Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

தன் பக்தனுக்காக விஷத்தை ஏற்ற ஹயக்ரீவர்

நிரஞ்சனா  

இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது. சிந்தனையே ஒரு மனிதனை தெளிவாக்குகிறது. அந்த சிந்தனை நல்ல சிந்தனையாக இருந்தால் நன்மைகள் தேடி வரும். அத்துடன் மிகபெரிய உண்மையும் மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த முடியும். படிக்க படிக்க அறிவு வேலை செய்யும். புதிய புதிய தகவல்களை கற்றுகொள்ளமுடியும். அதுபோலதான், இறைவனை வழிபட வழிபட வாழ்க்கையில் எதிலும் வெற்றி பெற முடியும். அனுபவம்தான் இறைவன் கற்று தருகிற பாடம். அப்படி இறைவனால் பாடம் கற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதுபோல, இறைவனின் அன்பை பெற்றவர்களும் எத்தனையோ பேர். இறைவனின் அன்பை பெறுவதற்கு முன்னதாக, அவன் தரும் சோதனைகளை தாங்கிதான் அன்பை பெற்றுள்ளார்கள்.

ஆனாலும் சில சமயங்களில் தன் உண்மையான பக்தனின் பக்தியை உலகம் அறிய செய்ய இறைவனும் சில சோதனைகளை ஏற்கிறார். அந்த உண்மையான பக்தர்களில் ஒருவர் மகான் ஸ்ரீவாதிராஜர். இவருக்கு அர்ச்சகர்கள் மூலமாக சோதனைகளை தந்தாலும், ஸ்ரீவாதிராஜரின் உயிரை காப்பாற்றி, அந்த சோதனையை ஸ்ரீமந் நாராயணனும் ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ வாதிராஜர்

மத்வாச்சாரியர் ஸ்தாபித்த எட்டு மடங்களில் ஒரு மடத்தின் தலைவராக ஸ்ரீ வாதிராஜர் இருந்தார். அவர் சிறந்த பெருமாள் பக்தர். பெருமாளை ஹயக்ரீவர் அவதாரத்தில் தரிசிக்க ஆவல் கொண்டார். இதனால் தினமும் ஹயக்ரீவரை மனதால் நினைத்து தியானம் செய்வார். பெருமாளுக்கு தன் கைபட நிவேதனம் செய்து, அதை ஆலயத்திற்கு எடுத்து வருவார். பெருமாள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்க கூடாது என்ற காரணத்தால், ஆலயத்தின் கருவறைக்குள் சென்றதும் கருவறையை மூடி விடுவார். இதை பார்க்கும் மற்ற அர்ச்சகர்களுக்கு கோபமாக இருக்கும்.

“நாங்கள் என்ன திருஷ்டியா வைத்துவிடுவோம்.? அல்லது பிடுங்கி தின்று விடுவோமா.” என்று கேட்பார்கள். ஆனால் அந்த மகான் எதற்கும் பதில் சொல்லாமல், மௌனமாக இருப்பார். கேள்விக்கு பதில் சொன்னால், அந்த பதிலில் இருந்து ஒரு கேள்வி பிறக்கும். எப்படி நெருப்புக்கும், கடலுக்கும் முடிவில்லையோ, அதேபோல கேள்வி கேட்க வேண்டும் என்று முடிவெடுத்தால், எந்த கேள்விகளும் முடிவில்லா வானம் போன்றது என்பதை உணர்ந்துகொண்ட மகான் ஆகையால், யாருடைய கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் மெளனமாகவே இருப்பார்.

அமைதியாக இருப்பவர்தான் உலகை ஆளத் தகுந்தவர் என்பதற்கு எடுத்துக்காட்டு ஸ்ரீவாதிராஜர். அவரின் அமைதியான குணம்தான் பெருமாளுக்கு இஷ்டமாகிவிட்டது.

ஸ்ரீவாதிராஜரின் விருப்பம்போல் அவருக்கு ஹயக்ரீவர் அவதாரமாக காட்சி தர வேண்டும் என்று பெருமாளும் விரும்பினார். அத்துடன் இவரின் பக்தியை உலகம் போற்ற வேண்டும் என்றும் நினைத்தார்.

ஸ்ரீவாதிராஜர், பெருமாளுக்கு நிவேதனம் கொடுக்கும் விதமே விசித்திரமாக இருக்கும்.   கருவறைக்குள் சென்று கதவை சாத்திவிட்டு, கண் மூடி நிவேதனத்தை தன் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு தியானம் செய்வார். அந்த தியனத்தின்போது  ஹயக்ரீவரே நேரடியாக வந்து சாப்பிடுவது போல் தியானம் செய்வார்.  

நம் ஆழ் மனம் எதை உறுதியுடன் நினைத்தாலும் அது ஒருநாள் நிச்சயம் நடக்கும் என்பதற்கேற்ப, குதிரை உருவம்கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவர், வாதிராஜர் பக்தியுடன் தந்திடும் நிவேதனத்தை சாப்பிட்டு, அதில் கொஞ்சம் மிச்சமும் வைத்து விட்டு செல்வார். பிறகு ஸ்ரீவாதிராஜர், கோயில் கருவறையை திறந்து வந்து, கருவறைக்கு வெளியே காத்திருக்கும் அர்ச்சகர்களுக்கு கொடுப்பார்.

“என்ன சுவாமி, இன்றும் உன் இறைவன் நிவேதனத்தை சாப்பிட்டாரா?” என்று கிண்டலாக கேட்பார்கள் அர்ச்சகர்கள். “ஆமாம். நம் ஸ்ரீஹயக்ரீவர், நிவேதனத்தை ருசித்து சாப்பிட்டார்.” என்பார். இதுவே பல மாதங்கள் தொடர்ந்தது. ஒருநாள் வழக்கம்போல ஸ்ரீவாதிராஜர், நிவேதனத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தின் கருவறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

அன்றைய தினம் பெருமாளுக்கு என்ன பசியோ அல்லது நிவேதனத்தின் ருசியோ தெரியவில்லை. ஹயக்ரீவர் அந்த நிவேதனத்தை மிச்சம் வைக்காமல் முழுவதுமாக சாப்பிட்டுவிட்டார்.

“என்ன இது… பெருமாள் இன்று பிரசாதத்தை கொஞ்சம் கூட மற்றவர்களுக்கு தருவதற்கு மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டாரே…” என்று யோசித்தபடி கருவறை கதவை  திறந்து வெளியே வந்து, இன்று நமக்கு பெருமாள் நிவேதனத்தை மிச்சம் தராமல் முழுவதுமாக சாப்பிட்டுவிட்டார்.” என்று அர்ச்சகர்களிடம் சொன்னார்.

அதிர்ச்சியடைந்த அர்ச்சகர்கள்

 அந்த மகான் சொன்னதை காதில் வாங்காமல் அர்ச்சகர்கள் அதிர்ச்சியாக ஸ்ரீவாதிராஜரையே பார்த்து நின்றார்கள்.

“இன்று உங்களுக்கெல்லாம் என்ன ஆனது? என்னை அதிர்ச்சியுடன் பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டார் ஸ்ரீவாதிராஜர்.

 “நீ……நீ… சாகவில்லையா?” என்றார் தயங்கியபடி அர்ச்சகர்களின் ஒருவர்.

“என்ன சொல்கிறீர்கள்.? செத்தவன் எப்படி உங்கள் முன் நின்று பேச முடியும்.? அதுசரி… நான் இறந்ததாக யார் சொன்னார்கள்.?” என்றார் அந்த மகான்.

“முதலில் எங்களை நீ மன்னித்து விடு. தினமும் நிவேதனத்தை பெருமாள் சாப்பிடுவதாக சொல்லி, நீயே அதை சாப்பிடுகிறாய் என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம். அதனால்…….” சொல்ல தயங்கினார்கள் அர்ச்சகர்கள்.

“அதனால் என்ன? தைரியமாக சொல்லுங்கள்.” என்றார் ஸ்ரீவாதிராஜர்.

“இன்று நீ தயாரித்த நிவேதனத்தில் விஷத்தை கலந்துவிட்டோம்.” என்றார் அந்த அர்ச்சகர்.

“அய்யோ… அபச்சாரம் செய்துவிட்டீர்களே. பெருமாள் சாப்பிடும் உணவில் விஷமா? பாவிகளே… வேதம் கற்றவர்களா நீங்கள்?. பெருமாளுக்கு விஷம் வைத்துவிட்டீர்களே“ என்று அலறிக் கொண்டே கருவறைக்குள் வேகமாக சென்றார். ஸ்ரீவாதிராஜரை பின் தொடர்ந்து விஷம் வைத்த அர்ச்சகர்களும் கருவறைக்குள் வந்து பார்த்தார்கள். அங்கே பெருமாளின் சிலையில் விஷம் ஏறி நீல நிறத்தில் காட்சி தந்தது.

“நாராயணா…எனக்கு இவர்கள் கொடுத்த விஷத்தை தெரியாமல் நான் உனக்கு கொடுத்துவிட்டு நானும் பாவியானேன். என் கைகளால் உனக்கு விஷம் தந்ததற்கு எனக்கு தண்டனை தந்து விடு” என்று பெருமாளின் சிலையில் தன் தலையை முட்டி முட்டி கதறி அழுதார்.  

அப்போது ஒரு பேரோளி அந்த சிலையில் தோன்றியது.

“வாதிராஜா…கலங்காதே. நீ எம்மை ஹயக்ரீவர் உருவத்தில் தரிசிக்க விரும்பினாய். நன்றாக பார். நீ தியானித்த ஹயக்ரீவராக வந்துள்ளேன்.” என்ற பெருமாள், ஸ்ரீஹயக்ரீவராக காட்சி தந்தார்.

ஆனாலும் வாதிராஜர், மகிழ்ச்சியடையாமல் சிறு குழந்தையைபோல அழுதபடி இருந்தார். தமக்கு நிவேதியத்தில் தெரியாமல் விஷம் தந்துவிட்டதால் தமது நிறம் நீலமாக மாறிவிட்டதை எண்ணி இன்னும் வாதிராஜர் வேதனை அடைவதை உணர்ந்த பெருமாள், நம்பிக்கையான பக்தி எதையும் சாதிக்கும்.. உன் உறுதியான பக்திதான் இன்று இவர்களுக்கும் என்னுடைய தரிசனம் காணகிடைத்தது. இதனால் உன் புகழும் இந்த உலகம் இருக்கும்வரை நிலைத்து இருக்கும்.” என்றார் ஹயக்ரீவர்.   

இந்த சம்பவத்தையெல்லாம் கண்கூடாக பார்த்த அர்ச்சகர்கள் ஸ்ரீவாதிராஜரிடம் மன்னிப்பு கேட்டு, மகான் என போற்றினார்கள். ஸ்ரீவாதிராஜர் என்ற அந்த மகானின் புகழ் பரவியது. இறைவனை நினைத்தால் அவர்களின் வாழ்க்கை ஏற்றமாக இருக்கும் என்பதை மகான் ஸ்ரீவாதிராஜரின் வாழ்வில் நடந்த இந்த அற்புத சம்பவம் ஒரு நல்ல எடுத்துக்காட்டு.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Jun 22 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »