வருவதை உணர்ததும் சகுனம்
நாம் வெளியில் செல்லும் போது சகுனம் பார்ப்பது தவறல்ல. நல்லவற்றையும் ஆபத்துகளையும் முன் கூட்டியே இறைவன் சகுனம் மூலமாக நமக்கு உணர்த்துகிறார். ராமாயணத்தில் இராவணன் யுத்தத்திற்கு புறப்படும் போது சகுனம் சரியில்லாமல் இருந்தது. ஆனால் இராவணன் அலட்சியப்படுத்தினான். அது போல ராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு தன் உறவினர்களுடனும் தன் சொந்த ஊரான அயோதிக்கு புறப்பட்டு செல்லும் நேரத்தில், காகம் முதலிய பறவைகள் இடப்பக்கத்தில் சப்தமிட்டபடி வந்தது. இதை கண்ட தசரதன், “சகுனம் சரியில்லையே… என்ன விபரீதங்கள் வர போகிறதோ..?“ என்று கவலைக்கொண்டார்.
அந்த நேரத்தில் பரசுராமர் ராமனிடம் போர் செய்ய வந்தார். பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் வரும் முன்னதாக பறவைகளும் சில உயினங்களும் அதை உணர்ந்து சப்தம் எழுப்பும். அதுபோல சகுணமும் நம்மை உஷார்படுத்துகிறது. அதனை அலட்சியப்படுத்தாமல் நம் வீட்டிற்குள் வந்து சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் செல்வதே நல்லது. ஏன் என்றால்… தூய்மையான குடிநீரில் கங்கை தேவி இருப்பதால் எந்த தோஷமும் நம்மை அண்டாது.
– நிரஞ்சனா