரண்மனைக்கு திரும்பினார் சிவாஜி. அப்போது காவலர்கள், “நேற்று நீங்கள் எதிரிகளை தனி நபராக நின்று வெட்டி வீழ்த்தியதை கண்டு எல்லோரும் பெருமையாக பேசுகிறார்கள்.” என்றார்கள். இதை கேட்ட சத்ரபதி சிவாஜி, “ஸ்ரீபாண்டுரங்கனின் பெருமைகளை கேட்டுகொண்டு துக்காராமின் அருகில்தானே இரவு முழுவதும் இருந்தோம். இந்த அதிசயங்களை நிகழ்த்தியது ஸ்ரீபாண்டுரங்கனே.” என்பதை உணர்ந்தார். “பாண்டுரங்க விட்டலா பண்டரிநாத விட்டலா ஹர ஹர விட்டல பாண்டுரங்கா பாண்டுரங்கா பண்டரிநாதா, ஜய ஜய விட்டல பாண்டுரங்கா!” என்று பாண்டுரங்கநாதரின் நாமத்தை உச்சரித்தால், அவர் நம்மை பாரமாக நினைக்காமல் தன் மனதில் தாங்கி, நல்வாழ்வை தர காத்திருக்கிறார்.
நம் கஷ்டத்தை பாண்டுரங்கநாதரிடம் ஒப்படைப்போம் – அவர் அதை சுமந்து நமக்கு சுகபோகமான வாழ்வை தந்தருள்வார்
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserve