Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

மதியை வென்ற விதி

Written by Niranjana

எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் என்பார்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல இறைவனுக்கும் இந்த வார்த்தை பொருந்தும். ஒருசமயம் பார்வதிதேவியும், சிவபெருமானும் பூலோகத்திற்கு வந்தார்கள். பல இடங்களை சுற்றிபார்த்துகொண்டே வரும் போது, இமயமலை பகுதிக்கு வந்தார்கள். அந்த இடத்தை கண்ட சக்திதேவி ஆச்சரியப்பட்டாள்.

“இமயமலையின் இந்த பகுதி மிகவும் ரம்யமாக இருக்கிறது. இங்கே நமக்கென ஒரு அரண்மனையை உருவாக்கி அந்த அரண்மனையில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்” என்றாள்.

அதற்கு இறைவன், “உன் ஆசையில் ஒன்றும் தவறில்லை. ஆனால் விரும்புகிற இடத்திலெல்லாம் நாம் அரண்மனை கட்டி வாழ வேண்டும் என்று எண்ணுவது சரியில்லை.” என்றார் சிவபெருமான்.

“நான் பர்வதராஜ புத்திரி. ராஜவம்சத்தில் பிறந்தவள். நான் நினைத்தால் இந்த பூலோகம் முழுவதையும்  என் அரண்மனையாக மாற்றிவிடுவேன். அப்படி இருக்கும்போது இந்த இடத்தில் ஒரு அரண்மனையை உருவாக்க என்னால் இயலாதா?” என்று கோபம் அடைந்தாள் பராசக்தி.

“உலக மாதாவாகிய உனக்கு, நான் சொல்லியா தெரிய வேண்டும்.? யார் யாருக்கு எதுவோ, அதுவே அவர்களுக்கு அமையும். நமக்கு கைலாயம் போதும். நீ இராஜபுத்திரியாக இருந்தாலும்  அரண்மனை வாழ்க்கை நமக்கு இல்லை.” என்றார் சிவபெருமான்.

“அரண்மனையில் பிறந்த எனக்கா அரண்மனை வாழ்க்கை இல்லை?. விதியை மாற்றி காட்டுகிறேன் பாருங்கள்.” என்று கூறிய லோகமாதா, தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து எண்ணற்ற பொன்நகைகளாலும் விலை உயர்ந்த ரத்தினங்களாலும் ஒரு அரண்மனையை கட்டினார்.

அப்போது சிவபெருமான், பார்வதிதேவியை அழைத்து, “அரண்மனையை கட்டினாய் எல்லாம் சரி. ஆனால் இமயமலையில் அரண்மனை கட்டப்பட்ட பகுதி சனிஸ்வர பகவானுக்கு உரியது. நாம் அவரிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். அனுமதி வாங்கினாயா?” எனக் கேட்டார்.

“உலகமே உங்களுடையதுதான். அப்படி இருக்கும்போது யாருடைய அனுமதியையும் நாம் பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்றாள் சக்திதேவி்.

“பிள்ளையை பெற்ற பிறகு தாயே ஆனாலும், அவள் உண்ணுகிற உணவு பிள்ளையின் பசியை போக்குமா?. உலகத்தை உருவாக்கியது நாம் என்றாலும், நவகிரகங்களுக்குரிய பொறுப்பு தந்தாகிவிட்டது. ஆகவே அங்கே நல்லாட்சி நடத்தும் சனிஸ்வரனின் அனுமதியை பெற்றுதான் ஆக வேண்டும். நமக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது”. என்ற சிவபெருமானின் உத்தரவை ஏற்றுக்கொண்டாள் பராசக்தி.

“உங்கள் சொல்படியே கேட்கிறேன். ஒருவேலை சனிபகவான் அனுமதி தரவில்லை என்றால் ஒரு நிமிடம் கூட இந்த அரண்மனையை வைத்திருக்க மாட்டேன். அரண்மனையை இடித்து விடுகிறேன். சனிஸ்வரரிடம் நீங்கள் பேசி பாருங்கள். அவர் அனுமதி தரவில்லை என்றால், உங்கள் உடுக்கையால் ஒலி எழுப்புங்கள். அந்த ஒலியின் சத்தத்தை கேட்டவுடன் இந்த அரண்மனையை இடித்து விடுகிறேன்.” என்றாள் பராசக்தி.

அதன்படி சிவபெருமான், சனிஸ்வர பகவானிடம் சென்று, “இமயமலையில் பராசக்தி அரண்மனை கட்டி உள்ளாள். அந்த பகுதி உன் அதிகாரத்தின் கீழ் வருகிறது. ஆகவே உன் அனுமதி வேண்டும்.” என்றார்.

“அய்யனே, உலகமே நீங்கள்தான். இயற்கையின் ஒவ்வொரு அசைவும் உங்கள் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. அப்படி இருக்கும் போது நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பது முறையா? நான் அந்த இடத்தில் ஆட்சி செய்கிற பொறுப்பை தந்தவரே தாங்கள்தானே. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அய்யனே.” என்றார் சனிஸ்வரர்.

“நல்லது. உன் அனுமதி கிடைத்துவிட்டது என்பதை அறிந்தால் பார்வதியின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது” என்றார் பரமேஸ்வரர்.

“இறைவா… ஒரு விண்ணப்பம்.?” என்றார் சனி பகவான்.

“கேள்” என்றார் ஈசன்.

“உங்கள் திருநடனத்தை காண வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். அருள் செய்யுங்கள் அரனே.” என்றார் சனி பகவான்.

 அடுத்து என்ன நடக்கும் என அறிந்த ஈசன் புன்னகையுடன், “இதோ நம் திருநடனத்தை காண்பாயாக” என்று சொல்லி நடனம் ஆடினார். அவரின் நடன வேகத்தில் சிவபெருமானின் கையில் இருந்த உடுக்கையும் சேர்ந்து அசைந்ததால் உடுக்கை ஒலி எழுந்தது. அந்த உடுக்கை ஒலி முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் கேட்டது. அவர்களுக்கே கேட்டபோது, பார்வதியின் காதுக்கு அது எட்டாதா என்ன?

உடுக்கை ஒசை கேட்டதால், சனிஸ்வரன் அனுமதி தரவில்லை என்பதுதானே அர்த்தம் என்று நினைத்துக்கொண்ட சக்திதேவி, தாம் ஆசை ஆசையாக கட்டிய மாளிகையை இடித்து தள்ளினாள்.

சிறிது நேரம் கழித்து சிவபெருமான் சக்திதேவியிடம், “நமக்கு இந்த இடத்தில் அரண்மனை கட்ட சனிஸ்வரன் அனுமதி தந்துவிட்டான்.” என்று கூறி கொண்டே பார்த்தார்.

ஆனால் அரண்மனை இருந்த சுவடே தெரியாமல் இருந்தது. சனிஸ்வரன் என் நடனத்தை காண ஆசைபட்டதால் உடுக்கை ஒசை எழுப்பி நடனம் ஆடியதை நீ தவறாக புரிந்தகொண்டாயா பார்வதி.? நான்தான் முன்பே சொன்னேனே, அனுபவிக்க வேண்டும் என விதி இருந்தால்தான் எதையும் அனுபவிக்க முடியும்.” என்றார் புன்னகையுடன்.

“என் விருப்பபடி அரண்மனை கட்டினேன். உங்கள் விருப்பபடி அதை இல்லாமல் செய்து விட்டீர்கள். உங்கள் திருவிளையாடல் எனக்கு தெரியாதா?” என்று சிரித்த பராசக்தி,

சனி பகவான் பார்வதிதேவிக்கு அனுமதி கொடுத்திருந்தாலும், விதி வேறு விதமாக இருந்ததால் சனிபகவான் பார்வதிதேவியை வருத்தமடைய செய்துவிட்டார்.

தெய்வமே ஆனாலும் விதி வழியே மதி செல்லும் என்பதை சர்வேஸ்வரன் தன் மூலமாக ஒரு சம்பவத்தை நடத்தி காட்டினான். ஆகவே நடக்க இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் இறைவனை வணங்கினால் பாதகங்கள் குறைந்து நன்மை மேலோங்கும்.

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

Guru Peyarchi Palan 2014-2015  CLICK HERE

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »