கண் திருஷ்டியை விரட்டும் எளிய பரிகாரங்கள்-பகுதி -2
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்.
நிரஞ்சனா
முந்தைய பகுதியில்
“..ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.”
இதன் தொடர்ச்சி…
செப்பு காசின் மகிமை
குழந்தைகளின் உடல் மெலிந்து கொண்டே இருந்தாலும் அல்லது பயத்தில் அவ்வப்போது அழுது கொண்டு இருந்தாலும், செப்பு காசை கையில் கட்டினால் துஷ்ட சக்திகளும், பொறாமைக்காரர்களின் கண்திருஷ்டியும் அண்டாது. சில குழந்தைக்கு கையில் செப்பு காசு கட்டினால் அலர்ஜி ஏற்படலாம். அதற்கு குழந்தைகளின் கையில் காசை கட்டும் முன், வெள்ளை துணியை மஞ்சள் கரைத்த தண்ணீரில் நனைத்து அந்த மஞ்சள் துணியில் செம்பு காசை சுற்றி பிறகு குழந்தையின் கையில் கட்டினால் அலர்ஜி ஆகாது.
இப்படி செய்வதினால் சக்திதேவியின் ஆசியால் இன்னும் அந்த செம்பு காசுக்கு சக்தி கூடுமே தவிர குறையாது.
செங்கல்லின் மகிமை
குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
தண்ணீருக்கும் சக்தி
யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது. பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறது“ என்றார் சூதவா முனிவர்.
மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு.
ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.
திருஷ்டியை போக்கும் “மை”
சில பெண்களின் முகத்தை பார்த்து யாராவது, “எவ்வளவு அழகாக இருக்கிறாள்” என்று கூறினாலே அது கண்திருஷ்டியாக மாறும். முகத்திற்குதான் அதிக கண்ணடிப்படும். அதனாலேயே சிலருக்கு முகப்பரு, கரும்புள்ளி போன்றவை அதிகம் முகத்தில் உருவாகும். அதற்கு பல கிரிமை முகத்தில் தடவியும், மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் நீங்கவில்லை என்றால் அதற்கு எளிய வழி, வேப்பமரத்திற்கு அவர்கள் கையால் தண்ணீர் ஊற்றினால் அதை அபிஷேகமாக கருதி செய்து, அந்த மரத்திற்கு மஞ்சல் குங்குமத்தை செவ்வாய். வெள்ளி தோறும் வைத்து பூஜித்தால், அவர்களுக்குள் இருக்கும் கண்திருஷ்டியை அந்த வேப்பமரம் போக்கும். ஏன் என்றால் வேப்பமரம் முத்துமாரியம்மனாகவும், ரேணுகாதேவியாகவும் போற்றபடுகிறது. அத்துடன். உங்கள் கண்களுக்கு தினமும் மை வைத்து வந்தாலும் கண்திருஷ்டி அண்டாது.
தோஷங்களை நீக்கும் பரிகாரம்
பச்சரிசி-தேங்காய் துருவல் – வாழைப்பழம் இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து புற்றுபோல செய்து, கோவிலில் நாகத்தம்மன் சிலை முன்போ அல்லது புற்றின் முன்பாகவோ வைத்து பச்சரிசி, தேங்காய் துருவல் மற்றும் வாழைப்பழத்தால் செய்த புற்றுக்கு சந்தனம், மஞ்சள், குங்குமத்தால் பொட்டுவைத்து வணங்கினால் கிரக தோஷங்கள், கண்திருஷ்டியால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். தோஷங்கள் விலகினால்தான் சந்தோஷம் தேடிவரும்.
எண்ணை தானம்
உடல் மெலிந்தோ,சுறுசுறுப்பு குறைந்தோ, அல்லது ஏதாவது வியாதி மாறி மாறி வந்துக் கொண்டுடே இருந்தால் அது ஒருவகை தோஷத்தால்தான் என்று சொல்லாம். மணி – மந்திர ஔஷதம். அதாவது மருந்தும் சாப்பிடவேண்டும், பூஜை பரிகாரங்களும் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
உடல் பாதிப்புகள் நீங்கவும், தோஷங்களும் திருஷ்டியும் போக்க நல்லெண்ணையை உங்கள் சக்திக்கேற்ப சிறு பாத்திரத்திலோ அல்லது பெரிய பாத்திரத்திலோ ஊற்றி, பாதிப்புக்கு உண்டானவர்கள் தங்கள் முகத்தை அந்த எண்ணை பாத்திரத்தில் நன்றாக பார்த்து, மூன்று முறை தங்களின் பெயரை உச்சரித்து பிறகு யாருக்காவது அந்த பாத்திரத்தோடு எண்ணையை தானம் செய்துவிடுங்கள். பாத்திரத்தோடு தானமா? என்று பணத்தை கணக்கு பார்த்தால், அந்த பணத்தை விட மருத்துவ செலவை கணக்கு போடும்போது இந்த தானசெலவே குறைவாகத்தான் இருக்கும். மாத்திரைகளை எப்படி நம்பிக்கையோடு சாப்பிடுகிறீர்களோ, அதுபோல் பரிகாரத்தையும் நம்பிக்கையோடு செய்தால்தான் பலன் கிடைக்கும்.
குழந்தைகளை தாக்கும் தோஷம்
ஒருவயது கூட நிறைவடையாத குழந்தையை வெளியாட்களிடம் கொடுக்க கூடாது. ஜலதோஷம் இருப்பவர்களுடன் இருந்தால் எப்படி நமக்கும் ஜலதோஷம் பிடித்து கொள்கிறதோ அதுபோல, கண்திருஷ்டி சட்டேன்று குழந்தைகளுக்கு பாதிப்பை கொடுத்துவிடுகிறது. பெற்ற தாயாக இருந்தாலும் அவர்களின் கண் திருஷ்டியும் குழந்தையை பாதிக்கும். அதற்காக குழந்தையை கண்ணே மணியே என்று கொஞ்சாமல் இருக்க முடியுமா? அல்லது ஆசையாக சுற்றத்தார்கள் கேட்கும் போது கொடுக்காமல்தான் இருக்க முடியுமா?
ஆகவே குழந்தையின் நெற்றியிலும், இடது கன்னத்திலும் கருப்பு மையால் பொட்டு வைத்தால் திருஷ்டி அந்த குழந்தைக்கு அண்டாது. அதனால்தான் இன்றுவரை வீதி உலா வரும் இறைவனுக்கும் – இறைவிக்கும் கன்னத்தில் திருஷ்டி பொட்டாக மை வைத்து அழைத்து வரும் வழக்கம் உள்ளது. இறைவனாக இருந்தாலும் கண்திருஷ்டி தாக்கும். இதற்கு பரிகாரம் கருப்பு மைதான் என்கிறது கண்திருஷ்டி சாஸ்திரம்.
பசுவின் பாத மண்ணுக்கு சக்தி
வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். பசுவின் பின்பக்கம் அதாவது அதன் வால் பகுதியை தொட்டு வணங்கினால் யோகம் ஏற்படும். “உன்னை பின் பக்கம் வணங்குபவர்களுக்குதான் யோகம் கிட்டு“ என்று பசுவை பார்த்து சீதாபிராட்டி கூறியதாக புராணத்தில் இருக்கிறது.
வாழும் வீட்டில் கண்களுக்கு தெரியாத தோஷங்கள், தீய சக்திகளும் நிறைந்து இருக்கும் என்கிறது சாஸ்திரம் அதனால் பசுவின் உடலில் பல தேவர்களும் ரிஷிகளும், தெய்வங்களும் இருப்பதாக புராணம் கூறுகிறது. அந்த பசுவின் பாதத்தில் ஒட்டி இருக்கும் மண், அந்த இல்லத்தில் பதிந்தால் தோஷங்கள் விலகி சந்தோஷம் பெருகும். பசுவை இல்லத்திற்கு அழைத்து வர முடியாதவர்கள் பசு சாணத்தை சிறிது தண்ணீரில் கலந்து வாசப்படியில் தெளித்தாலும் கண்திருஷ்டியும், பூமி தோஷங்களும் விலகும். அத்துடன் பொறாமைக்காரர்களின் காலடிபட்ட இடம் பட்டுபோகும் என்பார்கள் பெரியொர்கள். அப்படி பட்டு போகாமல் அந்த தீய பார்வையை விரட்டும் ஆற்றல் பசுக்கும் அதனின் சாணத்திற்கும் சக்தி இருக்கிறது.
திருஷ்டிபட்டு கட்டைவிரல் கருப்பானது
பாண்டவர்கள் வனவாசத்தையும், யுத்தத்தையும் நல்லபடியாக முடித்துவிட்டு வெற்றியுடன் எல்லோரிடத்திலும் ஆசி பெற்று கொண்டு இருந்தார்கள். துரியோதனனின் தாயான காந்தாரியிடமும் ஆசி பெறறார் தருமர். காந்தாரி கண்களை கட்டி கொண்டு இருந்தாலும் கண்களின் கீழ் அதாவது கண்களை கட்டிய துணியின் இடுக்குகளின் வழியாக தருமனின் கால் கட்டை விரலை பார்த்து, “இனி இந்த காலுக்குதான் பொன்னையும் – பொருளையும் கொட்டுவார்கள்” என்று கூறி கொண்டே பெருமூச்சுவிட்டாள். என்ன ஆச்சரியம்,? நிலகரியை போல தருமரின் கால் கட்டை விரல் கருப்பாக மாறியது.
இப்படி பொறாமையால் விடும் பெருமூச்சும் திருஷ்டியாக உருவெடுக்கும். உடலுக்கு ரத்த ஒட்டம் சீராக இருக்க வேண்டும் என்றால் சிலர் அக்குபிரஷ்ர் செருப்பை போடுவார்கள். அதனால் நடக்கும்போது பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இயங்கும். பாதத்தில் ரத்த ஒட்டம் நன்றாக இருந்தால் உடலில் இருக்கும் மற்ற உறுப்புக்கும் ரத்த ஒட்டம் சீரானதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதேபோலதான், முதலில் கண் திருஷ்டி காலுக்கே படும். நம் உடலில் எப்பொழுதும் ஏதாவது அடிபட்டு கொண்டே இருந்தாலும் அல்லது தீராத உடல் உபாதைகள் இருந்தாலும், கால் கட்டை விரலின் நகத்தில் கருப்பு மை வைத்தால் திருஷ்டி அண்டாது. கட்டை விரலின் நகத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
ஸ்படிகத்தின் மகிமை
சூரியனின் வெப்பம் பனியை உருக வைப்பதுபோல, தோஷங்களை அகற்றும் ஆற்றல் ஸ்படிக மணிக்கு இருக்கிறது. உடல் மெலிந்து முகத்தில் பொலிவு இழந்து இருப்பவர்கள் ஸ்படிக மணியை அணிந்தால் உடலில் நல்ல முன்னெற்றம் இருக்கும். உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணத்தையும் ஸ்படிக மணி கட்டுபடுத்தி சற்று குளிர்ச்சியாகவும் மாற்றும்.
ஒரு கைபிடி உணவு
நன்றாக சாப்பிட்டு கொண்டு இருப்பவர் சில நாட்களாக சாப்பிடமுடியாத அளவுக்கு உடல் உபாதைகளால் சாப்பிடமுடியாமல் அவதிபடுவார்கள். இதற்கு காரணம், “என்னமா சாப்பிடுகிறான்.” என்று யாராவது சொன்னாலோ அல்லது நான் இன்று நன்றாக சாப்பிட்டேன் என்று, தனக்கு தானே சொல்லிக்கொள்வதாலும் கண்திருஷ்டியாக மாறும். இதனால்தான் பெரியோர்கள் சொல்வார்கள், “மண்ணை தின்றாலும் மறைவாக தின்னவேண்டும்” என்று.
திருஷ்டிபட்டால் சாப்பாட்டில் பிடிப்பு இல்லாமலோ அல்லது சாப்பிடமுடியாத சூழ்நிலையோ ஏற்படும். இதற்கு பரிகாரம், ஞாயிற்று கிழமையில் தண்ணீரில் நன்றாக வாய் கொப்பளித்து, நல்லேண்ணையை ஒரு இரும்பு கரண்டியில் காய்ச்சி, அந்த இரும்பு கரண்டியில் இருக்கும் நல்லேண்ணையில், வாய் கொப்பளித்த தண்ணீரை துப்ப வேண்டும். இப்படி மூன்று முறை துப்பினால் திருஷடி கழிந்து, நன்றாக சாப்பிட முடியும். அதை தொடர்ந்து ஆறு ஞாயிற்று கிழமையில் செய்ய வேண்டும்.
அத்தடன் சாப்பிடும் முன் உங்கள் கைகளால் சாப்பிடும் உணவை காக்கைக்கு வைத்த பிறகு சாப்பிட்டால் தோஷங்கள் நிங்கும்.
கண் திருஷ்டி யாரை அதிகம் பாதிக்கும்
கண் திருஷ்டி பரிகாரம் இந்த தலைமுறையால் உருவாக்கபட்டதல்ல. பல தலைமுறைகள் அதாவது நம்முடைய முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. அதை நாம் இப்போது கண்டறிந்துள்ளோம். கண்டுபிடிப்பு என்ற வார்த்தைக்கும் உருவாக்கப்பட்டது என்ற வார்த்தைக்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கிறது. ஒருவர் ஒரு பொருளை உருவாக்கியதை காலத்தால் அந்த பொருள் மறைந்து பிறகு வேறு ஒருவரின் கண்களுக்கு அந்த பொருள் தெரிந்தால் அந்த நபர் பொருளை கண்டுபிடித்தேன் என்று கூற வேண்டுமே தவிர, நான்தான் உருவாக்கினேன் என்று கூறலாமா? அதுபோலதான் இந்த கண்திருஷ்டி. நம் முன்னோர்கள் அனுபவத்தில் அனுபவித்து அதற்கு பரிகாரத்தையும் உருவாக்கி வைத்து சென்று இருக்கிறார்கள். அதை மறவாமல் உங்களுக்கு சொல்ல வாய்ப்பு அளித்த இறைவனுக்கும், பக்திபிளானட் டாட்காமுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
கண்திருஷ்டி எல்லோரையும் பாதிக்கும் என்றாலும், சட்டேன்று யாரை பாதிக்கும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது என்றால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்திற்கு உரியவன் கெட்டு இருந்தாலும் அல்லது லக்கினத்திற்க்கு ஆறாம் இடத்தில் பாப கிரகங்கள் இருந்தாலும், அப்படிபட்டவர்களுக்கு சட்டென்று கண் திருஷ்டிபட்டுவிடும்.
முருங்கைக்காய்க்கு யாரும் கல் கட்ட வேண்டாம். ஆனால் புடலங்காய் நீண்டு வளர வேண்டும் என்றால் கல் கட்ட வேண்டும். இல்லை என்றால் அது சரியான அளவில் வளராமல் கோணலாய் போய்விடும். அதுபோல சிலருக்கு திருஷ்டிகளை கழித்தால்தான் யோகம் ஏற்படும், ரோகங்களும் தீரும். நம் முன்னோர்கள் கூறிய இந்த கண்திருஷ்டி பரிகாரங்களை பின்பற்றினால் எந்த பாதகமும் ஏற்படாது. பெரிய அளவில் பரிகார செலவும் இல்லை. வாழ்க்கையும் வளமானதாக அமையும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserve