நந்தனார் வரலாறு
நிரஞ்சனா
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார் நம் பாரதி. அதுபோல்தான் இறைவனும் நம் அன்பையும், பக்தியையும், சேவையையும்தான் பார்க்கிறாரே தவிர, இவர் எந்த ஜாதி-மதம் என்று பார்ப்பதில்லை. இறைவன், எந்த பிறப்பிலும் பேதம் பார்ப்பதில்லை. உருவத்திலும் பேதம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்கள்தான் தங்கள் மனித இனத்திலேயே வேறுபாடு வைத்திருக்கிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு பழியை ஆண்டவன் மீது போடுகிறார்கள்.
நம் வாழ்விலேயே பல தரப்பட்ட மதத்தினரையும் ஜாதியினரையும் சந்திக்கிறோம். அவர்களால் நமக்கு உதவியும் கிடைக்கிறது. அதேபோல் நம்மால் அவர்களுக்கும் உதவ முடிகிறது என்பதை அனுபவத்தில் நாம் பார்க்கிறோம்.
நந்தன்
சோழ நாட்டில் ஆதனூரில் பிறந்தவர் நந்தன். தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன் நெஞ்சிலே உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கி வருபவர். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது தான் இவருடைய வேலை. அதில் கிடைக்கும் பணத்தை தனக்காக இல்லாமல் சிவாலய திருப்பணிகளுக்கு செலவு செய்வார். ஈசன், அந்த செலவுகளை நந்தனின் புண்ணிய கணக்கில் வரவு வைத்தார். நந்தனுக்கு ஒரு மணவருத்தம் இருந்தது. நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்ததால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தார்கள். அதனால் கோயில் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை மனதால் வணங்கி வருவார். எப்படியாவது ஆலயத்திற்குள் சென்று இறைவனை சிவலிங்க ரூபமாக தரிசிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வேண்டி வந்தார்.
சிவபெருமானை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம், “அதெல்லாம் புண்ணியம் செய்தவர்களுக்குதான் கிடைக்கும். நமக்கு அந்த பாக்கியம் இல்லை. நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள். நீ தேவையில்லாத நினைப்பினால் பிழைப்பை கெடுத்துக்கொள்ளதே.” என்று நந்தனின் சமுதாயத்தில் உள்ளவர்களே சொன்னார்கள்.
நந்தனார் தன் கணீரென்ற குரலில் சிவனை நினைத்து பாடல்களை பாடுவார். அதை கெட்டு பொறாமைகாரர்கள் எப்படியாவது நந்தனின் திருப்பணியையும் தடுக்க வேண்டும் என திட்டமிட்டு, நந்தனுக்கு வேலை தந்துக் கொண்டிருந்தவரிடம் ஏதேதோ சொல்லி வேலையில் இருந்து நீக்கினார்கள்.
இதனால் கிடைத்துக் கொண்டிருந்த சொற்ப வருமானமும் இழந்தார். தாம் பட்டினி கிடப்பதை பற்றி கூட பெரியதாக நினைக்கவில்லை நந்தன். சிவபெருமானுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியாமல் தாம் செய்து வந்த திருப்பணி தடைப்பட்டதே என்றுதான் மனம் வருந்தினார்.
நந்தி நகர்ந்தது
திருப்புன்கூரில் இருக்கும் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்று நந்தனுக்கு நீண்டநாள் ஆசை இருந்தது. அதனால் திருப்புன்கூர் சென்றார். வழக்கம் போல் சிவாலயத்தின் வெளியே நின்றபடி சிவலிங்கத்தை தரிசிக்க மூலஸ்தானத்தை எட்டி எட்டி பார்த்தார் நந்தன். சிவலிங்கத்தை கண்ணாற காண முடியவில்லை. காரணம் –
நந்தி மறைத்து நின்றது.
இதை கண்ட நந்தன், “அப்பனே..உன்னை காணவிடாமல் மாடு குறுக்கே நிற்கிறதே.” என்று கலங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத அற்புதம் அங்கே நிகழ்ந்தது.
நந்தி விலகியது. நந்தன் சிவபெருமானை காண வழி விட்டது. நந்தி விலகியதை கண்டு அந்த ஆலயத்தில் இருந்த பக்தர்கள் திகைத்து நின்றார்கள். நந்தன், ஈசனின் கருணையை எண்ணி மகிழ்ச்சியுடன் வணங்கி சென்றார். அதனால்தான் இன்றுவரை திருப்புன்கூர் ஆலயத்தில் நந்தி விலகியே நிற்கிறது என்கிறது ஸ்தலபுராணம்.
சிதம்பரம் அழைத்த நடராஜர்
ஒருநாள் வானத்தில் மேகங்கள் ஒன்றாக கூடி சிவலிங்கமாக காட்சி நந்தனுக்கு காட்சி தந்தது. “நந்தா.. நீ சிதம்பரம் வா” என்று ஈசன் அழைத்தார். அன்றிலிருந்த தாம் சிதம்பரம் செல்ல வேண்டும். திருச்சிற்றம்பலநாதரை தரிசிக்க வேண்டும் என சொல்லியபடி இருந்தார். சிதம்பரம் செல்ல பொருள் வசதி வேண்டி தன் முதலாளியிடம் சென்றார். நந்தனின் சிவபக்தியை பயன்படுத்தி அவரை தன் பண்ணையிலும் வயலிலும் வீட்டிலும் நிறைய வேலை வாங்குவாரே தவிர முதலாளி நந்தனுக்கு பணம் ஏதும் தர மாட்டார். கேட்டால் நாளை தருகிறேன் என்பார்.
நந்தனை யாராவது, “எப்போது நீ சிதம்பரம் செல்வாய்” எனக் கேட்டால், “நாளை போவேன்” என்று சொல்வார். இப்படியே ஆண்டுகள் நகர்ந்தது. முதலாளியும் பணம் தராமல் ஏமாற்றி வந்தார். நந்தனும், “நாளை சிதம்பரம் போவேன்” என்று அப்பாவியாக சொல்லி வந்தார்.
ஒருநாள் நந்தன் பொறுமையிழந்தார். முதலாளியிடம் சென்றார். “சாமீ… நான் சிதம்பரம் போக வேண்டும். எனக்கு உதவி செய்யுங்க.” என்று அழுது கேட்டார். இதனால் முதலாளிக்கு தர்மசங்கடமாகி விட்டது.
“டேய் நந்தா..நீ சிதம்பரம் போயீ என்ன செய்ய போறே.? உன்ன அந்த ஊருக்குள்ளயே விட மாட்டாங்க. அப்புறம் எப்படி கோயிலுக்கு போய் சுவாமியை தரிசிப்பே.” என்றார் முதலாளி.
“சாமீ அதெல்லாம் என்னோட கவலை. நீங்க எனக்கு சிதம்பரம் போக பணம் தந்தா போதும்.” என்றார் நந்தன்.
“சரி…உனக்கு பணம்தானே வேண்டும். அப்படி என்றால் ஒரு வேலை செய். என் வயலுக்கு சென்று, என்னுடைய நாற்பது ஏக்கர் நிலத்தையும் பயிர் செய்து அறுவடை செய்த பிறகு உனக்கு பணம் தருகிறேன். நீ தாராளமாக சிதம்பரம் போ.” என்றார் முதலாளி.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார் நந்தன்.
“என் அப்பனே.. இது என்ன புதிய சோதனை.? இந்த நாற்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலத்தையும் எப்போது பயிர் செய்து அறுவடை முடிப்பது.? என்னால் சிதம்பரம் போகவே முடியாதா?” என்று பாலைவனம் போல இருந்த அந்த விவசாய நிலத்தில் அழுதபடி மயங்கி விழுந்தார்.
நந்தனுக்காக இன்னொரு அற்புதத்தை நிகழ்த்தினார் ஈசன். விவசாய் நிலம் அனைத்தும் பயிர் செய்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கண் விழித்து பார்த்த நந்தன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இறைவனை எண்ணி போற்றி பாடினார். இந்த அதிசயத்தை கண்டவர்கள், முதலாளியிடம் தகவல் சொன்னார்கள். முதலாளி விரைந்தோடி வந்தார். திகைத்து நின்றார். முதலாளியை கண்ட நந்தன் ஓடி வந்தார்.
“சாமீ. பயிர் அறுவடைக்கு தயாராகிவிட்டது. அறுவடை முடிந்தவுடன் நான் சிதம்பரம் போக உதவி செய்வீர்களா?” என்று அப்பாவியாக கேட்டார் நந்தன்.
நந்தனுக்கு இறைவனின் அருள் நிறைந்து இருப்பதை நேரிலேயே கண்டபிறகும் முதலாளி நந்தனை ஏமாற்றுவாரா என்ன.? நந்தன் சிதம்பரம் செல்ல பண உதவி தந்து அனுப்பினார்.
63 மூவரில் ஒருவர்
சிதம்பரம் சென்றார் நந்தனார். ஊருக்குள் செல்ல தயங்கி, தூரத்தில் இருந்தே சிதம்பர கோயில் கோபுரத்தை தரிசித்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோயிலுக்குள் யாரும் அனுமதிக்கவில்லை என்றால் என்ன.? சிதம்பரமே சிவன்தானே என்றுணர்ந்து, சிதம்பரம் மண்ணை கையில் அள்ளி நெற்றியில் பூசி கொண்டு ஊருக்கு வெளியே தங்கி இருந்தார் நந்தனார்.
அன்றிரவு கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் நடராஜப் பெருமான் தோன்றி,
“நம் அடியவன், “திருநாளைப் போவார்” வந்திருக்கிறார். நம் சிதம்பரத்தின் வெளியே தங்கி உள்ளார். சிறப்புகள் பல செய்து நம்மிடம் அழைத்து வாருங்கள்.” என்றார் திருச்சிற்றம்பலநாதர்
மறுநாள் சிதம்பரமே ஒன்றுக் கூடி திரண்டு, பூரண கும்பமரியாதையுடன் “திருநாளைப் போவார்” என்று இறைவனால் அழைக்கப்பட்ட நந்தன் என்கிற நந்தனாரை கோயிலுக்கள் அழைத்துச் செல்லும் போது, கூட்டத்தில் இருந்த ஒரு அந்தணர், நந்தனார் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தார். மற்ற தில்லைவாழ் அந்தணர்களின் செயலை விமர்சித்தார்.
“என்னமோ ஈசன் கனவில் சொன்னாராம். இவர்களும் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தவனுக்கு கும்பமரியாதை செய்து கோயிலுக்குள் அழைக்கிறார்களாம். இதை ஏற்க முடியாது. இறைவன் கனவில் சொன்னது உண்மையாக இருக்குமானால் இங்கே ஒரு அக்னி பரீட்சை வைப்போம். திருநாளைப் போவார் என்று இறைவனே அழைத்ததாக நீங்கள் சொல்லும் இவர் அக்னியில் இறங்கி திரும்பட்டும் பார்க்கலாம்.” சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.
ஆனால் நந்தனார் மனதில் எந்த பதட்டமும் அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை.
“என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்தார் இறைவன். அவையெல்லாம் நானே எதிர்பாராதது. நான் சிதம்பரம் வருவதற்கே ஒரு அற்புதம் செய்து அனுப்பினார். இறைவனின் விருப்பதை யாராலும் தடுக்க இயலாது. அந்த அந்தணர் சொல்வதை போலவே செய்கிறேன்.” என்றார் திருநாளை போவார்.
தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அந்த தீ குண்டத்தில் நந்தனார் கவலையின்றி, “திருச்சிற்றம்பலம்” என ஈசனை நினைத்தவாரே இறங்கினார். இறைவனின் பல அதிசயங்களில் இங்கு ஒன்று நடந்தது. தீயில் இறங்கிய பிறகு, தண்ணீர் குளத்தில் இருந்து எழுந்து வருவதை போல எந்த தீங்கும் இன்றி, பட்டாடை உடுத்தி அழகிய தெய்வீக தோற்றத்துடன் வெளிப்பட்டார் நந்தனார்.
ஆலயத்திற்குள் மணியோசை எழும்பியது. அந்த மணி ஓசை திருநாளை போவார் எனும் நந்தனாரை, “உள்ளே வா” என்று இறைவனே அழைப்பது போல இருந்தது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்தார். கருவரையின் முன்னதாக நின்று நடராஜப் பெருமானை கண்குளிரக் கண்டார் .
அடுத்த நிமிடம் –
தன் தாய்-தந்தையை ஒரு குழந்தை பார்த்ததும் அதன் அருகில் செல்வது போல, நந்தனாரும் நடராஜப் பெருமானை கண்டவுடன் கருவரைக்கு நுழைந்தார். தீப்பிழம்பு தோன்றியது. நந்தனார் ஒரு பெரும் ஜோதியாக இறைவனுடன் ஐக்கியமானார்.
இறைவனுக்கு அனைவரும் ஒன்றுதான். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான அன்பு மற்றும் பக்தியை மட்டும்தான். நாம் தெய்வத்தின் குழந்தைகள் என்பதை ஆணிதரமாக நம்பிக்கையுடன் இறைவனை நினைத்து வாழ்ந்தால் கஷ்டங்கள் பனிபோல் விலகும். வாழ்வில் எந்நாளும் ஏற்றம் ஏற்றம் என்றும் ஏற்றமே.
சிவ சிவ சிவ சிவ
சிவ மயமே ஜெயம் உண்டு
பயம் இல்லை
சொல் மனமே
ஓம் நமசிவாயா !
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved