அனுமனுக்காக வில் ஏந்தி வந்த ஸ்ரீகரஞ்ச நரசிம்மர்
நிரஞ்சனா
இறைவன் தன் பக்தனை காக்க எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவார். முன்னோர் காலத்தில் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகவும், ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்தார். அதுபோல ஒரு அவதாரமே ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் அவதாரம். அது ஏன்? ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றால் எப்படி இருப்பார்? என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, நாம் பிரகலாதனை பற்றி சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம்.
இரண்யனின் மகன் பிரகலாதன். தந்தையே மகனுக்கு வில்லனாக இருந்தார். இந்த வில்லனிடம் இருந்து குழந்தை பிரகலாதனை காக்கும்படி கேட்டுகொண்டார் கருடாழ்வார் ஸ்ரீமந் நாராயணனிடம். இதனால் ஸ்ரீமந் நாராயணண்ன் ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்து வந்து இரண்யனை கொன்று பிரகலாதனை காப்பாற்றினார்.
ஸ்ரீநரசிம்மரை வணங்கினால் துன்பங்கள் போகும் என்று பிரகலாதன் மட்டும் தெரிந்துக் கொள்ளவில்லை, ஸ்ரீமந் நாராயணனின் மற்றோரு அவதாரமான ஸ்ரீராமரும் தெரிந்துக்கொண்டார்.
ஸ்ரீமந் நாராயணன் தானே இராமர் போன்ற பல அவதாரங்களாக தோன்றினார். அப்படி இருக்கும் போது ஏன் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியே தன்னுடைய அவதாரத்தை வணங்க வேண்டும். இராமருக்கு சக்தி இல்லையா? என்ற கேள்வி எழும்.
இறைவன் பூலோகத்தில் அவதரித்தாலே தன் தெய்வ தன்மையை மறைத்துக்கொண்டு மனிதர்களோடு மனிதர்களாகவே இருப்பார். எதற்காக இறைவன் மனித பிறவி எடுக்க வேண்டும்? ஏன் கஷ்டபட வேண்டும் என்று கேட்கலாம்.
ஆற்றில் ஒரு குழந்தை விழுந்து விடுகிறது இதனால் யார் அதிகம் பதறுவார்கள் அந்த குழந்தையின் பெற்றொர் தானே. அவர்களுக்கு நீச்சல் தெரியாவிட்டாலும் தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஆற்றில் குதித்து அந்த குழந்தையை காப்பாற்ற முயற்ச்சிப்பார்கள். மனிதர்கள் மட்டுமல்ல மிருகங்களுக்கு கூட அந்த பாச உணர்வு உண்டு.
கொடுமைகாரர்கள் விதிவசத்தால் பூலோகத்தில் பிறந்துவிட்டால் அந்த அசுரர்களால் தன் பக்தர்களுக்கும் இந்த பூலோகத்திற்கும் ஆபத்து நேரக் கூடாது என்ற காரணத்தால் இறைவன் தோன்றுகிறார்.
ஸ்ரீராமருக்கு மன தைரியம் தந்த ஸ்ரீநரசிம்மர்
பெண்ணாசை கொண்ட இராவணனால் முனிபத்தினிகளும் பாதிக்கப்பட்டார்கள். “இவன் கொடுமை என்று தீருமோ” என்று முனிவர்களும், தேவர்களும் மனம் வருந்தியபோது, ஸ்ரீராமரின் அவதாரம் நிகழ்ந்தது.
இராவணன் தன் புத்திக்கு வி.ஆர்.எஸ் தந்தான். விதி புதிதாக வேலையில் சேர்ந்தது. எரிந்துக்கொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகு சொறிந்துக்கொண்டமைபோல, எங்கோ இருந்த சீதையை தேடி வந்து கடத்தி காவலில் வைத்தான் இராவணன். இராவணனிடமிருந்து சீதையை எப்படி மீட்பது என்று நினைத்து வருந்திய ஸ்ரீஇராமர், ஆந்திராவில் உள்ள அஹோபிலம் என்ற ஸ்தலத்திற்கு வந்தார்.
இந்த அஹோபிலம் என்ற இடத்தில்தான் ஸ்ரீமந் நாராயணன், இரண்யனை கொல்ல ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தார். அதனால் இந்த இடத்தில் ஸ்ரீநரசிம்மருக்கு கோவில் உருவானது.
இந்த இடத்திற்குதான் ஸ்ரீராமர் மன குறையுடன் வந்தார். சீதையை இராவணனிடம் இருந்து எப்போது மீட்போம்? என்று இந்த ஆலயத்தில் இருந்த ஒரு துணின் அருகில் நின்று கொண்டு நினைத்தார். இப்படி நினைத்த மறுவிநாடியே ஸ்ரீஇராமருக்கு மன தைரியம் பிறந்தது. சீதை மீட்போம் என்ற மன உறுதி கிடைத்தது. ஸ்ரீநரசிம்மரை தரிசித்தார். தன் வெற்றிக்கு அங்கேதான் பிள்ளையார் சுழி போட்டார் ஸ்ரீஇராமர்.
ஸ்ரீநரசிம்மர் எப்படி ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் ஆனார் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். .
ஸ்ரீஇராமபிரான், இராவணனை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு, அனுமனையும் தன்னுடனே இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.
“நான் தங்கள் தூதன். தங்களுடன் நான் இருப்பதை விட உலகெங்கும் தங்கள் புகழ் பாடி தங்கள் நாமத்தை உச்சரித்து வருவதையே பாக்கியமாக கருதுகிறேன்.” என்று கூறி, பூலோகத்திலேயே இருந்தார் ஸ்ரீஅனுமன். ஒருநாள் ஸ்ரீஇராமரை தரிசிக்க வேண்டும் என்று விரும்பி, ஆந்திரவுக்கு சென்று அஹோபிலம் ஆலயத்தில் கருங்காலி என்ற மரத்தின் அடியில் தவம் செய்தார் அனுமார்.
பல வருடங்களாக தவம் செய்ததால் ஸ்ரீராமர் அனுமார் முன் தோன்ற விரும்பினார். ஆனால் அஹோபிலம் ஆலயத்தில் கருங்காலி என்ற மரத்தின் அடியில் அனுமார் தவம் செய்ததால் ஸ்ரீஇராமர், ஸ்ரீநரசிம்மர் அவதாரத்தில் அனுமார் முன் தோன்றினார்.
“அஞ்சனை மைந்தா” என்று ஸ்ரீநரசிம்மர் அழைத்ததும், இராமர்தான் எதிரில் நிற்கிறார் என்ற ஆவலுடன் கண்களை திறந்து பார்த்தார் அனுமார். ஆனால் தன் எதிரில் கோரைப் பற்களும், சிங்கமுகமுமாக ஸ்ரீநரசிம்ம காட்சி தருவதை கண்ட அனுமார் கோபம் அடைந்தார்.
“யார் நீ.? நான் இராமரை நினைத்து தவம் செய்து கொண்டு இருக்கும்போது, மிருகமுகத்துடன் என் எதிரில் நிற்கிறாயே” என்று கோபமாக பேசினார் ஆஞ்சநேயர்.
“இராமனும் நானே, ஸ்ரீமந் நாராயணனும் நானே. இப்போது நீ காணும் ஸ்ரீநரசிம்ம அவதாரமும் நானே.” என்று ஸ்ரீநரசிம்ம பெருமாள் அனுமாரிடம் கூறினார்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. என்னுடைய ஸ்ரீஇராமர் நல்ல அழகான முகம் படைத்தவர். பார்த்தவுடனே மனதை கவரும் வசிய முகம் கொண்டவர். நீயோ பயமுறுத்தவது போல் உருவம் கொண்டவனாய் இருக்கிறாய். அதனால் நீ என் இராமர் இல்லை.” என்ற ஆஞ்சநேயர், ஸ்ரீ நரசிம்மரை, இராமராக ஏற்க மறுத்தார்.
“ஹிரண்யகசிபுவை கொல்வதற்காக ஸ்ரீமந் நாராயணனான நான், இந்த நரசிம்ம அவதாரம் எடுத்தேன். தைரியத்தையும் புத்திசாலிதனத்தையும் தந்திடும் ஆற்றல் படைத்தவன் நான். அதனால் இராமனாக அவதாரம் எடுத்தபோது இந்த ஸ்தலத்தில் என்னை வழிபட்டதால், இராம அவதாரத்திற்கு மனதைரியம் உண்டானது. இந்த இடத்தில் உக்கிரகோலத்தில்தான் நான் இருப்பேன். உனக்காக வேண்டுமானால் ஒன்று செய்கிறேன்…..”
என்று ஸ்ரீநரசிம்மமூர்த்தி கூறிக்கொண்டே தன் சிரசில் மேல் ஆதிசேஷனை படம்பிடித்து நிற்க சொல்லி, வலக் கரத்தில் சக்கரமும், இடக் கரத்தில் வில்ஏந்தியபடி காட்சிகொடுத்தார் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி.
இதை கண்ட ஸ்ரீஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது. ஸ்ரீநரசிம்ம அவதாரத்திற்கு பிறகே இராம அவதாரம் என்பதையும் புரிந்துக் கொண்டு “ராம்..ராம்…ராம்..ராம்” என்று சொல்லியபடி, ஸ்ரீநரசிம்மரை வணங்கினார்.
அனுமார், கருங்காலி மரத்தடியில் தவம் செய்து ஸ்ரீநரசிம்மரை தரிசித்து, ஸ்ரீநரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயருக்காக ஸ்ரீஇராமரை போல வில் ஏந்தி காட்சி தந்ததால், ஸ்ரீநரசிம்ம பெருமாளுக்கு “ஸ்ரீகரஞ்ச நரசிம்மர்” என்ற பெயர் ஏற்பட்டது. “கரஞ்ச” என்பது ஒருவகை இரும்பை போன்ற உலோகம். ஆனால் இந்த உலோகத்தை வெகு சுலபத்தில் ஒடித்து விடலாம் என்கிறார் போகர். அதுபோல ஸ்ரீநரசிம்மரை வேண்டி வேண்டி அழைத்தால்தான் வருவார். ஆனால் ஸ்ரீகரஞ்ச நரசிம்மரை மனதால் ஒருமுறை நினைத்து அழைத்தாலே இலகிய மனதுடன், கருணை உள்ளத்துடன், துரோபதி அழைத்த குரலுக்கு கிருஷ்ணபரமாத்மா வந்தது போல ஸ்ரீகரஞ்ச நரசிம்மரும் வருவார்.
ஸ்ரீகரஞ்ச நரசிம்மரை ஆந்திரா மாநிலம் அஹோபிலம் சென்று தரிசிக்க முடியாதவர்கள், ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் உருவ படத்தை வைத்து வணங்கினாலே அவரின் பேரருளை பெறலாம். எந்த ஆபத்தையும் நெருங்க விடாமல் தடுத்து, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற அருள் தருவார். மன தைரியத்தையும் கொடுப்பார் ஸ்ரீகரஞ்ச நரசிம்மர்.
மன தைரிய உள்ளவர்களே சோதனைகளை தாண்டி சாதிப்பார்கள் என்ற சொல்லை உண்மையாக்குவார் ஸ்ரீகரஞ்ச நரசிம்மர்.
“ஓம் நமோ நாராயணாய”
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved