ஸ்ரீஆதிசங்கரர் அதிசய தோடு அம்பிகைக்கு அணிவித்தது ஏன்?
பகுதி – 2
இதன் முந்தைய பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
கைலாய மலையில் புட்பதந்தன், மாலியவான் என்கிற இரண்டு சிவகணங்கள் இருந்தார்கள். சிவபெருமானுக்கு பணிவிடை செய்வதில் இருவரும் போட்டி போடுவார்கள். ”நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள்.” என்று பலமுறை சிவபெருமானும் சொல்லி பார்த்தார். ஆனால் அந்த சிவகணங்கள் கேட்பதாக இல்லை. ஒருநாள் சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டு புட்பதந்தனை யானையாகவும் மாலியவானை சிலந்தியாகவும் பிறக்கும்படி சாபமிட்டார். இருவரும் அவ்வாரே பிறவி எடுத்தனர். அதுவும் ஒரே ஊரில்.
யானையும் சிலந்தியும் சிவபக்தியில் சிறந்து விளங்கினாலும் முன் ஜென்ம விரோதமும் தொடர்ந்தது. நாவல் மரத்தில் பிறந்த சிலந்தி, அந்த மரத்தின் கீழே இருந்த ஜம்புகேஸ்வரர் மீது வெயில்படாமல் இருக்கவும் இலைகள் ஏதும் படாமல் இருக்கவும் சிலந்தி சிவலிங்கத்தை மூடியபடி வலை பின்னியது. வழக்கமாக சிவ பூஜைக்கு வரும் யானை, அந்த சிலந்தியின் வலையை கண்டு ஆத்திரம் அடைந்து சிலந்தி வலையை தன் தும்பிக்கையால் அழித்தது. சிலந்தி, வலை பின்னுவதும் அதை யானை அழிப்பதும் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் சிலந்தி ஆத்திரம் அடைந்து யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து கடித்தது. துடித்து போன யானை இறந்தது. தும்பிக்கைக்குள் சிக்கிய சிலந்தியும் இறந்தது.
சிவபக்தியில் சிறந்து இருந்தாலும் இன்னமும் முன் ஜென்ம பகையுடன் இருந்து யானையை கொன்ற சிலந்தியின் மீது கோபம் கொண்ட சிவபெருமான், சிலந்தியை மனித பிறவி எடுக்கும்படி சபித்தார். யானைக்கு முக்தி தந்து மீண்டும் சிவகணமாக அழைத்துக் கொண்டார். மனித பிறவி எடுத்த சிலந்தி முன் ஜென்மத்தில் சிவபூஜையில் சிறந்து விளங்கியதால் சோழ மன்னரான சுபவேதர்-கமலாவதியின் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அவரே கோச்செங்கட்சோழன்.
மன்னராக ஆட்சி பெறுப்பேற்ற கோச்செங்கட்சோழன் சிவ பக்தராக திகழ்ந்தார். முன் ஜென்மத்தில் யானை மீது இருந்த பகையின் காரணமாக யானை நுழைய முடியாத சிவன் கோயில்களை கட்டினார். அதில் முதலாவதாக இருப்பது இந்த திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில்.
அகிலாண்டேஸ்வரியின் அகோர கோபத்தை குறைந்தார் ஆதிசங்கரர்
சிவன் உருவத்தில் சக்திதேவி முதன் முதலில் இங்கு தோன்றியதால் சிவபெருமானை போல் அம்பிகையும் கோப குணத்துடன் இருந்தாள். எந்த நேரமும் உக்கிரமாகவே இருப்பாள். இதனால் பக்தர்கள் அன்னையை நெருங்கவே அஞ்சினர். கர்ப்பகிரகத்தில் சென்று பூஜிக்கவே பயந்தார்கள் சிவாசாரியார்கள். அதனால் மூலஸ்தானத்தின் வாசலிலேயே நின்றபடி கற்பூர தீப ஆராதனை செய்தார்கள். இதை அறிந்த ஸ்ரீஆதிசங்கரர், காதில் அணியும் தோடுகளாக ஸ்ரீசக்கரத்தை உருவாக்கி அம்பாளின் காதில் அணிவித்தார். இதன் பிறகு அம்பாளின் செல்ல பிள்ளையான விநாயகப் பெருமானை அம்பாள் பார்த்துக் கொண்டிருக்கும் விதமாக எதிரே பிரதிஷ்டை செய்தார். இதன் பிறகே அன்னை பராசக்தி சாந்த சொரூபியாக அன்பு வடிவனாள். ஆதிசங்கரர் அணிவித்த ஸ்ரீசக்கர கம்மல் அகிலாண்டேஸ்வரியின் காதுகளில் பெரியதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக தெரியும்படி இருக்கும்.
கல்விக்கு சிறந்த ஸ்தலம் இது என்று பெயர் பெற காரணம்
அகிலாண்டேஸ்வரியின் உபாசகர் ஒருவர் இந்த ஆலயத்தில் பல வருடங்களாக தியானம் செய்தும் அம்பாளை பூஜித்தும் வந்தார். ஒருநாள் வழிபாடு முடிந்து கோயிலிலேயே உறங்கினார். நள்ளிரவில் அம்பாள் மூலஸ்தானத்தில் இருந்து வெளியே வந்தாள். பூஜையில் வைத்த வெற்றிலை பாக்கை சாப்பிட்டபடி கோயிலை சுற்றி நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஆலயத்தில் படுத்து கொண்டு இருந்த தன் உபாசகரை எழுப்பினார் அன்னை அகிலாண்டேஸ்வரி. யாரோ தன்னை எழுப்பியதை கண்டு திடுக்கிட்டு எழுந்த உபாசகர், அம்பிகை அகிலாண்டேஸ்வரியை கண்டு ஏதோ ஒரு யட்சினி இது என பயந்து எழுந்து ஓடினார். தன்னை துஷ்ட தேவதை என்று சொல்லி அலறி ஓடுவதை கண்ட அகிலாண்டேஸ்வரி கோபம் கொண்டு உபாசகரை துரத்திக் கொண்டு வந்தார். ஒரு கட்டத்தில் கோபம் கொண்ட அன்னை அகிலாண்டேஸ்வரி தன் வாயில் உள்ள வெற்றிலை எச்சிலை காரி உமிழ்ந்தார். அது உபாசகரின் மீது படாமல், கோயிலில் அந்த சமயம் தூங்கிக் கொண்டிருந்த வரதன் என்கிற கோயில் திருப்பணி செய்யும் ஒருவரின் வாயில் விழுந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு வரதன் பெரும் கவிஞனாக மாறினார். அவரே புகழ் பெற்ற “காளமேகப் புலவர்” என்று பெயர் பெற்றார்.
பூஜைமுறை
ஆலயத்தில் மதிய வேளையில் அன்னை அகிலாண்டேஸ்வரியே சிவவழிபாடு நடத்துவதாக ஐதீகம். அதனால் இன்றுவரை மதிய வேளையில் சிவாச்சாரியார் புடவை உடுத்திக் கொண்டு அம்பிகையாக பெண் வேடமிட்டு சிவ வழிபாடும் கோபூஜையும், செய்வார். பக்தர்கள் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து வணங்குவார்கள். இந்த ஸ்தலத்திற்கு வந்து குபேரர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை வழிபட்ட பிறகுதான் செல்வத்துக்கு அதிபதியாகவும், வடக்கு திசையை தனக்குரிய திசையாகும் வரத்தை பெற்றார். இங்குள்ள குபேரர் வழிபட்ட குபேரலிங்கத்தை நாமும் வணங்கினால் பணபிரச்சினையே வராது என்கிறது புராணம். திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியையும் ஜம்புகேஸ்வரரையும் வணங்கினால் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். உயர்ந்த வாழ்க்கை உண்டாகும். அத்துடன் சிறந்த கல்வியறிவு, கலைஞானம் கிடைக்கும். அகிலத்தில் உள்ள மக்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் அகிலாண்டேஸ்வரி காப்பாள்.♦
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
©bhakthiplanet.com All Rights Reserved