Friday 24th January 2025

தலைப்புச் செய்தி :

சிவ பக்தர்களுக்கு குபேரன் துணை – அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 4

அறுபத்து மூவர் வரலாறு

பகுதி 4

நிரஞ்சனா

 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்

கமலினி திருவாரூரில் வந்து அவதரித்தார். பதியிலார் குலத்தில் பிறந்தார். அதாவது சிவனை தவிர வேறு யாரையும் நினைக்காமல் சிவதொண்டே உயர்ந்த தொண்டு என்று நினைக்கும் குலத்தில் பிறந்தாள். கமலினி பிறந்து சில நாட்கள் ஆனது. குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவாதிரை என்ற நல்ல நாளில் பரவையார் என்று திருநாமம் சூட்டினார்கள். பார்க்கும் போதே தூக்கி கொஞ்ச வேண்டும் போல் இருக்கும் தோற்றமளிக்கும் கலையான முகத்துடன் துருதுருவென இருந்தாள்.

காலம் நகர்ந்தது. குழந்தை பருவத்தை விட்டு பருவ வயதை அடைந்தாள். சிவசக்தியை நினைத்து தினமும் கோயிலில் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அறிவு, திறமை, அழகு, நிதானம், குரல் இனிமை இத்தனையும் கொண்டவள்தான் பரவையார் என்று பெண்களே பரவையாரின் திறமையையும் அழகையும் புகழ்ந்தார்கள்.

நம்பியாரூரர் ஈசனை தரிசித்துவிட்டு ஆலயத்தை விட்டு வெளியேறி வந்து கொண்டு இருக்கையில் அப்போது பரவையார் கோயிலுக்குள் சென்று கொண்டு இருந்தாள். நம்பியாரூரரும் பரவையாரும் எதிர்எதிரே சந்தித்து கொண்டார்கள். “இவள் தேவலோக கன்னியா..? அப்பப்பா என்ன அழகு“ என்று தன் மனதினுள் வர்ணித்தார் நம்பியாரூரர். நம்பியாரூரரை கண்டவுடன் அவளுக்கும் அதே உணர்வு. தன்னையே மறந்தாள் பரவையார்.

இருந்தாலும் சிவனை வணங்கி அவன் நினைவாகவே வாழ பிறந்தவர்கள் நாம் என்ற உணர்வு மனதில் எழுந்தது. அதனால் சட்டென்று சுயநினைவுக்கு திரும்பி, தான் வந்த நோக்கத்தை புரிந்து கொண்டு கோயிலுக்குள் சென்றாள். இரும்பை காந்தம் இழுப்பது போல் பரவையரரை பின் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரர் திருக்கோயிலுக்குள் வரும் முன்பே பரவையார் இறைவனை தரிசித்துவிட்டு பின் வாசல் வழியாக சென்றுவிட்டாள்.

பரவையாரும் சுந்தரரும் வார்த்தைகளால் காதலை சொல்லாமலே ஒருவருக்கு ஒருவர் மனதளவில் காதலை வளர்த்தார்கள். ஒருநாள் சிவபெருமானே தன் அடியார்களின் கனவில் தோன்றி, “சுந்தரருக்கும் பரவையாருக்கு திருமணம் செய்து வையுங்கள்.“ என்றார். அதேபோல் சுந்தரரின் கனவிலும் பரவையார் கனவிலும் ஈசன் தோன்றி,  “நீங்கள் இருவம் திருமணம் செய்து கொண்டு வாழ்வீர்கள்.“ என்று கூறி ஆசி வழங்கினார் இறைவன்..

பரவையாருக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் இறைவனின் மேல் உள்ள பக்தியும் பற்றும் போகாமல் இருவரும் இருந்தார்கள். ஒருநாள் வழக்கம் போல் சிவபெருமானை தரிசிக்க கோயிலுக்கு சென்றார் சுந்தரர். ஈசனை போற்றி வணங்கினார். அப்போது அவர் முன் தாயுமானவர் தோன்றி,

“சுந்தர… நீ என் சிவதொண்டர்களின் வரிசையில் சேர்ந்துள்ளாய். நீயும் பிறப்பு இறப்பு என்பதை கடந்து வாழ்வாய். என் அடியார்களை பற்றி செந்தமிழில் ஒரு பாமாலையை இயற்றி பாடு.“ என்றார் இறைவன்.

“அய்யனே..அடியார்களின் வரலாறுகள் யாம் அறியாதது. அவ்வாரு இருக்க, யாம் எப்படி பாடல் இயற்றுவது.?“ என வினவினார் சுந்தரர்.

தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்பதையே உன் பாடலின் முதல்அடியென கொண்டு இயற்று.“ என்ற பாமாலையின் முதல் வரியை சொல்லி தந்து மறைந்தார் சிவன்.

பெரும் மகிழ்ச்சியுடன் இறைவன் அருளிச் செய்த முதல் வரியை இயற்றி திருப்பதிகத்தை பாடினார் சுந்தரர். குண்டையூர் என்ற ஊரில் வேளாள மரபை சேர்ந்தவர் குண்டையூர்க் கிழார். இவர் சுந்தர நாயனார் மீது அதிகமான அன்பு கொண்டவர். அதனால் சுந்தரர் குடும்பத்திற்கு மாத மாதம்  மளிகை பொருட்களை அனுப்பி கொண்டு இருந்தார்.

சில மாதங்களாக ஊருக்கு போதிய மழை வராததால் அந்த ஊரில் நெல் விளைச்சல் அடியோடு பாதிப்படைந்தது. இதனால் வியபாரத்தில் நஷ்டமும் பண கஷ்டமும் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை விட நம்மை நம்பி கொண்டு இருக்கும் சுந்தரரின் குடும்பத்திற்கு எவ்வாறு விளைச்சல் இன்றி நெல் அனுப்புவது?“ என்ற கவலையில் இருந்தார் குண்டையூர்க் கிழார். உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் எப்போதும் அவர்கள்படும் இன்னல்களை விட அடுத்தவர்கள் படும் சிரமத்திற்குதான் கவலையும் வேதனையும் அடைவர். குண்டயூர் கிழாரும் அவ்வாரே எண்ணி நொந்தார்.

சிவ பெருமான் குண்டயூர் கிழாரின் கனவில் தோன்றி, “கவலைப்படாதே நான் இப்போதே குபேரனை அனுப்புகிறேன். குபேரர் உனக்கு போதிய நெல்மணிகளை கொடுப்பார்.“ என்று கூறினார். திடுக்கிட்டு எழுந்தார் கிழார். எழுந்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார். வானம் தொடும் அளவு நெல்லை குவித்து வைத்திருக்கிறார் குபேரர். மறுநாள், சுந்தரரை சென்று கண்டு இந்த செய்தியை கூற வேண்டும் என்ற ஆவலில் திருவாரூருக்கு சென்றார்.

“உன்னை காண எம் அடியேன் குண்டையூர் கிழார் வந்து கொண்டு இருக்கிறார். நீ அவரை வரவேற்று அழைத்து வா.“ என்று இறைவன் சுந்தரரின் கனவில் தோன்றி சொன்னார். கிழாரும் சுந்தரரும் எதிர்எதிரே சந்தித்து கொண்டார்கள். இருவரும் குண்டையூர் சென்றார்கள். குண்டையூரை அடைந்ததும் சுந்தரர் அதிர்ச்சியடைந்தார். அந்த அளவுக்கு நெல்மணி வானத்தை தொடும் அளவில் குவிந்து கிடந்தது. “நண்பரே… தங்களுக்காக ஈசன் கொடுத்தது இவை. நீங்கள்தான் இந்த அனைத்து நெல்லையும் எடுத்து செல்ல வேண்டும். இது உமக்கே உரியவை.“ குண்டையூர் கிழார்.

“இந்த நெல்மணிகளை மூட்டை கட்டுவதற்கே பல மாதங்கள் ஆகும் போல இருக்கிறதே.? இதை எவ்வாறு எடுத்து கொண்டு செல்வது.? இறைவன் ஒருவனுக்கு கஷ்டத்தை தர வேண்டும் என்றால் தாங்க இயலாதபடி தருகிறார். அதுவே நல்லவற்றை கொடுக்க ஆரம்பித்தால் நம் நிம்மதி இழுந்து விடும் அளவு அள்ளி அள்ளி தருகிறார்.“ என்றார் சுந்தரர். பிறகு தாயுமானவரை வணங்கினார் சுந்தரர். ஆகாயத்தில் சிவபெருமான் தோன்றி,

“கவலை வேண்டாம். எமது பூதகணங்கள் நெல்மணிகளை உன் ஊரில் சேர்த்து விடுவார்கள்.“ என்றார். சிவன் அருளியது போல் சுந்தரர் தம் ஊருக்க வருவதற்கு முன்பே, நெல்மணிகள் சுந்தரரின் இல்லத்தையே முடிய அளவுக்கு நெல்குவிந்து இருந்தது.  இதை கண்ட பரவையாரும் ஊர்மக்களும் அதிர்ச்சியடைந்தார்கள்.

“இந்த நெல்குவியலை நீங்களும் உங்கள் வீட்டுக்கு தேவையான அளவு அள்ளி செல்லுங்கள்.“ என்றார் ஊர் மக்களிடம் சுந்தரர். மக்களும் மகிழ்ச்சியுடன் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெல்லை அவரவர் வீட்டுக்கு அள்ளி சென்றார்கள். அப்படி இருந்தும் அப்படியேதான் இருந்தது. சுந்தரர் இறைவனின் திருவிளையாட்டை எண்ணி மகிழ்ந்தார்.

கோட்புலியார் என்பவர் சுந்தரரை தன் ஊரான திருநாட்டியத்தான்குடிக்கு வர வேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். சுந்தரரும் அவர் அன்புகட்டளைக்கு இணங்கி திருநாட்டியத்தான்குடிக்கு சென்றார். சுந்தரர் தன் ஊருக்கு வருவதை கேட்டு மகிழ்ச்சியடைந்து, தன்னுடைய சேனாதிபதி பதவியை பயன்படுத்தி ஊரையே திருவிழா போல் செய்தார் கோட்புலியார். அரூரருக்கு அரசருக்கு இணையான கௌரவத்தை கொடுத்தார். தன் இல்லத்திற்கு அழைத்து சென்றார். தன் மகள்களை சுந்தரருக்கு அறிமுகம் செய்து வைத்தார். “இரு பெண்களையும் என் புத்திரிகளாக பார்க்கிறேன்.“ என்று கூறி அந்த இரு மங்கைகளுக்கும் ஆசி வழங்கினார் சுந்தரர்.

பிறகு திருநாட்டியத்தான்குடியைவிட்டு பறப்பட்டு, திருவலிவலம் சென்று சிவனை தரிசித்து, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் புகழை பாடல்களாக பாடி மீண்டும் தன் ஊரான திருவாரூக்கு திரும்பினார். திருவாரூரில் திருப்பங்குனி உத்திரத் திருவிழா வந்தது. அந்த விழாவிற்கு சிவதொண்டர்களுக்கு திருத்தொண்டு செய்ய பொருள் தேவைப்பட்டது. இதனால் தன் கணவரான சுந்தரரிடம் வேண்டினாள் பரவையார். திருப்புகழுருக்கு சென்று சிவபெருமானை வணங்கி திருப்பதிகம் பாடி, தன் வேண்டுதலை கூறினார் சுந்தரர். இரவு ஜாமம். இனி ஊருக்கு செல்ல முடியாது என்ற எண்ணத்தில் அந்த கோயில் அருகே இருந்த செங்கல்லையே தலையனையாக அடுக்கி வைத்து உறங்கினார். விடிந்தது. இருள் மறைந்து வெளிச்சத்தை கொடுத்தது. தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த சுந்தரர் வியந்து நின்றார். காரணம் –

(இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும் )

 Feedback:- editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

 ©2011  bhakthiplanet.com   All Rights Reserved                

Posted by on Apr 6 2011. Filed under அறுபத்து மூவர் வரலாறு, ஆன்மிகம், ஆன்மிகம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »