ஆயுளையும் ஐஸ்வரியத்தையும் அள்ளி தரும் அபிராமி அந்தாதி
நிரஞ்சனா
நமது எந்த ஒரு செயலின் வெற்றிக்கும் இறைவனின் அருளாசி வேண்டும். மரத்தில் பழம் இருக்கும். அந்த பழத்தை மற்றவர்கள் பறிக்க தவறினாலும் அதற்குரிய காலத்தில் அந்த பழம் தானாகவே மரத்தைவிட்டு தரையில் விழும். அதுபோல ஒருவருக்கு கிடைக்க வேண்டிய பொருள் – அந்தஸ்து போன்றவை இறைவன் வகுத்த நேரப்படிதான் அந்தந்த நபர்களுக்கு வந்து சேரும். இறைவன் காட்டும் வழி சற்று கரடு முரடாக இருந்தாலும், அது முடியும் நல்வழி பாதை கால்களுக்கு மட்டும் பஞ்சு போல் இல்லாமல், மனதிற்கும் ஆனந்தத்தை தரும்.
நேரம் கூடிவந்தால் அரசனுக்கு கூட நாம் நண்பனாகிவிடலாம் என்பார்கள் பெரியோர்கள். சரி அதிர்ஷ்ட நேரத்தை ஒரு சாதாரண மனிதனால் விரைவில் கொண்டு வரமுடியுமா? என்று கேட்லாம். முடியும். நம்பிக்கையுடன் இறைவனை வணங்கினால் நல்ல நேரத்தை விரைவில் இறைவன் தருவார்.
பைத்தியகாரன் என்றும், எந்த வேலையும் செய்யாமல் எந்நேரமும் இறைவனே கதி என்று இருக்கும் சோம்பேறி என்றும், பார்க்கும் எல்லா பெண்களையும் அன்னை அபிராமி அம்பிகை என்று நினைத்து போற்றி, பெரியோர் சிறியோர் என்று வயது வித்தியாசம் கருதாமல் அந்த பெண்களின் காலில் விழுந்து வணங்குவதை பார்த்து அவனை பித்தன் என்றும் ஊர் மக்கள் தங்கள் வாய்க்கு வந்ததை பேசினார்கள்.
யோசிக்காமல் வாய்க்கு வந்ததை பேசுகிறவர்கள்தானே பைத்தியகாரர்கள்.? அதனால் தன்னை பைத்தியகாரன் என்று சொன்ன மக்களின் அறியாமையை கண்டு அந்த அம்பிகையின் பக்தன் வேதனைபட்டு, அவர்களின் மேன்மைகாகவும் அம்பிகையிடம் வேண்டினான். ஆம். மகான்களின் குணம் அதுதான். அவர்கள் வேண்டுதல் யாவும் மக்களின் நன்மைக்கே. யார் அந்த மகான்? என்பதை தெரிந்துக் கொள்ள வாருங்கள் திருக்கடையூருக்கு பயணிப்போம். அதற்கு முன் ஒரு புராண சம்பவத்தையும் பார்ப்போம்.
அமிர்த கடேஸ்வரர் தோன்றிய கதை
தேவர்களும் – அசுரர்களும் அமுதத்தை கடைந்தெடுத்து, அதை ஒரு சிறிய குடத்தில் அடைத்தார்கள். சிவபெருமானிடம் இதனை தந்தால், அதை சரி சமமாக பங்கு பிரித்து தருவார் என்ற எண்ணத்தில் தேவர்களும் – அசுரர்களும் வந்துக் கொண்டு இருந்தார்கள். வரும் வழியில் வில்வ வனத்தில் அந்த அமிர்த குடத்தை வைத்துவிட்டு அசுரர்களும், தேவர்களும் ஒரு குளத்தில் நீராடிவிட்டு வில்வவனத்தில் வைத்திருந்த அமிர்த குடத்தை எடுக்கும் போது அது கைதவறி விழந்தது. இதனால் அந்த குடத்தில் இருந்த அமிர்தத்தில் கொஞ்சம் பூமியில் கொட்டிவிட்டது.
“என்ன இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே?” என்று தேவர்கள் மனகுழப்பத்தில் இருந்தபோது, பூமியில் கொட்டிய அமி்ர்தம், அந்த வில்வவனதில் ஒரு வில்வ மரத்தின் அடியில் சிவலிங்கமாக தோன்றியது. இதனால் அந்த சிவலிங்கத்தை அமிர்த கடேஸ்வரர் என்று போற்றி வணங்கினார்கள்.
தேவர்களுக்கும் – அசுரர்களுக்கும் அந்த அமிர்தத்தை பிரித்து தரும் பொறுப்பு மகாவிஷ்ணுவிடம் தரப்பட்டது. அந்த அமிர்தத்தை தருவதற்கு முன்னதாக, சக்திதேவியை வணங்கவேண்டும் என்று எண்ணி, தாம் அணிந்திருந்த தங்க ஆபாரணங்களை கழற்றி வைத்து, அந்த ஆபாரணங்களை சக்திதேவியாக பாவித்து பூஜைசெய்தார். இதனால் அம்பாள் அந்த ஆபாரணத்தில் தோன்றினாள். அம்பாள், அபிராமி என்று திருநாமம் பெற்றாள்.
ஆயுளையும் ஐஸ்வரியத்தையும் தரும் திருக்கடையூர்
ஆயுளையும் ஐஸ்வரியத்தையும் தரும் ஆற்றல் அந்த அமிர்தத்திற்கு இருந்த காரணத்தால், தேவர்களும் – அசுரர்களும் அதனை பெற போரடினார்கள். அந்த அமிர்தமே சிவலிங்கமாக சிவபெருமான், தன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அந்த அமிர்த கடேஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு அளவில்லா சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மார்க்கண்டேயரை காப்பாற்றிய சிவ-சக்தி
எமதர்மராஜன் மார்கண்டயனை துரத்தி, பாசக்கயிற்றை வீசியபோது, அந்த தருணத்தில் மார்கண்டயன் சிவலிங்கத்தை கட்டிபிடித்து கொண்டான். அப்போது எமனின் பாசக்கயிறு சிவலிங்கத்தின் மேல் பட்டது. இதனால் எமனின் பாசக் கயிறு, எமனுக்கே மோசக் கயிறானது.
கோபம் அடைந்த சக்திதேவி, சிவலிங்கத்தில் தோன்றினாள். இதனால் சிவபெருமான், எமனை இடது காலால் எட்டி உதைத்தார். காரணம், ஈசனின் இடது பாகம் சக்திதேவி அல்லவா. சிவலிங்கமாக வீற்றிருக்கும் தன் கணவன் மீது விழந்த பாசக் கயிறு, தன் மீது விழுந்ததாகவே கருதினாள் அம்பிகை. இதனால் தன் மனைவியின் மனதை வேதனை அடைய செய்த எமனை, அம்பாளுக்குரிய தனது இடது பகுதியில் காலால் எமனை எட்டி உதைத்தார் இறைவன் மார்கண்டயனை காப்பாற்றிய சிவ-சக்தி, என்றேன்றும் பக்தர்களை காக்க காத்திருக்கிறார்கள்.
அபிராமி பட்டர்
இப்படி பல அற்புதங்களை நிகழ்ந்த இடம் திருக்கடையூர். இவ்வூரில் பிறந்தவர்தான் அபிராமிபட்டார். இவரைதான் பைத்தியகாரன் என்று இவ்வூர் மக்கள் பேசினார்கள்.
அபிராமிபட்டர் சிறந்த தேவி உபாசகர். பார்க்கும் அனைத்து பெண்களையும் அபிராமியின் அம்சமாகவே கருதுவார். எப்போதும் அபிராமி அன்னையையே தியானித்து கொண்டு இருப்பார். ஒருநாள் இவரின் பக்தியை சோதிக்கவும், இவரின் பெறுமையை உலகுக்கு உணர்த்தவும் இறைவன் விரும்பினார்.
ஒருநாள் சரபோஜி மன்னர், திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரரை தரிசிக்க திருக்கடையூர் கோயிலுக்கு தன் பரிவாரங்களுடன் வந்தார். அரசர் வந்தது கூட தெரியாமல், அம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் தியானத்தில் அமர்ந்திருந்தார்.
இதை அரசர் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அரசருடன் வந்தவர்கள் “அரசே உங்களை மதிக்காமல் தியானத்தில் இருப்பது போல் இவன் நடிக்கிறான். உண்மையில் தியானத்தில் இருந்தால் அதிரும் மேல தாளத்தின் ஒசையை கேட்டு தியானம் கலைந்திருக்குமே. ஆனால் இவனின் தியானம் கலையவில்லை என்றால் என்ன காரணம்? நடிப்பு அரசே.” என்றார்கள்.
“யார் இவர்.?” என்றார் அரசர்.
“இவன் பெயர் சுப்பிரமணியன். எப்போதும் இங்குதான் இருப்பான். கோயிலுக்கு வரும் பெண்களின் காலில் விழுந்து நீங்கள்தான் என் அபிராமி அன்னை என்பான். இவனின் பைத்தியகாரதனத்தை பார்த்து பலர் பயப்படுகிறார்கள். தன்னை அபிராமியின் உபாசகன் என்கிறான். கொஞசம் ஜோதிடமும் தெரிந்தவன்.” என்றார்கள்.
இதை கேட்ட அரசர் சுப்பிரமணியன் என்கிற அபிராமிபட்டரை சோதிக்க எண்ணினார். அபிராமிபட்டரின் அருகில் வந்தார். “இன்று என்ன திதி” என்று கேட்டார் மன்னர்.
தியானத்தில் இருந்த அபிராமிபட்டர், “இன்று பவுர்ணமி.” என்றார். இதை கேட்ட அரசர், “நன்றாக யோசித்து சொல்” என்றார் மன்னர். தம்மை தியானத்தில் யாரோ குறுகிடுவதாக எண்ணிய அபிராமிபட்டர், “பவுர்ணமிதான் போடா” என்றார். இன்று அமாவாசை திதி. ஆனால் இவனோ இன்று பவுர்ணமி திதி என்று தவறாக சொல்கிறான், அதிலும் மன்னர் என்றும் பாராமல் அவமரியாதையாக பேசுகிறானே.” என்று பெரும் கோபம் அடைந்தார் மன்னர்.
“சரி நீ கூறுவது போல் இன்று பவுர்ணமி என்றால், இன்றிரவு முழு நிலவு தோன்றுகிறதா என்று பார்ப்போம். அப்படி நிலவு தோன்றவில்லை என்றால் உனக்கு மரண தண்டனை.” என்று கூறிவிட்டு கோபமாக சென்றுவிட்டார் மன்னர்.
இதனால் திடுக்கிட்ட கோயிலில் இருந்த மற்ற பட்டர்கள், தியானத்தில் இருந்த அபிராமிபட்டரை தட்டி தியானத்தை கலைத்தார்கள். அபிராமிபட்டர் கண் விழித்து பார்த்தார். மன்னர் வந்ததையும், அமாவாசை திதியாகிய இன்று பவுர்ணமி என்று தவறாக அபிராமிபட்டர் சொன்னது மட்டுமல்லாமல், மன்னரை மரியாதை குறைவாக பேசியதையும், இன்று இரவு வானில் நிலவு தோன்றவில்லை என்றால் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதையும் சொன்னார்கள்.
இவற்றை கேட்ட அபிராமிபட்டர் பயந்துவிடவில்லை. “நீங்கள் சொன்னது எதுவும் நடந்ததாக எனக்கு நினைவில்லை. நான் பேசிய வார்த்தைகள் உண்மையென்றால், அவை நான் பேசியதல்ல. என் நாவில் வீற்றிருந்து அம்பாள் உரைத்தது. அம்பாள் பொய்யுரைக்க மாட்டாள். இன்று பவுர்ணமி நிலா தெரியும் என்று அம்பாள் சொல்லி இருக்கிறாள். அதுதான் நடக்கும்.” என்றார் அபிராமபட்டர்.
அமாவசை பவுர்ணமியாக மாறியது
அன்று மாலை பொழுது. வானத்தில் பவுர்ணமி நிலா வரவில்லை. இதனால் கோபம் அடைந்த அரசர், அபிராமிபட்டருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார். கோயிலின் அருகேயே ஒரு பெரிய குழியை வெட்டி, அந்த குழியில் விரகு கட்டைகரளை அள்ளி போட்டு தீ வைத்தார்கள். அத்துடன் நூறு கயிற்றை ஒரு பலகையில் கட்டி தொங்கவிட்டார்கள். அந்த பலகையின் மீது அபிராமிபட்டரை நிற்க வைத்தார்கள். அவர் அம்பாளை போற்றி அபிராமி அந்ததி பாட தொடங்கினார்.
“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்“ என்ற முதல் பாடலை பாடினார். அப்போது வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றவில்லை. இதனால் நூறு கயிறுகளில் ஒரு கயிற்றை அறுத்தார்கள் காவலர்கள். இப்படியே அபிராமபட்டர் 78 பாடல்களை பாட, ஒவ்வொரு கயிறாக அறுக்கப்பட்டது. இதனால் அபிராமிபட்டர் நின்றிருந்த பலகை பாரம் தாங்காமல் எந்த நிமிடமும் முற்றிறுமாக அறுந்து அபிராமபட்டருடன் நெருப்பு குளிக்குள் விழும் நிலையில் இருந்தது. அப்போது, 79-வது பாடலாக “விழிக்கே அருளுண்டு“ என்ற பாடலை பாடியதும், அபிராமி அம்பாள், பட்டருக்கு காட்சி தந்தாள்.
அத்துடன் தன் காதில் இருந்த ஒரு தோடை அம்பாள் கழற்றி வானில் வீசி எறிந்தாள். அந்த தோடு வானத்தில் முழு பவுர்ணமி நிலவாக பிரகாசித்தது. இதை கண்ட அபிராமிபட்டர் மகிழ்ச்சி அடைந்தார். அமாவாசை திதியில் பவுர்ணமி முழு நிலவை கண்ட அரசரும் – மக்களும் திகைத்து நின்றார்கள். அபிராமிபடடருக்கு அம்பாளின் அருள் நிறைந்து இருப்பதை நேரிலேயே கண்டு ஆனந்தப்பட்டார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர். சுப்பிரமணியன் என்று சொல்லி வந்தவர்கள், “அபிராமிபட்டர்” என்று போற்றினார்கள். வணங்கி நின்றார்கள்.
தொடர்ந்து மேலும் நூறு பாடல்களை பாடி, “ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை“ என்று நூற்பயன் வரை பாடி முடித்தார்.
அபிராமி அந்தாதி பாடல்களை தினமும் பாடினால், பல நன்மைகள் கிடைக்கும். அல்லது அமாவாசை அன்று இந்த பாடல்களை பாடினால் திருமணதடைவிலகும், குழந்தை பாக்கியம் ஏற்படும், நிரந்தர வேலை கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தோடு வாழும் நல்ல நிலை ஏற்படும். விரோதிகளின் சூழ்ச்சிகளில் இருந்து விடுபட்டு வாழ்நாள் முழுவதும் மகிழ்சியான வாழ்க்கை அமையும்.
ஆக மொத்தத்தில் திருக்கடையூர் சென்றால் என்ன பலனோ அந்த பலன்களை அபிராமபட்டர் இயற்றிய அபிராமி அந்தாதி பாடல்களை பாடினால் கிடைக்கும். அமிர்த கடேஸ்வரர் ஆசியும், அம்பாள் அபிராமியின் அருளாசியும், அத்துடன் அபிராமிபட்டர் என்கிற பெரும் மகானின் ஆசியும் பரிபூரணமாக கிடைத்து வாழ்வாங்கு வாழ்வார்கள்.
அபிராமி அந்தாதி பாடலை படிக்க கிளிக் செய்யவும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserve