இறைவன் சூட்டிய பெயர் குருவாயூர்
மகிமை நிறைந்த குருவாயூர் – பகுதி – 2
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
குருவையும், வாயுவையும் அழைத்துக் சென்று கொண்டிருந்த பரசுராமர், ஒரு இடத்தில் நின்றார். அந்த இடம் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், அழகாகவும் இயற்கை வளமுடன் இருந்தது. “அடடா.. அற்புதம். என்னவொரு இயற்கை செழிப்பான இடம். இந்த இடம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறைவனே இங்கு இருப்பதாக ஓர் உள்ளுணர்வு எனக்கு உண்டாகிறது.” என்றார் குருபகவான். “ஆமாம் ஆமாம்… எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது.” என்று ஆமோதித்தார் வாயு பகவான். அப்போது அங்கிருந்த தாமரை குளத்தில் இருந்து, சிவனும்-சக்தியும் தோன்றி, “நீங்கள் வைத்திருக்கும் விக்கிரகத்தை இங்கேயே வைத்து பூஜிக்கவும். இந்த இடத்திற்கு சக்தி அதிகம். இங்கே ஸ்ரீமகாவிஷ்ணு விரும்பி வசிப்பார். எதிர்காலத்தில் இங்கு வரும் பக்தர்களுடைய குறைகளை நீக்குவார்.
குருவும் வாயுவும் ஆகிய நீங்கள் இருவரும் பெரும் முயற்சி எடுத்து இங்கு வந்திருப்பதால் உங்கள் பெயரிலே இந்த ஊர் அமையட்டும். இன்று முதல் இந்த ஊருக்கு உங்கள் இருவரின் பெயரையும் சேர்த்து, (குரு-வாயு-ஊர்) “குருவாயூர்” என்று அழைக்கப்படும். குருவாயூர் என்ற பெயர் உலகமெல்லாம் ஒலித்து புகழ் பெறும்.” என்று சிவபெருமானும்-அன்னை சக்தி தேவியும், குரு-வாயு-பரசுராமர் ஆகிய மூவருக்கும் ஆசி வழங்கி மறைந்தார்கள். அம்மூவரும் இறைவன் கூறியது போல் அந்த ஊரை வழிப்பாட்டுக்குரிய இடமாக மாற்றி, தாங்கள் கொண்டு வந்த விக்கிரகத்தை வைத்து பூஜித்தார்கள்.
கோவில் உருவான கதை
குருவாயூர் கிருஷ்ணரின் மகிமையை தெரிந்து கொண்ட கட்டிட சாஸ்திர நிபுணரான விஸ்வகர்மா, கிருஷ்ணருக்கு அழகிய கோவில் ஒன்றை கட்டவேண்டும் என்ற விருப்பத்தில் கட்டிட சாஸ்திர நுணுக்கத்தில் இந்த கோவிலை கட்டினார். சிறிய இடத்தில் இருந்த விக்கிரகத்தை கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்தார் விஸ்வகர்மா.
சர்ப்ப தோஷத்தை நீக்கும் சக்தி படைத்தவர் குருவாயூரப்பன்
பாண்டவர்கள் ஐவரும் பல வருடங்கள் கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்று, தங்களின் நாட்டை சுபிட்சமாக நடத்தி வந்தார்கள். காலங்கள் ஓடியது. பாண்டவர்களுக்கு வயதானது. நம்முடைய இளம் வயதில்தான் குடும்ப பகை, யுத்தம் என்று அமைதி இல்லாமல் கழிந்துவிட்டது. மிச்சம் இருக்கும் கடைசி காலத்திலாவது ஆட்சி-அதிகாரம் என்கிற எந்த தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக இருக்க கானகங்களில் வாழ்க்கை நடத்த முடிவு செய்கின்றனர். அதனால் தங்கள் பேரனான பரிக்ஷித்திடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.
பரிக்ஷித், தன் நாட்டை நன்றாக ஆட்சி செய்துவந்தார். தக்ஷகன் என்ற முனிவர். அவர் நாகலோகத்திற்கு அரசனாக திகழ்ந்தவர். ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தால், பரிக்ஷித்தை, “நீ நாகம் தீண்டி இறப்பாய்.” என்று சபித்து விடுகிறார். முனிவர் சபித்தது போல் பரிக்ஷித் நாகம் தீண்டி இறந்தான்.
இதன் பிறகு பரிக்ஷித்தின் மகனான ஜனமேஜயன் அரசரானார். “தன் தந்தை நாகம் தீண்டி இறந்ததால், இனி நாகங்களே எங்கும் இருக்கக்கூடாது. அத்துடன் சபித்த முனிவரான தக்ஷகனும் இருக்கக் கூடாது. எல்லா சர்ப்பங்களையும் சாகடிக்க வேண்டும்” என்ற நோக்கத்தில், ஒரு பெரிய யாகத்தை நடத்தினார். அதில் ஆயிரக்கணக்கான பாம்புகள் அக்னிக்கு இரையானது. இதை கண்ட முனிவரான தக்ஷகன் பயந்துப் போனார். அதனால் அவர், ஆஸ்திகன் என்ற பிராம்மணனிடம் தமக்கு வரப் போகும் ஆபத்தைச் சொல்லி வருந்தினார்.
ஆஸ்திகன், ஜனமேஜயன் அரசரிடம் சென்று, அரசனுடைய தவறை பொறுமையாக எடுத்துச் சொன்னார். ஆஸ்திகனின் ஆலோசனையை ஏற்று மனம் திருந்தினார் ஜனமேஜயன். இதுநாள்வரை பல பாம்புகளை கொன்றதால் அரசருக்கு சர்ப்பதோஷம் உண்டானது. அவர் ஜாதகத்தில் இருந்த யோகங்கள் எல்லாம் மறைந்தது. அவருக்கு தொழுநோய் உண்டானது. இதற்கு பல வைத்தியர்களை பார்த்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இனி வாழ்வதே வீண் என்ற முடிவில் மரணத்தை தேடினார் ஜனமேஜயன்.
இதை அறிந்த ஆத்ரேய என்ற முனிவர், “நீ எதற்கும் கலங்காதே. உனக்கு உண்டாகி இருக்கும் சர்ப்பதோஷத்திற்கு இதுநாள்வரை நீ பரிகாரம் காணாததால், உன் விதியின் பயனால் தொழுநோய் ஏற்பட்டிருக்கிறது. பாம்பையே படுக்கையாக வைத்திருக்கிறார் ஸ்ரீமகாவிஷ்ணு. கிருஷ்ணரோ பாம்பின் தலையில் தன் பாதத்தை வைத்திருப்பவர். வைகுண்டத்தில் தன்னை தானே வழிப்பட்ட கிருஷ்ணரின் விக்கிரகமானது குருவாயூரில் இருக்கிறது. அவ்வூர் சென்று கிருஷ்ணரை தரிசித்து வணங்கு. சர்ப்பதோஷம்- காலசர்ப்பதோஷம் இப்படி எது இருந்தாலும் குருவாயூர் சென்றால் நீங்கும்.” என்றார் ஜனமேஜயனிடம் ஆத்ரேய முனிவர்.
முனிவர் சொன்ன உடனே, குருவாயூர் விரைந்து சென்றார் ஜனமேஜயன். மேலும் குருவாயூரில் உள்ள கிருஷ்ணரை அன்புடன் பூஜித்தும், தியானித்தும் பத்து மாதங்களாக வழிப்பாடு செய்தார். பக்திக்கு கட்டுப்படும் கிருஷ்ணர், அரசரின் அன்பான பக்திக்கும் கட்டுப்பட்டார். ஜனமேஜயனுக்கு பூரண நலத்தை அருளினார். தொழுநோய் படிப்படியாக நீங்குவதை கண்ட மன்னர் மகிழ்ச்சியடைந்தார். தன் நோய் முழுமையாக நீங்கிய பின்னர் குருவாயூர் கோவிலை புதுப்பித்தார்.
பேசும் சொல்லே செல்வமாக மாறும் என்ற இறைவன்
ஜனமேஜயனுக்கு பிறகு இந்த கோவில் இன்னொரு அரசரின் கட்டுப்பாட்டில் வந்தது. அவர் வைணவராக இருந்தாலும், ஏனோ அந்த அரசர் குருவாயூர் கோவிலை சரியாக பராமரிக்காமல் விட்டார். இதனால் குருவாயூர் கிருஷ்ணர் கோவில் கலையிழந்து பாழடைந்த கோவிலை போல் இருந்தது. இதை கண்ட மக்கள் மிகவும் வருந்தினார்கள். சக்தி வாய்ந்த கோவிலாக திகழ்ந்த இந்த ஆலயம் இன்று, ஒரு தீபம் ஏற்ற கூட பணவசதியில்லாமல் திண்டாடுறதே, கோயிலும் சிதிலம் அடைந்து வருகிறதே, இந்த நிலையை மாற்ற யாராவது வர மாட்டார்களா? என்று பொதுமக்களும் பக்தர்களும் கலங்கினார்கள்.
ஒருநாள் ஒரு பெரியவர், “எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. எனக்கு ஏதேனும் உணவு இருந்தால் கொடுங்கள்.” என்று ஒருவனிடம் கேட்டார். அவனோ கேலியாக, “நீ குருவாயூர் கோவிலுக்கு போ. நிச்சயம் உனக்கு போதும் போதும் என்று அளவுக்கு உணவு கொடுப்பார் அங்குள்ள கிருஷ்ணர்” என்று குருவாயூர் கோயிலின் அன்றைய நிலையை நன்கு அறிந்தும் குருவாயூர் கிருஷ்ணரை கிண்டலாக பேசினான்.
அந்த பெரியவரும், இவன் கூறுவது உண்மையாகதான் இருக்கும் என்று நம்பி குருவாயூர் கோவிலுக்கு சென்று, கோவிலில் இருந்தவரிடம், “அய்யா..எனக்கு உணவு இருந்தால் கொடுங்கள். மிகவும் பசியில் இருக்கிறேன்.“ என்றார். இதை அருகில் இருந்து கேட்டு கொண்டு இருந்த ஒரு சிறுவன், “தாத்தா இங்கேயே இருங்கோ. நீங்க சாப்பிட ஏதாவது உணவு கொண்டு வரேன்.” என்று கூறினான்.
அந்த சிறுவனின் சொல்லை கேட்ட பெரியவர், “ஏதும் இல்லை என்று சொல்லாமல் இருப்பதை கொடுக்கிறேன் என்கிறாயே. இனிமையாக பேசும் சொல்லே செல்வமாகும். இதனால் இந்த கோவிலில் எல்லா செல்வங்களும் நிறைந்து இருக்கும்.“ என்று ஆசி கூறி சென்றார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மீண்டும் புகழ் பெற்று செல்வம் குவிந்தது.
குருவாயூர் கோவிலில் செல்வங்கள் குவிய ஆரம்பித்ததால் எதிரிநாட்டு அரசர்கள் இந்த கோவிலில் இருக்கும் செல்வங்களை கொள்ளையடிக்க வந்தார்கள். அவர்களிடம் கிருஷ்ணரின் பக்தர்களான மன்னர்கள் போராடி யுத்தம் செய்தபோது, பாண்டவர்களுக்கு கிருஷ்ணபரமாத்மா உதவி செய்தது போல், குருவாயூர் கிருஷ்ணரும் தன் நாட்டின் மன்னர்களுக்கு உதவி செய்தார்.
குருவாயூர் கிருஷ்ணரை வணங்கினால் சர்ப்பதோஷம்- காலசர்ப்பதோஷம் நீங்கும் என்கிறது ஸ்தலபுராணம். தோஷங்கள் யாவும் நீங்கி சந்தோஷத்தை பெற நாம் குருவாயூர் சென்று கிருஷ்ணரை வணங்குவோம்.
Feedback: editor@bhakthiplanet.com
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
© 2011 bhakthiplanet.com All Rights Reserved