விக்கிரமாதித்தன் பார்த்த ஜோதிடம்
ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா?
பகுதி 2
ஜோதிட வல்லுனர் வி.ஜி.கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com
விக்கிரமாதித்தன் பார்த்த ஜோதிடம்
விக்கிரமாதித்தன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய சொன்னார்.
ஜாதகத்தை கணித்த ஜோதிடர், அதிர்ச்சி அடைந்தார். மௌனமாக இருந்தார். உடனே அரசர் ஜோதிடரை பார்த்து என்னவென்று கேட்டார்.
அதற்கு ஜோதிடர்,
“விக்கிரமாதித்தா… உன் மகன் ஒரு மிருகத்தால் இன்னும் சில தினங்களில் தாக்கப்பட்டு இறப்பான்.“ என்று கூறினார்.
விக்கிரமாதித்தன் தாளாத துயரம் கொண்டார். வேதனையால் துவண்டார். “அய்யோ என் மகன் என்னை விட்டு போய் விடுவானா?“ என்று கலங்கினார். “இதற்கு என்ன பரிகாரம்?“ என்று ஜோதிடரை கேட்டார்.
ஜோதிடர், “இதற்கு பரிகாரம் இல்லை. இது ஆண்டவன் எழுதிய விதி.“ என்று கூறி விட்டார். உடனே விக்கிரமாதித்தன், ஜோதிடர் கூறியதை பொய்யாக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் பிராத்தனை செய்து கொண்டார்.
ஜோதிடர் கூறிய தினம் வந்தது. அன்று விக்கிரமாதித்தனால் சாப்பிடக் கூட முடியாமல் மனதில் மரண பயம் எழுந்தது. அதனால் தன் மகனை வெளியே எங்கும் அனுப்பாமல் தன் அரண்மனையில் பத்திரமாக பாதுகாப்பாக ஒரு அறையில் தங்க வைத்தார். தன் மகனை சுற்றி பாதுகாவலர்களை அமைத்தார்.
“யாரையும் என் அனுமதியில்லாமல் என் மகன் அறைக்குள் அனுமதிக்ககூடாது.“ என்று கட்டளையிட்டார். ஒரு ஈ கூட தன் மகனை நெருங்க விடாத அளவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அன்று ஒரு வினாடி, ஒரு யுகம் போல் இருந்தது. இந்த ஒரு நாள் பாதகம் இல்லாமல் போனால் போதும் என்ற மன ஓட்டத்திலேயே இருந்தார் மன்னர் விக்கிரமாதித்தன்.
அடிக்கடி தன் மகனை சென்று கவனித்து வந்தார். சேவகனும் இளவரசனை அவ்வப்போது பார்த்து கொண்டு விக்கிரமாதித்தனுக்கு தகவல் சொல்லி கொண்டு இருந்தார்.
சூரியன் அஸ்தனமாகும் நேரம்.
“அப்பாடி…. எப்படியோ பாதி பொழுது சென்றுவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் விடிந்து விடும். இதுவரை வராத யமன் இனி வரவா போகிறான்.? என் நகரத்துக்கு, அதுவும் அரண்மனைக்குள் எப்படி ஒரு மிருகம் வரும்.?“ என்ற மகிழ்ச்சியால், “என் மகனை பார்த்து விட்டுவா“ என்று சேவகனிடம் கட்டளையிட்டார் மன்னர் விக்கிரமாதித்தன்.
சேவகன் சென்று பார்த்தான். அலறினான்.
எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்தே விட்டது.
இளவரசனை கண்ட காட்சியை பார்த்து மனம் பதறி,
“மன்னா…..“ என்று கதறி கொண்டே ஒடி வந்தான் சேவகன்.
விக்கிரமாதித்தனை பார்த்து கதறி அழுதான். சேவகனின் கதறலை கண்ட விக்கிரமாதித்தன், ஏதோ விபரீதம் என்று உணர்ந்தாரே தவிர ஒன்றும் விளங்கவில்லை. பதறி அடித்து கொண்டு தன் மகன் இருக்கும் அறைக்கு ஒடினார். அங்கே தன் மகனை கண்ட விக்கிரமாதித்தன், அதிர்ச்சியில் அசையாமல் சிலையாக நின்றார்.
விக்கிரமாதித்தனின் மகன் இறந்து கிடந்தான்.
எல்லோரும் மன்னரை சமாதானம் செய்தார்கள். சில நிமிடம் கழித்து அரசர் சுயநினைவுக்கு வந்தார். உடனே ஜோதிடரை அழைத்து வரச் சொன்னார்..
“ஜோதிடரே… என் மகன் ஒரு மிருகத்தால் இறப்பான் என்றீர்… ஆனால் எந்த மிருகமும் என் மகனை கொல்லவில்லை. ஆனால் இறந்து கிடக்கிறான். உன் ஜோதிடம் பொ்யயாகிவிட்டது. பொய் உரைத்த உனக்கு இப்போதே மரண தண்டனை.“ என்று உத்தரவிட்டார் விக்கிரமாதித்தன்.
“மன்னா… நான் கணித்தது தவறாகவில்லை. அங்கே பாருங்கள்… ஒரு மிருகத்தால்தான் உங்கள் மகன் இறந்திருக்கிறான். நன்றாக இறந்த உங்கள் புதல்வனை உற்று பாருங்கள்.“ என்றார் ஜோதிடர்.
இறந்து கிடக்கும் மகனை பார்த்தார். அவன் உடலில் இரும்பு குழாயில் ஏற்றப்பட்ட அந்த நாட்டின் கொடி இருந்தது. கொடியில் பன்றியின் சின்னம் பதித்திருந்தது. அது அந்த நாட்டின் சின்னம்.
நடந்தது இதுதான்….
தனி அறையில் தங்க வைக்கப்பட்ட விக்கிரமாதித்தனின் மகன், “என் தந்தைக்கு வேறு வேலை இல்லை“ என்று சேவகனிடம் கூறிவிட்டு காற்று வாங்க உப்பரிகையில் கொஞ்ச நேரம் உலாவிக் கொண்டிருந்தான் இளவரசன். அப்போது பலத்த காற்று வீசியது. அந்த காற்றில் விக்கிரமாதித்தனின் அரசு சின்னமான பன்றியின் மிருகசின்னம் கொடியில் பதித்திருந்தது. அது இளவரசனின் தலையில் விழுந்து இறந்து போய்விட்டான். ஜோதிடர் கூறியது உண்மைதான் என்று விக்கிரமாதித்தன் உணர்ந்தார்.
அந்த ஜோதிடர்தான் “வராக மிகிரர்.“ ஜோதிட உலகின் மகாமேதை என போற்றப்படுபவர். ஆகவே ஜோதிடம் என்பது உண்மையே. ஜோதிடம் பாதகத்தை மட்டும் சொல்லாது, ஏழையாக இருந்தவன் கோடிஸ்வரன் ஆவான் என்கிறது.
அது எப்படி..? – பார்ப்போம்.
(அடுத்து வரும் உண்மைகள்)
ஜோதிட வல்லுனர் வி.ஜி.கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com
the king you have mentioned was not Vikramadhithyan. He is the the Great Chandraguptha-II