இறைவனுக்கே வேடிக்கை காட்டிய சுந்தரர்
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 6
நிரஞ்சனா
சென்ற பகுதியில்….. முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும்
- சங்கிலியாருக்கு ஏற்ற நல்ல மணமகனை தேட வேண்டும் என்ற தீவிர முயற்சி எடுத்தார் தந்தை. சங்கிலியாரை பெண் பார்த்து விட்டு சென்றாலே மாப்பிள்ளை வீட்டாருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும். சில சமயத்தில் உயிர் பலி கூட நடந்துவிடும். இதனால் சங்கிலியார் இராசியில்லாதவள் என்று ஊர் மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.
- “எல்லாம் நல்லதுக்குதான். இந்த நிலையும் மாறும்” என்ற ஒரே நம்பிக்கையுடன் சிவபெருமானின் மேல் பாரத்தை போட்டு வாழ்ந்தார் ஞாயிறுகிழார். ஒருநாள், உறவினர்களின் ஒருவர் ஞாயிறு கிழாரை சந்தித்தார்.
இனி…
“நீங்கள் திருவெற்றியூர் சென்று ஈசனை வணங்கி வாருங்கள். இறைவன் அருளால் நல்ல திருப்பம் ஏற்படும்“ என்றார். மனித உருவத்தில் தெய்வமே நேரில் வந்து சொல்வது போல் இருந்தது சங்கிலியாரின் தந்தைக்கு. தன் மகளின் எதிர்கால வாழ்க்கைக்கு ஓர் ஓளி தெரிகிறது என மகிழ்ந்தார்.மகளை அழைத்து கொண்டு திருவெற்றியூர் வந்தார்.
ஒரு கன்னிமடம் அமைத்து சகல வசதியோடும் சகல பாதுகாப்புடனும் தங்க வைத்துவிட்டு, “நீ இங்கேயே தங்கி சிவபெருமானை வணங்கி வா. உனக்கு நல்ல நேரம் பிறக்கும்.“ எனச் சொல்லி, தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார் ஞாயிறு கிழார். சங்கிலியார் ஏதோ கடமைக்கென்று சிவனுக்கு சேவை செய்யாமல் உண்மையான பக்தியோடு சேவை செய்தார். தினமும் மலர்களை பறித்து பூமாலையாக்கி அதை திருவெற்றியூர் தியாகராஜப்பெருமானுக்கு சமர்பிக்கும் வழக்கத்தை வைத்திருந்தார். அத்துடன் திருக்கோயிலை சுத்தம் செய்வது என்று பல திருப்பணிகளையும் மகிழ்ச்சியுடன் சிவனை நினைத்து சேவை செய்து கொண்டு இருந்தார்.
ஒருநாள் – திருவெற்றியூர் வந்த சுந்தரர், இறைவனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் சென்றார். சிவனை வணங்கி பதிகம் பாடினார். அந்த நேரத்தில் சங்கிலியார் இறைவனுக்கு பூமாலையை எடுத்து வந்தார். சங்கிலியாரை கண்டதும் நம்பியாரூரர் காதல் கொண்டார். இது முன்ஜென்ம தொடர்போ என மகிழ்ந்தார். சங்கிலியாரை திருமணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். இதனால் சங்கிலியை பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்ட சுந்தரர், ஒரு நண்பனிடம் சொல்வதை போன்று திருவெற்றியூர் இறைவனிடம் தன் காதல் எண்ணத்தை சொல்லி வேண்டினார். சிவபெருமானும் தன் நண்பனுக்காக சங்கிலியார் கனவில் தோன்றி சுந்தரரின் விருப்பத்தை சொன்னார்.
அதற்கு சங்கிலியார் சுந்தரரை திருமணம் செய்ய சங்கிலியார் சம்மதித்தார். ஆனால் தன்னைவிட்டு எப்போதும் சுந்தரர் பிரியக்கூடாது என்றும் திருவெற்றியூரைவிட்டு அவர் போக கூடாது என்றும் சிவபெருமானிடம் கனவில் வேண்டினார். “அப்படியே ஆகட்டும்“ என்றார் சிவபெருமான். கனவில் இருந்து விழித்த சங்கிலியார், இறைவனே தன் தந்தையாக இருந்து தன்னுடைய திருமண விஷயத்தை கவனிப்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தார்.
சுந்தரரின் கனவில் தோன்றிய இறைவன், சங்கிலியின் சம்மதத்தையும், திருவெற்றியூரைவிட்டு சுந்தரர் செல்லக் கூடாது என்கிற நிபந்தனையையும் சொன்னார். சங்கிலி, தனக்கு மனைவியாக கிடைத்தால் போதும் என்ற காதல் மயக்கத்தில் இருந்த சுந்தரர், யோசிக்காமல் இறைவனின் நிபந்தனையை ஏற்றார். அதற்கு இறைவன் –
“நீ அவளின் நிபந்தனைக்கு சரி என்று வார்த்தையில் சொன்னால் நம்ப மாட்டாள். அவளுக்கு சத்தியம் செய்து தா“ என்றார் இறைவன்.
“சரி… சத்தியம் செய்து தருகிறேன். ஆனால் எனக்கு நீங்கள் ஒரு உதவியை செய்ய வேண்டும். நான் சத்தியம் செய்ய சங்கிலி என்னை திருக்கோயில் கருவறைக்கு அழைத்துச் செல்வாள். ஆனால் அந்த நேரம் நீங்கள் கருவறையில் இருக்காமல் கோயிலுக்குள் இருக்கும் மகிழமரத்தில் இருக்க வேண்டும்.“ என்றார் சுந்தரர்.
“இவன் நம்மிடமே விளையாடுகிறான்.“ என்று கோபப்பட்ட இறைவன், இவன் வழிக்கே சென்று இவனுக்கு நாம் வேடிக்கை காட்டுவோம்“ என்று முடிவுடன், “உன் விருப்பப்படியே செய்கிறேன்” என்றார் திருவெற்றியூர் தியாகராஜப் பெருமான்.
உடனே சங்கிலியின் கனவில் தோன்றி,“உன் நிபந்தனையை சுந்தரர் ஏற்றான். நாளை அவன் உன்னிடம் பேசும் போது உன் நிபந்தனைக்கு சத்தியம் செய்து தரச்சொல். அவன் அதற்கு சம்மதித்து எம் கருவறைக்கு உன்னை அழைத்து சென்று சத்தியம் செய்து தர சம்மதிப்பான். ஆனால் நீ அவனை நம் கோயிலில் இருக்கும் மகிழமரத்தின் அருகில் அழைத்து வந்து , இந்த மகிழமர சாட்சியாக உன் நிபந்தனைக்கு சத்தியம் கேள். அவன் அப்படியே செய்வான்.“ என்றார் இறைவன்.
மறுநாள் சங்கிலியார் பூமாலை தொடுத்து இறைவனுக்கு சமர்பிக்கச் சென்றாள். அவளை சந்தித்த சுந்தரர் தன் காதலை சொல்லி அவள் சம்மதத்தை கேட்டார். சங்கிலி சம்மதி்தாள். தன் நிபந்தனையை சொன்னாள். அதனை ஏற்று சத்தியம் செய்து தந்தால் திருமணத்திற்கு சம்மதிப்பதாக சொன்னாள். ஒப்புக்கொண்ட சுந்தரர், “இறைவன் முன்னபாகவே உனக்கு சத்தியம் செய்து தருகிறேன் போதுமா.“ என்றார்.
“அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம். நான் இந்த திருக்கோயிலில் இருக்கும் மகிழமரத்தின் மீது அன்பு வைத்திருக்கிறேன். எனக்கு அந்த மரமும் இறைவன்தான். நீங்கள் அந்த மகிழமரத்தின் முன்பாக சத்தியம் செய்தால் எனக்கு அதுவே போதும். அதுதான் என் ஒரே விருப்பம்.“ என்றாள்.
“அதிர்ச்சி அடைந்த சுந்தரர், வேறு வழி இல்லாமல் சங்கிலியுடன் சென்று மகிழமரத்தின் முன்பாக சத்தியம் செய்து தந்தார். பிறகு மிக நன்றாக உறவினர்கள் நண்பர்கள் ஆசியுடன் சுந்தரர் – சங்கிலி திருமணம் இனிதாக நடந்து முடிந்தது.
மகிழ்ச்சியாக குடும்ப வாழக்கை சென்றுக் கொண்டிருந்தது. இறைவன் தன் திருவிளையாட்டை தொடங்கினார். சுந்தரருக்கு தன் முதல் மனைவியின் ஞாபகம் வந்தது. அதனால் அவர் செய்த ஒரு செயலால் சுந்தரரின் கண் பார்வை பறிபோனது.
அப்படி என்ன செய்தார் சுந்தரர்? – ஏன் அவர் கண் பார்வை பறிபோனது…?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved