Friday 22nd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

ஆற்றில் தொலைத்த தங்கம் குளத்தில் கிடைத்த அதிசயம்

அறுபத்து மூவர் வரலாறு

பகுதி –  5

நிரஞ்சனா

 முந்தைய பதிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும் 

நம்பியாரூரர் விழித்து பார்த்த போது தலைக்கு வைத்து படுத்திருந்த செங்கல் தங்ககல்லாக மாறி ஜொலித்தது. இதை கண்டு, “எம் இன்னலை தீர்த்த இறைவனே..!“ என்று போற்றி மகிழ்ந்தார். திருப்புகலூர் ஈசனால் கிடைத்தது இது. “தம்மையே புகழ்ந்து“ என்று தொடங்கும் திருபதிகத்தை பாடினார். தன் ஊரான திருவாரூர் சென்று அங்கு இருக்கும் சிவனை வணங்கி தன் இல்லத்திற்கு சென்றார்.

திருவிழாவை சிறப்பாக செய்து முடித்தார். சில நாட்கள் கழித்து திருநன்னிலத்தில் உள்ள திருகோவிலுக்கு சென்று “தண்ணியல் வெம்மையினன்“ என்ற சிவனை நினைத்து பதிகம் பாடிவிட்டு சென்றார். இப்படியே பல திருதலங்களுக்கு சென்று பல பதிகங்களை பாடினார். சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் திருவாரூக்கு திரும்பினார். தன் கணவர் பல மாதம் கழித்து வந்திருக்கிறார் என்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தாள் பரவையார்.

எண்ணற்ற திருக்கோயில்களுக்கு சென்று வந்த அனுபவத்தை தன் மனைவி பரவையாரிடம் பகிர்ந்து கொண்டார் சுந்தரர். அப்போது பரவை தன் கணவரிடம், “திருமுதுகுன்றப் பெருமான் கொடுத்த பொன்னை திருமணிமுத்தாற்றில் குளிக்கும் போது தவறவிட்டேன்“ என்றாள்.

“அதனால் என்ன…? திருமணிமுத்தாற்றில் தவறவிட்டதை நம் ஊரில் இருக்கும் கமலாயத்திருக்குளத்திலேயே எடுத்து விடலாம்.“ என்றார் சுந்தரர்.

“உங்களுக்கு என்ன ஆனது…? எங்கோ தொலைத்ததை இங்கே தேடினால் எப்படி கிடைக்கும்.?“ என்றாள் பரவை.

“ஏன் கிடைக்காது.? இறைவன் மனம் வைத்தால் எந்த இடத்திலும் கிடைக்கும் வா என்னுடன்“ என்று கூறி குளத்தின் அருகே சென்று சிவபெருமானை வணங்கி குளத்தில் இறங்கினார் சுந்தரர். குளத்தில் தொலைந்து போன பொன்னை தேடினார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை சுந்தரருக்கு.

“எங்கோ விட்டதை இங்கே தேடினால் எப்படி கிடைக்கும்.? ஆற்றில் விட்டதை குளத்தில் தேடினால் கிடைக்குமா.?“ என்று நகைத்தாள் பரவை.

“சிவபெருமானே…நீயே கதி என்று இருக்கும் எம்மை இந்த அவமானத்தில் இருந்து காப்பாற்று.“ என்று வேண்டி, “பொன் செய்த மேனியினீர் என்ற பதிகத்தை பாடினார் சுந்தரர். இந்த குளத்தில்தான் தொலைந்த பொன் கிடைக்கும் என்று முன்பை விட தீவிர நம்பிக்கையை கொண்டார் சுந்தரர். “ஏத்தா திருத்தளியேன்“ என்ற பதிகத்தையும் பாடியவுடன் பல மணிநேரம் போராடி கிடைக்காத பொன்னகை, ஆச்சரியமாக எங்கோ இருந்து, பந்து தணணீர் மேல் மிதந்து வருவது போல் ஒரு பொன்னகையும் மிதந்து வந்து சுந்தரரின் அருகே வந்து நின்றது.  

ஆனால், “இந்த நகை என்னுடையதில்லை.“ என்று மறுத்தாள் பரவை. அதனால் மேலும் சில பதிகங்களை பாடினார் நம்பியாரூரர். பிறகு பரவைக்கு சொந்தமான நகை திரும்ப கிடைத்தது. பழைய நகையுடன் இறைவன் அருளால் புதிய நகையும் கிடைத்தது என்ற இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாள் பரவை. ஒரு பொன் நகைக்காக ஏன் இத்தனை பதிகம் பாட வேண்டும்.? ஒரு பதிகத்திலேயே சிவபெருமான் ஏன் அருளவில்லை? என கேள்வி எழலாம். ஆனால் சிவபெருமான் தமிழ்மொழியின் இனிமையை விரும்புகிறவர். சுந்தரர் மற்றும் சிவஅடியார்களின் – தொண்டர்களின் தமிழ் புலமையை மேலும் மேலும் கேட்டு மகிழவே இவ்வாறு நேரம் எடுத்துக்கொள்வார் என்பதே உண்மை. ஒருவேளை நம்மை போல பதிகம் பாட தெரியாமல் பாடினால், “போதுமடா சாமீ“ என்று முதல் வரியை தொடங்கும் முன்பே நமக்கு உடனடியாக பலன் கிடைக்கலாம்.

ஒருசமயம், பாதயாத்திரையாக சிவதலங்களுக்கு சென்று வர வேண்டும் என்று சுந்தரரின் மனம் விரும்பியது. தன் விருப்பத்தின்படி பாதயாத்திரை புறப்பட்டு ஒவ்வொரு சிவதலங்களாக சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவ்வாறு யாத்திரையில் இருக்கும்போது, பசி கண்களை மறைத்தது. இன்னும் சில நிமிடத்தில் ஏதேனும் உணவு கிடைத்து சாப்பிடாவிட்டால் உயிர் போய்விடும் என்ற நிலைக்கே வந்துவிட்டார் நம்பியாரூரர் என்கிற சுந்தரர்.

சுந்தரர் சற்று மயக்கத்துடன் நடக்க முடியாமல் நடந்தார். தன் பிள்ளை படும் கஷ்டத்தை கண்டு எந்த தாய்  – தந்தைதான் பொறுப்பார்கள்?. நல்ல நண்பனின் துயர் கண்டு யார்தான் கலங்காமல் இருப்பார்கள்?. நம் சிவபெருமான், சுந்தரின் நிலைகண்டு வருந்தினார். தாயுமானவர் எனும் தாய் உள்ளம் படைத்த சிவன், தண்ணீர் பந்தலை உடனே அமைத்து தன் நண்பன் சுந்தரர் வரும் வழியில் காத்து கொண்டு நின்றார்.

“நடக்க பாதை கூட சரியாக இல்லாத காடு போன்ற இப்பகுதியில், யாரோ ஒருவர் – புண்ணிய ஆத்மா தண்ணீர் பந்தல் அமைத்து இருக்கிறார்.“ என்ற மகிழ்ச்சியில் அவர் அருகே சென்று, “இது எம் ஈசனின் கருனையே.“ என்று கூறி கொண்டே தணணீரை குடித்தார் நம்பியாரூரர்.

“என்னப்பா… நெடும் பயணமோ?. உன் பசி உன் கண்களில் தெரிகிறது. என்னிடம் உணவு இருக்கிறது. இந்தா சாப்பிடு.“ என்று தன் அருகில் இருந்த உணவு பொட்டலத்தை சுந்தரரிடம் தந்தார், யாரோ ஒரு புண்ணியவன் வடிவில் நிற்கும் சிவபெருமான்.

“அய்யா… இருப்பதை எனக்கு தந்துவிட்டால் உங்களுக்கு உணவு.?“ என்றார் சுந்தரர்.

“அடேங்கப்பா… நீயாவது கேட்டாயே. என் பணியாளர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?. நான் குளித்து தயாராக இருப்பேன். பெரிய பாத்திரத்தில் எதையோ மூடிக்கொண்டு வந்து, “உங்களுக்கு இன்று இதுதான் உணவு“ என்று சரியாக திறந்துகூட காட்டாமல் உடனே வேகமாக ஓடிவிடுவார்கள். பாவம் அவர்களுக்கு என்ன பசியோ? என்று நானும் கண்டுகொள்வதில்லை. நீயாவது கேட்டாயே பரவாயில்லை.“

சுந்தரர் சாப்பிட்டார். “அய்யா உணவு அற்புதம். நீங்களும் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்கள்“ என்றார் சுந்தரர்.

“இருக்காதா என்ன? என் மனைவி பெரிய சமையல்காரி. எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேருக்கும் ருசியாக சமைத்து போட்டு எனக்கும் வைத்திருப்பாள். நான் அவள் கையால் சாப்பிட்டால்தான் அவளுக்கும் பிடிக்கும். அதனால் நீ இதை சாப்பிடு பரவாயில்லை.” என்றார் இறைவன்.

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பது போல சுந்தரர், சாப்பிட்ட பிறகு ஒரமாக சற்று ஓய்வு எடுத்து உறங்கினார்.

சுந்தரர் ஆனந்தமாக தூங்கி விழித்தார். தனக்கு உணவும் தண்ணீரும் தந்தவரை தேடினார். சுற்றி சுற்றி பார்த்தார். பார்க்கும் இடமெல்லாம் செடிகொடிகளும் மரங்களும் புதருமாகத்தான் காட்சி தந்தது. தான் இருக்கும் இடம் ஒரு காடு என்பதை உணர்ந்தார். குடிதண்ணீர் பந்தலோ அந்த மனிதரோ அங்கு இல்லை. பிறகுதான் உணர்ந்தார். தனக்கு தணணீரும் உணவும் கொடுத்து உபசரித்தது சிவபெருமானே என்று மகிழ்ந்து போனார். சிவபெருமானின் கருணையை எண்ணி ஆனந்தத்தில் திளைத்தார். தன் பயணத்தை தொடர்ந்தார்.

திருக்குருகாவூர் வெள்ளடை என்ற சிவன் கோவிலுக்கு சென்று வணங்கிய பிறகு பல ஊர்களில் இருக்கும் சிவதலங்களுக்கு சென்றார். கற்றவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல், சிவதொண்டரான நம்பியாரூரர் செல்லும் ஊர்களில் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படியே பல ஊர்களில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.

முன்னொரு சமயம், கயிலாயமலையில் ஸ்ரீபார்வதி தேவிக்கு தோழியாக இருந்தவர்கள் கமலினி, அனிந்ததை என்ற இருவர். அதில் கமலினி பூலோகத்தில் பிறந்து சுந்தரருக்கு மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

அனிந்ததை, சங்கிலியார் என்ற பெயரில் பூலோகத்தில் ஞாயிறு என்ற ஊரில் ஞாயிறுகிழார் என்பவருக்கு மகளாக  பிறந்து வளர்ந்து பருவ வயதை அடைந்தாள். “நல் அறிவு, பொறுமை, திறமை இப்படி எல்லாம் நம் மகளிடம் இருக்கிறது. அவளை திருமணம் செய்பவன் பாக்கியம பெற்றவனாக இருக்க வேண்டும்.“ என்று தன் மகளை பற்றி உயர்வாக தன் மனைவியிடம் சொல்லி வருவார் ஞாயிறுகிழார்.

சங்கிலியாருக்கு ஏற்ற நல்ல மணமகனை தேட வேண்டும் என்ற தீவிர முயற்சி எடுத்தார் தந்தை. சங்கிலியாரை பெண் பார்த்து விட்டு சென்றாலே மாப்பிள்ளை வீட்டாருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்படும். சில சமயத்தில் உயிர் பலி கூட நடந்துவிடும். இதனால் சங்கிலியார் இராசியில்லாதவள் என்று ஊர் மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.

“எல்லாம் நல்லதுக்குதான். இந்த நிலையும் மாறும்” என்ற ஒரே நம்பிக்கையுடன் சிவபெருமானின் மேல் பாரத்தை போட்டு வாழ்ந்தார் ஞாயிறுகிழார். ஒருநாள், உறவினர்களின் ஒருவர் ஞாயிறு கிழாரை சந்தித்தார்.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

Feedback:- editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

 ©2011  bhakthiplanet.com   All Rights Reserved 

Posted by on Apr 13 2011. Filed under அறுபத்து மூவர் வரலாறு, ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

2 Comments for “ஆற்றில் தொலைத்த தங்கம் குளத்தில் கிடைத்த அதிசயம்”

  1. ஆர்.குமார்

    இந்த வார தொடரும் நன்றாக இருந்தது. அதிலும் “ பெரிய பாத்திரத்தில் எதையோ மூடிக்கொண்டு வந்து, “உங்களுக்கு இன்று இதுதான் உணவு“ என்று சரியாக திறந்துகூட காட்டாமல் உடனே வேகமாக ஓடிவிடுவார்கள். பாவம் அவர்களுக்கு என்ன பசியோ?“ என்ற வரிகள் நன்றாகவே இருந்தது.

  2. ஆர்.குமார்

    “ஆற்றில் தொலைத்த தங்கம் குளத்தில் கிடைத்த அதிசயம்“ தலைப்பே சூப்பர்.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech