தீராத நோய்க்கு மகான்களே மருத்துவர்கள்
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி – 10
நிரஞ்சனா
தீக்ஷீத் என்பர் பாபாவின் சிறந்த பக்தர். எல்லாம் சாய்பாபாவின் செயல் என்று ஆணிதரமாக நம்பி வந்தார். ஒருநாள் தீக்ஷீத்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பல மருத்துவர்களை சந்தித்தார். இருந்தாலும் காய்ச்சல் தீரவில்லை. இதனால் தீக்ஷீதரின் குடும்பத்தார் கவலையடைந்தார்கள். தீக்ஷீதர் மனதில், ஒருமுறை சாய்பாபாவை சந்தித்தால் காய்ச்சல் வந்த சுவடே தெரியாதபடி போய்விடும் என்று நம்பினார். ஆனால் தூர பயணத்தால் உடல் இன்னும் பாதிப்பு ஏற்படும், அதனால் நீ ஷீரடிக்கு செல்ல கூடாது என்று மறுத்தார்கள் உறவினர்கள்.
சாய்பாபா காலடியில் மரணம் அடைந்தால் என்னை போல் பாக்கியசாலி யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லி ஷீரடியை நோக்கி பயணம் துவங்கினார். மருத்துவரால் கைவிடப்பட்ட எத்தனையோ நோயாளிகளின் வியாதியை இறைவனால் அனுப்பப்பட்ட மகான்களால் தீர்ந்திருக்கிறது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்களும் அதை நேரில் பார்த்தவர்களும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
மகான் ஷீரடி சாய்பாபா மீது நம்பிக்கையுடைய தீக்ஷீதரை போன்று ஸ்ரீரமண மகரிஷீ மேல் அதிக நம்பிக்கை உடைய தேவராஜ முதலியார், ஸ்ரீரமணர் ஆசிரமத்தில் ஒரு விடுமுறை நாளில் வந்து தங்கி இருந்தார். ஒருநாள் அவர் நடைப்பயிற்சி சென்று கொண்டு இருக்கும் போது அவர் கண்களின் மணல் பட்டு கண்களை திறந்து எதையும் பார்க்க முடியாதபடி கண்கள் எரிச்சல் தந்தது.
அதனால் மெல்கோட் என்ற மருத்துவரை அணுகி, தன் கண்களை பரிசோதித்தார். “கண்ணுக்குள் மண் ஆழமாக சென்று இருக்கிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இந்த ஊரில் அந்த வசதி இல்லாததால், நீங்கள் உடனே சென்னைக்கு புறப்படுங்கள். தாமதித்தாலும் கண்பார்வை போய்விடும்” என்றார் மருத்துவர்.
இதை அருகில் இருந்து கேட்டு கொண்டிருந்த பகவானின் பக்தர் ஒருவர், “பகவான் ஸ்ரீரமணரை பார்க்க வநதீர்கள், அதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. நீங்கள் உங்கள் கண்களுக்கு விளக்கெண்ணைய் விட்டு பாருங்கள்.” என்றார். இதை கேட்ட மருத்துவர், “கூடாது. விளக்கெண்ணைய் அதிக பிசுபிசுப்பு தன்மை உடையது. அதை கண்களில் இட்டால் இன்னமும் கண்ணில் இருக்கும் மண் ஆழமாக சென்று விடக்கூடும். அதன் பிறகு எந்த சிகிச்சை செய்தாலும் பலன் கிடைக்காது.” என்று எச்சரித்தார்.
“எது நடக்க வேண்டும் என்று பகவான் நினைக்கிறாரோ அது நடக்கட்டும். இந்த கண் எரிச்சலுடன் இப்போது சென்னைக்கு உடனே செல்வது என்பது இயலாத காரியம்.” என்று முடிவு செய்து ஆசிரமம் திரும்பி வந்து, ஸ்ரீரமணரின் அறைக்குள் சென்று ஸ்ரீரமணரை சரியாக கூட பார்க்க முடியாதபடி அவதியுடன் நின்றிருந்தார். ஆனால் எதை பற்றியும் முதலியாரிடம் ரமணர் கேட்கவில்லை. அமைதியாகவே இருந்தார்.
“எனக்கு விளக்கெண்ணை வேண்டும்.” என்று பகவானின் அருகில் இருந்தவரிடம் கேட்டார் முதலியார். விளக்கெண்ணை தரப்பட்டது. முதலியாரை ஸ்ரீரமணர் பார்த்துக்கொண்டிருந்தார். விளகெண்ணையை ஒரு சொட்டு கண்களில் விட்டார் முதலியார். என்ன ஆச்சரியம்.. அதுவரை எரிச்சல் தந்த கண்கள் குளிர்ச்சியானது. உடனே முன்பு பரிசோதித்த மருத்துவரிடம் தன் கண்களை மறுபடியும் பரிசோதிக்க சென்றார்.
மெல்கோட் மருத்துவர், முதலியாரின் கண்களை பரிசோதித்து ஆச்சரியம் அடைந்தார். “என்ன செய்தீர்கள். கண்களுக்குள் இருந்த மண் எப்படி வெளியேறியது.?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
“எனக்கு தெரியாது. இது ஸ்ரீரமணரின் வைத்தியம்.” என்றார் முதலியார்.
இப்படிதான் மருத்துவரால் கைவிடப்பட்ட தீக்ஷீதரின் வியாதியை சாய்பாபா தீர்த்த விதம் அதிசயமானது. நம்பமுடியாதது. ஆம்.. தீக்ஷீதர் சாய்பாபாவை சந்தித்து தனக்கு இருக்கும் வியாதியை பற்றி சொல்லி வருந்தினார்.
“இதற்கு மருந்து, நெய்யும் ஜீராவையும் கலந்து, ஒன்பது நாள் சாப்பிட்டு வா.” என்றார் சாய்பாபா.
இதை தன் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார் தீக்ஷீதர்.
அவர்கள் கோபப்பட்டார்கள். “என்ன முட்டாளதனமாக இருக்கிறது. நெய் குளிர்ச்சி தன்மை உடையது. ஜீராவோ இனிப்பு. அவற்றை கலந்து சாப்பிட்டால் மேலும் சளி அதிகம் சேரும். அதனால் பாதிப்புதான் இன்னும் உண்டாகுமே தவிர குணம் கிடைக்காது. இந்த மூட வைத்தியமுறை எல்லாம் உனக்கு வேண்டாம்.” என்று கூறினார்கள் உறவினர்களும், நண்பர்களும்.
“எனக்கு வந்திருக்கும் விஷ காய்ச்சலுக்கு மருந்து இல்லை என்று மருத்துவர்களே கைவிட்டார்கள். பாபா என்னை விஷமா சாப்பிடு என்றார். நெய் – ஜீரா என்கிற இனிப்புதானே சாப்பிட சொன்னார். அப்படியே பாபா எனக்கு விஷம் தந்தால்தான் என்ன. வியாதியின் கொடுமையில் கொஞ்சம் கொஞசம் சாவதைவிட ஓரே மருந்தில் உயிர் போனாலும் என் வேதனைக்கு நல்லதுதான்.”
பாபாவின் வழிக்காட்டுதலில் மருந்து சாப்பிட தொடங்கினார் தீக்ஷீத். ஆனால் ஆறுநாளாக எந்த முன்னேற்றமும் இல்லை. காய்ச்சல் அதிகமானதே தவிர குறையவே இல்லை. இருந்தாலும் சாய்பாபாவின் மேல் உள்ள நம்பிக்கையால் பாபா கூறியது போல் நெய்யையும் சீராவையும் கலந்து மருந்தாக சாப்பிட்டு வந்தார் தீக்ஷத். அதிசயம் நடந்தது. மகான் ஸ்ரீசாய்பாபா சொன்னது பலித்தது. சரியாக ஒன்பதாவது நாள், தீக்ஷீதரின் காய்ச்சல் குணம் அடைந்தது. புதிய பலம் உடலுக்கு ஏற்பட்டதை உணர்ந்தார். இவையாவும் ஷீரடி சாய்பாபாவின் மகிமைகள் என்பதை தீக்ஷீதரின் குடும்பத்தினரும் புரிந்துக்கொண்டர்கள்.
அடுத்ததாக –
குட்டி சாத்தனை வசியம் செய்தவனுக்கு ஏற்பட்ட கதியை சரி செய்தார் நம் மகான் ஷீரடி சாய்பாபா. அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved