இலங்கையில் கட்டட சாஸ்திரம் | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 7
விஜய் கிருஷ்ணாராவ்
இராமாயண காவியத்தில் இலங்கை பேரரசனான இராவணன், தன் அரண்மனையை மட்டுமின்றி இலங்கை நகரத்தையே கட்டட சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய மனையடிசாஸ்திரப்படிதான் அமைத்திருந்தான். இலங்கையில் இருந்த இராவணனின் அரண்மனை உட்பட அனைத்து கட்டடங்களும் மயனின் ஆலோசனையின்படியே உருவாக்கப்பட்டது. எவராலும் வெல்ல முடியாத பேராற்றல் பெற்றிருந்தான் இராவணன். தன்னுடைய ஜாதக யோகத்தாலும் – மயனின் மனையடி சாஸ்திர ஆலோசனையினாலும் சிறந்து விளங்கிய இராவணன் வீழ்ந்தது ஏன்?.
சீதையின் ரூபத்தில் வந்த கொடும் விதியால் அழிந்தான் என்பதை நாம் அறிவோம். இவ்வளவு பெரும் சிறப்பு வாய்ந்த இராவணன், எதனால் தவறான வழியில் சென்று, தீரா பழிக்கு ஆளானான்?. கட்டடக்கலை சாஸ்திரத்திற்கு உண்மையாகவே பலன் இருந்தால் – சக்தி இருந்தால் அவனுக்கு அந்த கேடான எண்ணம் வந்திருக்கக்கூடாதே என்கிற கேள்வி நமக்கு இயல்பாக எழுகிறது.
இராமாயணத்தை நாம் முழுமையாக படிக்கும்போது இந்த கேள்விக்கான விடையும் நமக்கு கிடைக்கிறது. சீதை கடத்தப்படுகிற சம்பவத்திற்கு முன்னதாக இராவணனின் சிறப்புகள் அவனின் மாபெரும் சிவபக்தி போன்றவை விவரிக்கப்படுகிறது. மிக சிறந்த சிவபக்தனான இராவணன், சிவபெருமானின் கருணையால் பல எண்ணற்ற வரங்களை பெறுகிறான். இயல்பாகவே இராவணன் பெண்ணாசை கொண்டவன். வரம் தந்த சிவனிடமே வம்புக்கும் செல்கிறான்.
ஒருமுறை இராவணனுக்கு காட்சி தர சிவபெருமான் விரும்புகிறார். காரணம், இந்தமுறை இராவணனின் தவம் கடுமையாக இருந்தது. தன்னையே வருந்திக்கொண்டு கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தான். இதற்கு மேலும் அவனை சோதிக்க, அன்பே வடிவான சிவபெருமான் விரும்பவில்லை. ஆதலால் தன் மனைவி பர்வதராஜ புத்திரியான அன்னை பார்வதிதேவியுடன் இமயத்தில் இராவணனுக்கு காட்சி தந்து, அவன் கேட்ட வரங்களை மறுக்காமல் வழங்கினார் சிவபெருமான். கேட்ட வரத்தை தயக்கமின்றி தந்த சிவபெருமானை வணங்கிவிட்டு ஊர்போய் சேரலாம் அல்லவா. அப்படி செய்யாமல் பார்வதிதேவியையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் இராவணன். அவன் பார்வையின் நோக்கம் சிவபெருமானுக்கு சட்டென்று புரியாவிட்டாலும், உலக மாதா பார்வதி புரிந்து கொண்டாள்.
இராவணனின் பார்வையில் காமம். பார்வதியின் பார்வையில் கோபம். அந்த இடத்திலேயே இராவணனை ஒழித்து இருப்பாள் பராசக்தி. ஆனால் பார்வதி பொறுமை காத்தாள். தன் கணவரிடம் வரம் பெற்றவனாக இருந்தாலும் இவனை ஒழித்துக்கட்டுவது சுலபம்தான். ஆனாலும் அதுகூடாது. அப்படி செய்தால் தன் கணவனான சிவபெருமானை அவமானப்படுத்தியதை போல ஆகிவிடும் என்கிற காரணத்தால் அகிலாண்டேஸ்வரி பொறுத்திருந்தாள்.
“போ மகனே போ. உனக்கு ஒரு முடிவுகட்ட ஒருத்தி உன் நாட்டுக்கே வருவாள். தெற்குதான் எமதிசை. ஆனால் உனக்கு ஒரு எமன் வடதிசையில் இருந்து வர போகிறாள். போ மகனே போ”. என்று தனக்குள்ளே சொல்லி சிரித்துக் கொண்டு அங்கிருந்து மறைந்தாள் அன்னை பார்வதிதேவி.
எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாததை போலவே பார்வதி தேவியின் அருகில் இருந்த சிவபெருமான், இராவணனை எச்சரித்து அனுப்பினார். அப்படியும் திருந்தவில்லை இராவணன். இன்னொரு சமயம் அன்னை பார்வதியும்-சிவபெருமானும் கைலாய மலையில் தனித்திருக்கும் போது, அந்த கைலாய மலையையே பெயர்த்து தூக்கி செல்ல முயன்று பார்வதியின் கடும் கோபத்தால் அந்த முயற்சியில் தோல்வி அடைந்தான். அப்போதும் கூட அன்பே சிவம் என்கிற தத்துவத்திற்கு ஏற்ப இராவணனை மன்னித்தார் சிவபெருமான். இப்படியாக நாம் இராவணனை பற்றி மட்டும் தெரிந்துக் கொள்ள விரும்பினால், அவனின் சிறுபிள்ளைத்தனமான சேட்டைகள் நிறைய காணலாம். அவை அனைத்துமே உண்மையாக சிறுபிள்ளையின் விளையாட்டு என்றென்னியே மன்னித்து விடுவது சிவபெருமான்-அன்னை பார்வதி தேவியின் வழக்கமாக இருந்தது.
நம் வீட்டு பிள்ளை தவறு செய்தால் நாம் மன்னிப்போம் -மறப்போம். ஊர் மன்னிக்குமா? – சட்டம் மன்னிக்குமா? அப்படிதான் இருந்தது ஸ்ரீமந் நாராயணனுக்கு. நம் தங்கை பார்வதியிடமே இராவணன் தன் சுபாவத்தை காட்டுகிறானே. அவர்களும் அவனை வரம் தந்த காரணத்தாலோ அல்லது அவன் மீது உள்ள அன்பின் காரணமாகவோ விட்டுவிடுகிறார்கள். நாம் ஏன் அவனை மன்னிக்க வேண்டும்.? வீட்டுக்கு அடங்காத பிள்ளை ஊருக்கு அடங்கும். அதனால் இப்படியே அவனை விட்டுவிடக்கூடாது என்று தீர்மானித்தார்.
ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக…
© 2011 bhakthiplanet.com All Rights Reserved