நோய் தீர்த்த ஷீரடிசாய்பாபா
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி – 18
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்.
நிரஞ்சனா
ஒருவரை பற்றி குறை சொல்ல வேண்டும் என்றால் பலர் முன் வருவார்கள். பாராட்ட சிலரே வருவார்கள். குறை மட்டுமே சொல்கிற மனநிலை ஏன் இவர்களுக்கு இருக்கிறது? என்று கூட நினைக்க தோன்றும். ஆனால் ஒருவரை பற்றி மற்றவர் குறை கூறுவது பெரிய விஷயமே இல்லை. ஏன் என்றால், இறைவனையே குறை கூறும் உலகத்தில் அல்லவா பிறந்திருக்கிறோம். ஆம், முருகப்பெருமானை பார்த்து கவிஞர் ஒருவர், “உன் தந்தை சிவன், இருக்க வீடு இல்லாமல் சுடுகாட்டில் தூங்கினான், உடுத்த உடை இல்லாமல் புலி தோலையை உடையாக உடுத்துகிறான், உன் மாமன் பெருமாளோ கடன்காரன். குபேரனிடம் கடன் வாங்கி இன்று வரை வட்டியை கட்டிகொண்டு இருக்கிறான்.
உன் தாயோ காளி. கருப்பானவள். பிறந்த வீட்டில் அவளை யாரும் மதிக்கவில்லை, அதனால் தீக்கு இறையானால். உன் அண்ணன் விநாயகருக்கு யாரும் பெண் தராததால் ஆற்றங்கரை, குளத்தங்கரை போன்ற இடங்களில் அமர்ந்து பெண் தேடுகிறான், நீயோ ஆண்டி.
உன்னை மற்றவர்கள் கேவலப்படுத்திவிடுவார்களோ என்ற பயத்தில், யாரும் இல்லாத இடமான உயர்ந்த குன்றிமேல் அமர்ந்திருக்கிறாய்.” என்று ஒரு கவியில் அந்த கவிஞர் பாடுகிறார். அத்தனைக்கும் அக்கவிஞர் நாதிகவாதி கூட இல்லை. சிறந்த இறை நம்பிக்கை கொண்டவர். அப்படி இருந்தும் ஏன் இறைவனை குறை கூறினார் என்றால் அதற்கு காரணம், புகழாசை. குற்றம் கூறி பெயர் பெருவது சிலர் ரகம். அதுபோல, யாரை வேண்டுமானாலும் குறை கூறலாம் என்று நினைக்கும் நாக்கு. எலும்பு இல்லாத நாக்கு எப்படியும் வளைந்து பேசும் என்றார்கள் நம் பெரியோர்.
ஷீரடி சாய்பாபா மீது குற்றம்?
ஷீரடி சாய்பாபாவை பணிந்தால் கர்மவினை நீங்கும். அந்த அளவுக்கு சக்திபடைத்த நமது பாபாவையே குறை கூறினார் ஒருவர். ஏன் சொன்னார் என்பதை இப்போது பார்ப்போம். பம்பாயில், பிரதான் என்பவர் வசித்து வந்தார். இவர் குமாஸ்தாவாகப் பணி புரிந்து வந்தார். இவருக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு பிள்ளை திடீர் என்று மரணத்தை தழுவினான். சிறு குழந்தையை இறைவன் இப்படி காவு வாங்கிவிட்டானே என்று எல்லோரும் வருந்தினார்கள்.
பிரதான் தம்பதியினர், மகனை இழந்து மிகவும் வருத்தத்தில் இருந்த போது, அவர் கனவில் நமது சீரடி சாய்பாபா தோன்றினார். “கலங்காதே நல்லதே நடக்கும்“ என்று ஆசி வழங்கினார் பாபா. பிரதான், தூக்கம் கலைந்து தான் கண்ட கனவை தன் மனைவியிடம் கூறினார்.
“நாம் பாபாவின் பக்தர்கள் கூட இல்லை. அப்படி இருக்கும் போது ஏன் பாபா உங்கள் கனவில் தோன்றினார்? இதற்கு ஒரு காரணம் இருக்கும். அதனால் நாளை நாம் சாய்பாபாவை தரிசிக்க வேண்டும்” என்று கூறினார் பிரதானிடம் அவருடைய மனைவி.
மறுநாள், ஷீரடி சென்றார்கள். ஷீரடி சாய்பாபாவை தரிசித்த உடன் பிரதானின் மனைவி அழுது விட்டாள். அப்போது பாபா, “கலங்காதே. எல்லாம் இறைவனின் செயல். அவன் தோன்ற செய்கிறான். அவனே கொண்டும் செல்கிறான். அந்த நாள் எது என்று இறைவனே அறிவான். ஆனாலும் உன் மகன் விஷயத்தில் இறைவன் அவசரபட்டுவிட்டான். அதையே நினைத்துக்கொண்டே கலங்கினால், அடுத்த மகனை யார் காப்பாற்றுவார்?“ என்றார்.
அதை கேட்ட பிரதான் தம்பதிகள் ஆச்சரியம் அடைந்தார்கள். எப்படி பாபாவுக்கு நம் துயரம் தெரியும்.? இதற்கு முன் பாபாவை நாம் பார்த்தது கூட இல்லையே? என்று வியந்தார்கள். பாபாவுக்கு தெரியாதா, எங்கே என்ன நடக்கிறது. யார் என்ன செய்கிறார்கள் என்று.
தொடர்ந்த துன்பம்
பிரதான் குடும்பத்தினர் மீண்டும் ஒரு பெரிய இடியை சந்திக்க நேர்ந்தது. ஆம், ஒரு பிள்ளையை பலி கொடுத்து ஒரு வருடங்கள் கூட முடியாத நிலையில் இன்னொரு பிள்ளைக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. நாளுக்கு நாள் காய்ச்சல் அதிகமாகி கொண்டே இருந்தது. “உங்கள் மகன் பிழைப்பது கடினம்” என்றார்கள் மருத்துவர்கள். இதை கேட்ட பிரதான் ஷீரடி சாய்பாபா படத்தின் முன் கதறி அழுதார்.
அப்போது மாதவபட் என்பவர் பிரதான் குடுபத்திற்கு ஆலோசனை கூறுவதுடன், பூஜை ஹோமம் போன்றவை செய்து வந்தார். அவர் பிரதானிடம், “நீ எப்போது பாபாவை வணங்கினாயோ அன்றிலிருந்து உன் குடும்பம் கஷ்டப்படுகிறது“ என்றார். இதை கேட்ட பிரதான் மனைவிக்கு கோபம் ஏற்பட்டது. “நிறுத்துங்கள். வாய்க்கு வந்தது எல்லாம் பேசாதீர்கள். முதல் மகன் இறந்த பிறகுதான் பாபாவையே நாங்கள் தரிசித்தோம். அதற்கு முன் நீங்கள்தானே எங்கள் குடும்பத்திற்கு பூஜை,பரிகாரங்கள், ஹோமம் செய்தீர்கள்.அதனால் உங்களால்தான் எங்கள் மகன் இறந்தான் என்று ஒரு நாளாவது சொல்லி இருப்போமா?“ என்றார் ஆவேசமாக. இதை கேட்ட மாதவபட், “எனக்கு என்ன வந்தது? ஆனால் ஒன்று நிச்சயம். பாபாவை நம்பி நீங்கள் படு குழியில் விழபோகிறீர்கள் என்பது மட்டும் உண்மை“ என்று கூறிவிட்டு சென்றார்.
இரவு மாதவபட் கனவில் ஷீரடி சாய்பாபா தோன்றினார். “என்ன மாதவபட், பிரதான் என்னை வணங்கியபிறகுதான் கஷ்டங்களை சந்தித்தானா? வாய் சொல்லில் அவசரப்படலாமா மாதவபட். வேதம் ஓதும் நீ அப்படி பேசலாமா?” என்று கனவில் கேட்டார் பாபா.
கனவில் பாபா தோன்றியதும் மாதவபட் பதறி அடித்து கொண்டு எழுந்தார். “பாபா என்னை மன்னித்துவிடுங்கள். நான் தெரியாமல் கோபத்தில் சொல்லிவிட்டேன். நீங்கள்தான் பிரதானின் மகனை காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார். அப்போது யாரோ கதவு தட்டினார்கள்.
பாபா நேரிலேயே வந்துவிட்டாரா என்று திடுகிட்ட மாதவபட், கதவை திறந்தார். அவர் கண் முன் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. படுத்தபடுக்கையாக கிடந்த பிரதானின் மகன் புன்னகை முகத்துடன் தன் தந்தையை அழைத்து கொண்டு, “வணக்கம் மாமா” என்று மாதவபட்டை வணங்கினான்.
இதை கண்ட மாதவபட், ஒன்றும் புரியாமல் பிரதானிடம், “என்ன இந்த நேரத்தில்?” என்று கேட்டார். “தெரியவில்லை பண்டிட் ஜீ. மகன் கண் விழித்தவுடன் உங்களை பார்த்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தான். அதில் என்ன ஆச்சரியம் என்றால், வரும் வழியில் மருத்துவரிடமும் சென்று மகனை பரிசோதித்தேன். மருத்துவர்கள் ஆச்சரியபட்டார்கள். பாதி நினைவில்லாமல் இருந்தவன், எப்படி எழுந்து நடக்கிறான், தெளிவாக பேசுகிறான்? என்று ஆச்சரியப்பட்டார்கள். அத்துடன் நிமோனிய காய்ச்சல் இருந்த அறிகுறி கூட தெரியவில்லையே என்றார்கள் மருத்துவர்கள்.” என்று மாதவபட்டிடம் கூறினார் பிரதான். அப்போதுதான் பாபாவின் அருமையும் சக்தியும் உணர்ந்தார் மாதவபட்.
ஷீரடி சாய்பாபாவை நம்பியவர்களை ஒருநாளும் தாழ்ந்துபோக மாட்டார்கள். எப்போதும் பாபா நம்மை கவனித்துக் கொண்டேதான் இருக்கிறார். ஷீரடி மகானின் அருள் நமக்கு என்றும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserve