குட்டிசாத்தான் வசியம் செய்தவனை திருத்திய பாபா
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி – 11
நிரஞ்சனா
தத்தமஹராஜ். இவர் பல சித்து வேலைகளை செய்து மக்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவரை சந்திக்கவரும் பக்தர்களுக்கு பாலால் தயாரித்த இனிப்பை மாயஜாலத்தில் வரவழைத்து தருவார். இதை பார்த்த குசபாவ் என்ற இளைஞன் இந்த மாயஜால வித்தையை கற்க விரும்பி தத்தமஹராஜ் என்கிற அந்த மந்திரவாதியிடம் சிஷ்யராக சேர்ந்தார். குட்டிசாத்தானை வசியம் செய்த இரும்பு வளையத்தை(காப்பு) குசபாவின் கையில் அணிவித்தார் மந்திரவாதி.
சில மாதங்கள் கழித்து குரு தத்தமஹராஜ் இமயமலைக்கு சென்று தவம் செய்ய முடிவு செய்தார். “உங்களுடன் நானும் வருகிறேன்” என்று பிடிவாதம் பிடித்தான் குசபாவ். அதற்கு மந்திரவாதி, “குசபாவ்…உனக்கு 22 வயதுதான் ஆகிறது. இந்த வயது பக்குவப்பட்ட வயதல்ல. தவம் செய்ய முதலில் மனம் பக்குவப்பட வேண்டும். கலங்கிய குட்டையில் நல்ல தண்ணீரை எடுக்க முடியாது. அந்த குட்டை அமைதியடைந்த பிறகுதான் தெளிந்த நீரை எடுக்க முடியும். குட்டையை போல் கலங்கி இருக்கிறது உன் மனம். அதனால் தெளிவு பெற ஷீரடிபாபாவை சந்தித்த பிறகு பார்க்கலாம்” என்று குருநாதர் தன் சிஷ்யன் குசபாவுக்கு அறிவுரை கூறிவிட்டு இமயமலைக்கு சென்று விட்டார்.
குசபாவ், ஷீரடியை நோக்கி பயணம் புறப்பட்டார். போகும் வழியிலேயே காய்ச்சல் ஏற்பட்டது. எந்த மருந்து சாப்பிட்டும் காய்ச்சல் குணம் அடையவில்லை. இருந்தாலும் எப்படியோ பாபாவை தரிசிக்க காய்ச்சலுடன் ஷீரடிக்கு சென்றார். பாபாவை பார்த்தவுடன் அவர் காலில் விழப் போனார் குசபாவ். தன் காலில் விழ இருந்த குசபாவை தடுத்த சாய்பாபா, “நீ துஷ்டன். நல்ல குணம் படைத்தவன் இல்லை. குட்டிசாத்தானை வசியம் செய்து வித்தை காட்டும் மாந்தீரிகவாதி. நீ என்னை வணங்க தகுதியற்றவன். போய்விடு இங்கிருந்து” என்றார் பாபா.
இதனால் ஆத்திரம் அடைந்த குசபாவ், “நீங்கள் கூடதான் மாயஜாலத்தில் விபூதி, உணவு போன்றவற்றை வரவழைக்கிறீர்கள். நீங்களும்தான் குட்டிசாத்தனை வசியம் செய்து வைத்திருக்கீறீர்கள். அப்படி இருக்கும் போது என்னை குறை சொல்ல உங்களுக்கு தகுதியில்லை” என்று வாய்க்கு வந்தபடி பேசினான். சாய்பாபாவின் அருகில் இருந்தவர்கள் குசபாவின் பேச்சை கேட்டு கோபம் அடைந்து, “எங்கள் சாய்பாபாவையே எதிர்த்து பேசுறீயா… உன்னை கொன்று விடுவோம்” என்று எச்சரித்தார்கள். உடனே சாய்பாபா பக்தர்களை அமைதிப்படுத்திய பாபா,
“குசபாவ்…நான் மாயஜாலத்தில் உணவு கொண்டு வந்து அதை நானே சாப்பிடுவேன். ஆனால் நீயோ அப்படி மாயஜாலத்தில் வரவழைத்த உணவை நீயே சாப்பிட்டால் உனக்கு அந்த மாந்தீரிக சக்தி இல்லாமல் போய்விடும். காரணம் நீ வரவழைத்த உணவு குட்டிசாத்தான் மூலமாக வரவழைக்கப்பட்ட உணவு. அதை அந்த மாந்தீரிகனே சாப்பிடக் கூடாது என்பது விதி. ஆனால் இறைவன் அருளால் வரவழைத்த உணவை, அதை வரவழைத்தவனே சாப்பிட்டால் மேலும் அவனுக்கு மகிமை கூடுமே தவிர குறையாது என்பதை நீ அறிய வேண்டும்”. என்று சொன்ன சாய்பாபா, அதை நிருப்பிக்கும் வகையில் மாயஜாலவித்தையால் உணவை வரவழைத்து அதை சாய்பாபாவே சாப்பிட்டார். இதை கண்ட குசபாவ் தன் தவறை மன்னிக்கும்படி பாபாவின் காலில் மீண்டும் விழப்போனார். “உன்னை மன்னிக்க வேண்டுமானால் உன் கையில் அணிந்திருக்கும் இரும்பு வளையத்தை(காப்பு) தூக்கி எறி. அது, உன் குருநாதர் குட்டிசாத்தனை வசியம் செய்து ஜெபித்து உன் கையில் அணிவித்து இருக்கிறார்” என்றார் சாய்பாபா.
“என் குருவின் உத்தரவின்றி காப்பை கழற்ற மாட்டேன்.” என்ற குசபாவ், சாய்பாபாவின் பேச்சை ஏற்காமல் வெளியேறினார். சில தினத்திலேயே குசபாவுக்கு இருந்த காய்ச்சல் அதிகம் ஆனதே தவிர குறையவில்லை. இதற்கு மந்திரமும் பலன் தரவில்லை மருந்தும் பலன் தரவில்லை. தன்னுடைய குரு தத்தமஹராஜ், இமயமலைக்கு செல்லும் போது, “இனி உன் குரு ஷீரடி பாபாதான்” என்று கூறிவிட்டு சென்றார். அப்படி இருக்கும் போது குருவான பாபாவின் பேச்சை கேட்பதுதானே முறை. என்ற ஞானோதயம் உண்டாகி, தன் கையில் இருந்த மாந்தீரிக இரும்பு காப்பை கழற்றி விசீ எறிந்து, பாபாவை தரிசிக்க போனார் குசபாவ்.
மகான் சாய்பாபா புன்னகையுடன் குசபாவை வரவேற்றார். அந்த மகானின் காலில் குசபாவ் விழந்தவுடனே காய்ச்சல் இருந்த இடம் தெரியாமல் போனது. இதனால் மகிழ்ச்சியடைந்து “பாபா நான் உங்களுக்ககாக இனி உயிரையே கொடுப்பேன். என்னை உங்கள் சீடனாக ஏற்ற கொள்ளுங்கள்” என்றார்.
“என்னை சரண் அடைந்தவர்களுக்கு உயர்வு தருவேன தவிர உயிரை எடுக்கும் பழக்கமில்லை.” என்றார் பகவான் ஷீரடி சாய்பாபா. புது சிஷ்யனாக வந்த குசபாவுக்கு பல சோதனைகளை வைத்தார் பாபா. எத்தனை சோதனை வந்தாலும் சாய்பாபாவே காப்பாற்றுவார் என்று மனம் உறுதியுடன் பொறுத்துக் வெற்றி பெற்றார். “குசபாவ்… என்னை சரண் அடைந்த பிறகு மனம் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகதான் உனக்கு இத்தனை சோதனைகளை கொடுத்து பரீட்சித்து பார்த்தேன். அத்தனையும் நீ பொறுமையாக ஏற்று பெருமை சேர்த்துவிட்டாய். இனி நீ என் சீடன் மட்டுமல்ல… என் செல்லபிள்ளையும் கூட.” என்று கூறி ஆசி வழங்கி, “உன் புகழ் ஊர் முழுவதும் பரவும்.” என்று கூறி, “தீராத நோயில் வதைந்து, உன்னை தேடி வருபவர்கள் குணம் அடைய இறைவனை வேண்டு, அப்போது உன் கையில் விபூதி தோன்றும். அதை பக்தர்களுக்கு தந்து குணப்படுத்து.” என்று ஆசி கூறி குசபாவை அனுப்பினார்.
சாய்பாபாவின் ஆசியை பரிபூரணமாக பெற்று, தன்னை நாடிவரும் மக்களின இன்னல்களை தீர்த்தார். அத்துடன் உடல் நலம் இல்லாதவர்களுக்கு சாய்பாபவின் அருளால் தன் கையில் தானாக வரும் விபூதியை தந்து, பக்தர்களின் வியாதிகளை தீர்த்தார் குசபாவ். “இவையாவும் சாய்பாபாவின் சக்தியாலும் அருளாலும் என்க்கு கிடைத்த பெரும் பாக்கியம்.” என்று மகான் ஷீரடிசாய்பாபாவை போற்றுவார் குசபாவ்.
ஒருசமயம், இந்த சாய்பாபா யார்.? எதற்காக நம் ஷீரடி வந்தார்.? ஏன் ஷீரடி மக்களுக்காக அன்பை பொழிகிறார். சாய்பாபாவின் உண்மையான நோக்கம்தான் என்ன? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் கண்டோபா கடவுளை (சிவபெருமானை) வர்ணித்து அழைத்து குறி கேட்டார்கள் சிலர். பூசாரி உடலில் கண்டோபா இறைவன் வந்து அருள் சொன்னார். அதை கேட்ட பலர் அதிர்ச்சியடைந்தார்கள்.
அப்படி என்னதான் சாய்பாபவை பற்றி சொன்னார் சிவபெருமான்.? அது – அடுத்த பகுதியில்….
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved