Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

பகவத் கீதை எதை உணர்த்துகிறது?

நிரஞ்சனா

பகவத் கீதையானது யார் மீதும் அன்பு வைக்காதே என்றோ, உறவு-பாசம்  என்பதை விட வெற்றி என்பதே லட்சியம், காரியத்தில் கண்ணாக இரு என்றோ பகவத் கீதை நமக்கு சொல்லவில்லை. மனிதன், மனித தன்மையோடு எப்படி வாழ வேண்டும் என்கிற வாழ்க்கை நெறியைதான் அது சொல்கிறது.

பொறுமையால் கிடைத்த பகவத் கீதை 

ஒருவர் மன அமைதியில்லாமல் இருந்தால் அவரிடம் யார் என்ன சொன்னாலும், “தயவு செய்து என்னை அமைதியாக இருக்க விடுங்கள். நான் தனியாக இருக்க வேண்டும்.” என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அர்ஜுனர் பாரத போரில் கிருஷ்ணர் சொன்ன உபதேசங்களை எல்லாம் பொறுமையாக கேட்டார். அந்த பொறுமைக்கு கிடைத்த பரிசு, அர்ஜுனருக்கு யுத்தத்தில் வெற்றி. நமக்கு விலைமதிக்க முடியாத பகவத் கீதை.

பாரத போருக்கு முன்னதாக… 

பாண்டவர்களுக்கு நியாயமான உரிமை தராததால் அதுவே போரின் காரணமாக அமைந்தது.

துரியோதனன் ஆணவத்தின் மொத்த உருவமாக இருந்தாலும் அர்ஜுனனுக்கு கௌரவர்கள் மீது வருத்தம் இருந்ததே தவிர, யுத்தம் செய்து கௌரவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும் என்கிற ஆத்திரம் இருக்கவில்லை. இதனால்தான் யுத்த களத்தில் நின்று கொண்டு போர் செய்ய வேண்டிய அர்ஜுனன் தயங்கினான். ஆனால் அர்ஜுனனுக்கு இருந்த அதே மனநிலையில் கௌரவர்களுக்கு இல்லை. பாண்டவர்களை அழித்துவிடவே அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மறைமுகமாக திட்டமிட்டார்கள். கௌரவர்களின் திட்டங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் இறுதியாக நேரடியான யுத்தத்தை தொடங்கினார்கள். யுத்த களத்தில் எதிரே நிற்பது உறவினர்கள் என்றுதான் அர்ஜுனன் நினைத்து தயங்கினானே தவிர எதிரே நிற்பது எதிரிகள் என்று நினைக்கவில்லை. ஆனால் அர்ஜுனனின் இந்த எண்ணம் பாண்டவர்களுக்கு அழிவைதான் தரும் என்பதை உணர்ந்தார் ஸ்ரீகிருஷ்ணர்.

“கௌரவர்களுக்கு பாண்டவர்களாகிய உங்கள் மீது இருக்கும் பகை இன்று யுத்தகளம்வரை வந்து நிறுத்திவிட்டது. உறவினர் என்றோ பந்தபாசம் பார்த்தோ நீ பின்வாங்கினாலும் உன்னை கௌரவர்கள் உயிருடன் விட மாட்டார்கள்.” என்கிற உண்மையை அர்ஜுனனுக்கு விளக்கி, இது தர்ம யுத்தம் என்பதையும் உணர்த்தி அந்த யுத்த களத்திலேயே உபதேசம் செய்து அர்ஜுனனுக்கு மன தெளிவை-தைரியத்தை தந்தருளினார் ஸ்ரீகிருஷ்ணர்.  

பகவத் கீதை தரும் மன தெளிவு 

நிரந்தரமில்லாத இந்த வாழ்க்கையில் ஒழுக்கமும், தர்ம சிந்தனையும், நேர்மையையும் பின்பற்றி வாழ்ந்தோம் என்று சொன்னால், மலையில் இருந்து விழும் அருவி, புண்ணிய நதியில் சேருவதை போன்று நமக்கு இறைவன் உன்னதமான வாழ்க்கையை கொடுப்பார் என்ற தன்னம்பிக்கையும், இப்படிதான் வாழ வேண்டும் என்ற நல்ல சிந்தனையும் தருகிறது பகவத் கீதை.

“நியாயத்திற்காக போராடு. ஒருவருக்கு கிடைக்க வேண்டியதை உரிமையோடு கேட்க வேண்டும். போகட்டும் போகட்டும் என்று விட்டால், நூல் அறுந்த காத்தாடி, காற்று அடிக்கும் திசையெல்லாம் பறந்து சென்று எங்கோ ஒரு கம்பியில் மாட்டி கொள்வது போன்றோ, மரக்கிளையில் மாட்டி கிழிந்து போவதை போன்றோ அல்லது வேறு எவர் கையிலோ சிக்கி அவருக்கு உரிமையாகி பயன் இல்லாமல் ஆகிவிடுகிற நிலையோதான் தரும். அதனால் வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் போகட்டும் போகட்டும் என்றுவிட்டுவிட்டால் அந்த காத்தாடியின் நிலைதான் உண்டாகும்.

எல்லாம் இறைவன் செயல்

“அர்ஜுனா.. இறைவனை காண தவம் இருப்பது போல், வாழ்க்கையை திரும்ப பெற நீ  பல ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தாய். இதுவும் ஒரு வகை தவம். இந்த தவத்திற்கு பலனை நீ அனுபவிக்க வேண்டும். யாருக்காகவும் நீ விட்டு கொடுக்காதே. நீ உரிமையை பெற போர்தான் வழி என்றால் அதற்கும் தயங்காதே” என்று கண்ணன் உபதேசித்தார். இப்படி ஒருவருக்கு உரிமையானதை உரிமையோடு தைரியமாக கேட்கவேண்டும். அதை பெற போராட வேண்டும். என்று பகவத் கீதை சொல்கிறது. 

பகவத் கீதையை ஒருவர் படிக்க படிக்க மேலும் பல வாழ்க்கை தத்துவங்களை உணர்த்துகிறது. ஒருவர் தமது உரிமைக்காக போராடும் போது, சொத்துக்காக மோதுகிறார்கள் செய்கிறார்கள் என்று ஊரார் பேசுவார்கள்  என்று அஞ்சினால் அப்படி அஞ்சுபவர்களுக்கு எதுவும் கிடைக்காது. அப்படி பேசுபவர்கள் நமக்கு உதவி தேவைப்படும் காலத்தில் உதவவும் மாட்டார்கள். அதனால் உரிமைக்காக போராடுவதில் தயக்கம் கூடாது. ஊரார் பேசுவதை கேட்டு துவண்டு போகாவும் கூடாது.

நெருப்பு அணையும் போது அந்த புகை நம் கண்களில் இருந்து நீரை வரவழைக்கும். அதுபோல் ஒருவர் தோல்வியை கண்டால் ஊர் பழிக்கும். அதுவே வெற்றி பெற்றால், எப்படி நெருப்பு தன்னை சுற்றி இருக்கும் பொருட்களை விழுங்கி விடுகிறதோ அதுபோல் ஒருவர் தீமை செய்தவராக இருந்தாலும் வெற்றி என்கிற தேவதை, அவர்களின் முந்தைய தவறுகளை ஊரார் கண்களில் இருந்து மறைத்துவிடும். ஊருக்காக வாழ்வது இருக்கட்டும். தன்னை நம்பி இருப்பவர்களுக்காக வாழவும் பழகி கொள்ள வேண்டும்.

தாம் எடுக்கும் முடிவு தர்மத்தை மதிப்பவர்களுக்கு தீங்கு நேராது இருக்க வேண்டும். எல்லாம் இறைவன் செயல். இறைவனின் அருள் இல்லாமல் ஒரு புல்லையும் கூட மண்ணில் இருந்து எடுக்க முடியாது. இறைவனை நம்பி தம் காரியத்தை செய்ய வேண்டும். இறைவனும் அதற்கு துணையாக இருப்பார். நல்ல காரியங்கள் மற்றவர்களுக்கு தீமையாக தெரிந்தால் அதை பற்றி கவலைப்படக்கூடாது. தர்மத்திற்கு பாதகம் இல்லாதபடி நாம் செயல்பட வேண்டும். நல்ல  செயல்களை செய்யும் போது இறைவன் மீது பாரத்தை போட்டு செய்தால் எதிலும் வெற்றி.

பகவத் கீதை சுருக்கமாக எதை உணர்த்துகிறது என்பதை பார்ப்போம்.

“பற்றுகளை வளர்த்து கொள்ளாதே. சுயதர்மத்துக்காக பாடுபடு. ஈசனை எக்காரணத்திற்கும் மறக்காதே. சுயநலம் இல்லாத பக்தியை செலுத்து. இந்த மெய்ப் பொருளையே புகழிடமாகக் கொள். யாரையும் எதையும் வெறுக்காமல் இரு. எல்லாமே பிரம்ம உணர்வு என்று உணர்ந்து செல்.” என்று மனித வாழ்க்கைக்கு தேவையான உபதேசங்களை ஒரு குருவாக பகவத் கீதை உணர்த்துகிறது.

இப்படி பகவத் கீதையை முழுமையாக படிக்க படிக்க ஒவ்வொரு முறையும் புதிய புதிய நல்ல கருத்துகள்-நல்ல சிந்தனைகள் தோன்றும்.

கீதாச்சாரம்

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்,

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.!”

Feedback: editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here 

© 2011 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Oct 12 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »