திண்ணன் வாழ்வை மாற்றிய நண்பன்
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 15
நிரஞ்சனா
வேடனான திண்ணன், தனது வாழ்நாளின் முதல் வேட்டைக்கு புறப்பட தயாரானான். அவனுடன் மற்றவர்களும் வேட்டைக்கு புறப்பட தயாரானார்கள். திண்ணன் வில்லை எடுக்கும் போது, “திண்ணா.. உன்னை வாழ வைக்க போகும் தெய்வம்தான் நீ கையில் எடுக்கும் வில். அதனால் முதலில் செய்யும் தொழிலை தெய்வமாக மதிக்க வேண்டும். தொழிலுக்கான மரியாதையும் தர வேண்டும். அதனால் வில்லை எடுக்கும் முன்னதாக நம் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி எடு. எல்லாம் வெற்றியாக அமையும்.” என்றார் திண்ணணின் தந்தை. தந்தை சொல்லே மந்திரம் என்று உணர்ந்து, திண்ணன் தன் தந்தையை வணங்கி, “எனக்கு இஷ்டதெய்வம் நீதான்“ என்று கூறி வில்லை எடுக்கும்போது ஒரு சுப ஒலி ஒலித்தது. இதை கேட்ட திண்ணனின் தந்தை மகிழ்ச்சியடைந்தார்.
காட்டிற்கு வேட்டையாட திண்ணன் சென்றான். யானை, புலி போன்ற மிருகங்களை வேட்டையாடினார்கள் திண்ணனும் மற்ற வேடர்களும்.
இப்படி பரபரப்பாக வேட்டையாடும் போது, யானைகுட்டிகளும் கருவுற்ற மிருகங்களும் அந்த காட்டில் எதுவும் நடக்காதது போல சென்றது. அதன் காரணம் என்ன? அவற்றுக்கு வேடர்கள் என்றால் பயம் இல்லையா.? இருக்கிறது! இருந்தாலும், எதையும் உணரமுடியாத குட்டி ஜீவராசிகளையும், கருவுற்ற மிருகங்களையும் கொல்லும் வழக்கம் வேடர்களுக்கு இல்லை. வேடர்களுக்கும் தர்மம் இருக்கிறது அல்லவா.
புலி போல் பாய்ந்த திண்ணன்
அப்போது, ஒரு காட்டுபன்றி, யானையே மிரண்டு ஓடும் படியாக வேகமாக ஓடியது. இதை கண்ட திண்ணன், அந்த காட்டு பன்றியை வேட்டையாட அதன் பின்னே ஓடினான். ஆனால் அந்த காட்டுபன்றி வெகுதூரம் ஓடியது. நீண்ட மலைச்சாரல் வழியே சென்றது. திண்ணம் அந்த பன்றியை விடாமல் துரத்திக்கொண்டு ஒடினான். பாயும் புலியை போல திண்ணனின் ஓட்டத்தில் வேகம் இருந்தது. “இனி நம்மால் ஓட முடியாது” என்று அந்த காட்டு பன்றி நினைத்து, களைத்துப்போய் ஒரு இடத்தில் நின்றது.
ஆனால் திண்ணனுக்கு எந்த களைப்பும் இல்லை. இவ்வளவு தூரம் தன்னை ஓட விட்ட பன்றிமேல் கோபம் கொண்டு, தன் இடுப்பில் இருந்த உடைவாளை எடுத்து, அந்த பன்றியை ஒரே வெட்டாக வெட்டினான் திண்ணன். ஒரே வெட்டில் அந்த பன்றி இரண்டு துண்டுகளாக விழுந்தது.
அவனை தேடி வந்த மற்ற வேடர்கள், திண்ணனின் வேகத்தையும் வேட்டையாடும் திறனையும் நேரில் பார்த்து வியந்து பாராட்டினார்கள்.
இப்படி கடும் முரடனாக இருக்கும் திண்ணனின் மனதை மென்மையாக்கும் ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. அதை திண்ணன் மட்டுமல்ல யாரும் எதிர்பாராத சம்பவம். அதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், திண்ணனுடன் நாமும் கொஞ்ச நேரம் பயணிக்க வேண்டும்.
திண்ணன் ஒரே வெட்டில் காட்டு பன்றியை இரண்டாக பிளந்ததை கண்ட திண்ணனின் தோழர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். திண்ணனின் வீரத்தையும், விடாமுயற்சியையும் பாராட்டினார்கள்.
வெகு தூரம் ஓடி வந்ததால் பசி எடுத்தது திண்ணனுக்கு. “பசிக்கிறது“ என்றான் திண்ணன். “காட்டுக்குள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கும் பசிக்கிறது” என்றார்கள் நாணனும் உடன் வந்த இன்னொரு நண்பனும்.
“முதலில் நமக்கு தேவை தண்ணீர். தண்ணீருக்கு எங்கே போவது?“ என்றான் திண்ணன்.
“அதோ தெரிகிறது பார் தேக்கு மரம். அதன் அப்பால் சென்றால் நீண்ட குன்று ஒன்று இருக்கிறது. அந்த உயர்ந்த மலைக்கு பக்கத்தில் “பொன்முகலி” என்ற ஆறு இருக்கிறது. வா திண்ணா” என்று அழைத்தான் திண்ணனின் நண்பன் நாணன்.
உடன் இருந்த தோழனிடம், “நீ இந்த பன்றியை அந்த இடத்திற்கு எடுத்து வா. நாங்கள் முன்னே செல்கிறோம்.” என்றான் திண்ணன்.
நண்பன் பன்றியை சுமந்து வர, அவனுடன் பொன்முகலி ஆற்று பகுதிக்கு வந்தார்கள் திண்ணனும் நாணனும்.
“பன்றியை சமைக்க தீக்கடைக் கோலால் தீயை உண்டாக்கு. நான் வந்து சமைத்து தருகிறேன்“ என்றான் நண்பனிடம் நாணன்.
“சரி” என்ற அந்த நண்பனும் தீயை உண்டாக்கும் முயற்சியை செய்தான்.
“நாம் அதுவரை அந்த மலை அடிவாரத்திற்கு சென்று வருவோம் வா.” என்று நாணனிடம் சொன்னான் திண்ணன்.
பொன்முகலி ஆற்றில் இறங்கி அவ்வாற்றைக் கடந்து திருகாளத்தி மலை அடிவாரத்தை அடைந்தார்கள். திருகாளத்தி மலை ஏறினார்கள். மலை ஏற ஏற திண்ணனின் மனதில் பரவசம் உண்டானது. பசி மறைந்தது. மனம் அமைதி அடைந்தது. ஏதோ ஒரு சக்தி மலை மேல் இருந்தபடி தன்னை அழைப்பது போல உள்ளுணர்வு சொன்னது. மகிழந்தான் திண்ணன். “நாணா.. எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதை எப்படி சொல்வது? என்று தெரியவில்லை.” என்றான் திண்ணன்.
திருகாளத்தி மலை உச்சியை அடைந்தார்கள். “இது என்ன மலை? இவ்வளவு பெரியதாக இருக்கிறது.” என்று வியந்தபடி கேட்டான் நாணனிடம் திண்ணன்.
“இந்த மலை மேல் குடுமி தேவர் என்பவர் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.” என்றான் நாணன்.
“குடுமி தேவரா? யார் அவர்.?” என்று கேட்டான் திண்ணன்.
“அது வந்து….. அது ஏதோ ஒரு சாமீ” என்றான் நாணன்
“அந்த சாமீயை வணங்கி விட்டு வருவோம் வா“ என்று நாணனை அழைத்துக்கொண்டு மேலும் மலையில் முன்னேறினான் திண்ணன்.
மாற்றம் தெய்வ இரகசியம்.
ஒருவனின் வாழ்க்கை எப்படி மாறும்? எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. எடுக்கும் முயற்சி நன்றாக இருந்தால் அதன் முடிவு வேறு மாதிரி இருந்தாலும் அதுவும் சரியாகவே இருக்கும். நினைப்பதெல்லாம் நினைத்த மாதிரி நடக்க நம் செயலில் எதுவும் இல்லை. எல்லாம் இறைவன் செயல். இது திண்ணனின் வாழ்விலும் பொருந்தியது. வேடர்களுக்கு தலைவனாக தமக்கு அடுத்ததாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் திண்ணனின் தந்தை. ஆனால் இறைவனின் விருப்பமோ வேறு விதமாக இருக்கிறது. இறைவனின் விருப்பம்தான் இறுதி முடிவு.
குடுமி தேவரை பார்க்க ஆர்வமாக வந்த திண்ணன், அங்கே ஒரு சிவலிங்கம் இருப்பதை கண்டான்.
“நாணா…நீ சொன்ன குடுமி தேவர் இவர்தானே” என்று சொன்னப்படி சிவலிங்கத்தை கட்டி அனைத்துக்கொண்டான் திண்ணன்.
தன் தாய்-தந்தையை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அனைத்துக்கொள்ளும் ஒரு குழந்தையை போல மாறினான் திண்ணன். திண்ணனின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர். திண்ணனின் கண்களில் இருந்து இதுவரை கண்ணீர் வந்து பார்த்ததில்லை நாணன. அதை கண்ட நாணன் திண்ணனுக்கு என்ன ஆனது? ஏன் இப்படி செய்கிறான்? என்று ஒன்றும் புரியாமல் விழித்தான்.
மனிதர்களின் வாழ்வில் புரியாத புதிர்கள் ஏராளம். இறைவனின் அடுத்த திருவிளையாடலை இறைவனின் அடியார்களே யூகிக்க முடியாத போது, நடப்பது என்ன என்று இந்த நாணனால் எப்படி புரிந்துக்கொள்ள முடியும்.?
திண்ணனின் சிவதொண்டை கண்டு திகைத்த இன்னொரு சிவதொண்டர். யார் அவர்.? சொல்கிறேன்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved
தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.