செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு – பகுதி – 2
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்.
நிரஞ்சனா
பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியர் என்பவருக்கு பிறந்தவர் விஸ்ரவா. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் குபேரர். விஸ்ரவாவின் இரண்டாவது மனைவி அசுரகுலத்தில் பிறந்தவள். இவளுக்கு பிறந்த குழந்தைகள் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி மற்றும் சூர்ப்பணகை.
குபேரர் இலங்கைக்கு அதிபதியாக இருந்தார். குபேரரின் ஆடம்பர வாழ்க்கை இராவணனின் கண்களை உறுத்தியது.
“நாம் ஏன் இலங்கைக்கு அரசராகக் கூடாது.?” என்று இராவணனின் மனதில் ஆசை தோன்றியது. அண்ணன் குபேரனை போருக்கு அழைத்தான். ஆனால் இராவணனுக்கு அந்த போரில் தோல்விதான் கிடைத்தது. இருந்தாலும் விடவில்லை இராவணன். சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான். வரமும் பெற்றான். குபேரனை வீழ்த்தி இலங்கைக்கு அரசர் ஆனான் இராவணன். குபேரன், தன் செல்வம் முழுவதையும் இழந்தான். தன் சகோதரனே தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்டானே என வருத்தம் அடைந்தான். மன அமைதிக்காக சிவபெருமானை வேண்டி தவம் இருந்தான் குபேரன்.
குபேரனின் தவம் எண்ணற்ற ஆண்டுகள் நீடித்தது. இதனால் சிவபெருமான், பார்வதிதேவியோடு குபேரனுக்கு காட்சி தந்தார்.
தம்பியை போலவே அண்ணனும் இருந்தான். சிவபெருமானை வணங்க மறந்த குபேரன், பார்வதிதேவியின் அழகில் மயங்கினான். பார்வதிதேவி நம் மனைவியாக இருந்தால் எப்படி இருக்கும்? என்று விபரீதமாக எண்ணினான். குபேரனின் மன ஒட்டத்தை புரிந்துக் கொண்ட பார்வதிதேவி, “இந்த கண் தானே காமத்துடன் பார்த்தது. அந்த கண் சிதறி போகட்டும்” என்று சபித்தார் பார்வதிதேவி.
குபேரன் மனம் வருந்தி பார்வதிதேவியிடமும் சிவபெருமானிடமும் மன்னிப்பு கேட்டான். அறியாத பிள்ளை தெரியாமல் செய்துவிட்டது என்று எண்ணி குபேரனை மன்னித்தார்கள் சிவனும் பார்வதிதேவியும்.
ஆனால் அந்த சாபத்தின் காரணமாக குபேரனின் கண்கள் சின்னதாகிவிட்டது.
“உனக்கு என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்டார் இறைவன்.
“இராவணனால் செல்வம் அனைத்தையும் இழந்தேன். நாட்டை இழந்து இன்று காட்டில் வசிக்கிறேன். இராவணனின் கண்ணில் நான்பட்டால் கொன்றே விடுவான். அவன் பயத்தில் காட்டைவிட்டு வெளியே வரவும் அச்சமாக இருக்கிறது. கெட்டவன் வாழ்ந்தாலும், வாழ்ந்தவன் கெடக்கூடாது. செல்வத்தில் புரண்டவன் பரதேசியாக மாறினால், அவன் நிழல் கூட அவனை மதிக்காது. அவன் சொல் எந்த சபையிலும் ஏறாது. தன்னையே அவன் வெறுப்பான். குடும்பத்தில் மரியாதையின்றி நிம்மதியே போய்விடும் என்ற உண்மைகளை உணர்ந்தேன். துன்பங்களிலும் ஒரு நன்மை உண்டு என்பார்களே, அதுபோல இராவணனால் நான்பட்ட துன்பங்களில் இருந்து பொருள் செல்வ பெருமையை உணர்ந்துக்கொண்டேன். இறைவா, இராவணன் என்னிடம் இருந்து கைப்பற்றி நாடு வேண்டாம், என் செல்வத்தையாவது மீட்டுதாருங்கள்” என்று குபேரன் சிவபெருமானிடம் வேண்டினான்.
“குபேரா, இராவணன் நம் பக்தன். அவனை நாமே வீழ்த்துவது முறையாகாது. உன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட செல்வதை வைத்துக் கொண்டு அவனால் நிம்மதியாக வாழமுடியாது. அபகரிக்கப்பட்ட செல்வம் ஒருநாள் அவனுக்கே உபயோகம் இல்லாமல் ஆகிவிடும். இந்த உண்மையை இராவணன் மூலமாக நாம் உணர்த்துவோம்.
உன்னிடம் இருந்து இராவணன் அபகரித்த செல்வங்களைதான் நீ கேட்டாயே தவிர, இராவணன் அழிய வேண்டும் என்று நீ கேட்கவில்லை. அதனால் உன்னை இராவணனை விட செல்வந்தனாக்குகிறேன். இராவணன் ஒரு நாட்டுக்குதான் அதிபதி. ஆனால் நீயோ இன்றுமுதல் வடக்கு திசைக்கே அதிபதி. வடக்கு திசையை நீ ஆட்சி செய். ஸ்ரீமகாலஷ்மியின் செல்வங்களுக்கும் நீ அதிகாரியாக இருந்து பாதுகாத்து வா. செல்வத்திற்கு நீயே அதிபதி என்பதால் உன்னை வணங்கும் பக்தர்களும் செல்வந்தர்களாக மாறட்டும்.” என்று சிவபெருமான் குபேரனுக்கு ஆசி வழங்கினார்.
சிவபெருமானின் உத்தரவை ஏற்று ஸ்ரீமகாலஷ்மி, தன் செல்வங்களை கண்காணிக்கும் பொறுப்பை குபேரனிடம் ஒப்படைத்தார்.
குபேரன் வழிபாடு
குபேரன், சிவந்த நிறத்துடன் குள்ளமான உருவத்துடனும், புஷ்டியாக செல்வச் செழிப்புடன் இருப்பார். இவர் படத்தை தினமும் பார்த்து வந்தாலே மனதில் உற்சாகம் தோன்றும். வெற்றி தேவதை நம் அருகில் இருப்பதை போல் உணர்வோம். குபேரனை வணங்கினால் ஸ்ரீமகாலஷ்மி ஆசியும் சிவபெருமானின் அருளும் கிடைக்கும். குபேரனுக்கு நெய்யால் தயாரித்த வெள்ளை நிறத்தில் பாயாசம் செய்து, வெள்ளிகிழமையில் வழிபடலாம். குபேர சக்ரத்தையும் வைத்து பூஜிக்கலாம்.
ஆனால் குபேர சக்ரத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் அதற்கு சரியாகவும் முறையாகவும் பூஜை செய்ய வேண்டும். அந்த குபேர சக்ரத்தை காட்சி பொருளாக மட்டும் வைத்துவிட்டு, பூக்கள் கூட அணிவிக்காமல், பூஜை செய்யாமல் இருக்கக்கூடாது.
ஒருநாள் கூட தவறாமல் பூக்களை அணிவிக்க வேண்டும். தீப ஆராதனை செய்ய வேண்டும். குபேர சக்கரம் இருக்கும் இடம் நல்ல வாசனையாக இருக்க வேண்டும். வாசனை அகர்வத்தி வைக்க வேண்டும். இப்படி முறையாக மாலை 5.30 மணியில் இருந்த 6.30 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.
தாமரை மலரை வைத்து பூஜித்தால் இன்னும் சிறப்பு. குபேர சக்கரத்தை வீட்டிலோ அலுவலகத்திலோ வைத்து இருந்தால் ஒருநாள் கூட குபேர சக்ரத்தை பூஜை செய்யாமல் இருக்க கூடாது. அப்படி முறையாக குபேர சக்கரத்தை பூஜிக்க முடியாதவர்கள், குபேரருடன் ஸ்ரீமகாலஷ்மி இருக்கும் படத்தை வைத்து பூஜை செய்யலாம்.
ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்யும் நெல்லிகனியையும், அதுபோல வில்வ இலையையும் குபேர படத்தின் முன் வைத்து வெள்ளிகிழமையில் பூஜித்தால், குபேரனின் ஆசியால் வற்றாத செல்வவளத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
காலையில் எழுந்தவுடன் வடக்கு திசையை பார்த்து குபேரனையும், ஸ்ரீமகாலஷ்மியையும் மனதால் வேண்டி வணங்கினால் நன்மைகள் தேடி வரும். இதனால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு திசை என்று சொல் உருவானது.
குபேரரை வணங்குவோம் – வற்றாத செல்வ வளத்துடன் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserve