வில்வத்தினால் கிருஷ்ணருக்கு கிடைத்த வெற்றி
நிரஞ்சனா
குழந்தைகள் தூங்கும் போது எழுப்பாதே என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள் இல்லையா? அதற்கு காரணம் என்ன?குழந்தை பருவத்தில்தான் தன்னை மறந்து நிம்மதியாக தூங்க முடியும். வளர்ந்த பிறகு பரப்பரப்பான வாழ்க்கை சூழலில் நிம்மதியான தூக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்பதால்தான் “தூங்குகிற குழந்தையை எழுப்பாதே“ என்று பெரியவர்கள் நாசுக்காக சொல்லி வைத்தார்கள்.
ஆனால் பகவான் கிருஷ்ணருக்கோ தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போதே பிரச்சனைகள் தொடங்கிவிட்டது. கம்சன், கிருஷ்ணரை கொல்ல ராட்சசியை ஏவினான். கடைசியில் கம்சனே கிருஷ்ணரை கொல்ல வந்தான். இத்தனை பிரச்சனைகளையும் தன் உடல் பலத்தால் எதிரிகளை சர்வ சாதாரணமாக வீழ்த்தி வெற்றியும் பெற்றார். அத்துடன் கஷ்டங்கள் முடிந்ததா? இல்லையே. மெகா தொடர் போல இன்னல்கள் நீண்டு கொண்டே போனது. தைத்திய வீரர்கள், யாதவ வீரர்களை துன்புறுத்த துவங்கினார்கள். யாதவ வீரர்களை துவாரகாபபுரியில் பத்திரமாக வைத்திருந்தார் கிருஷ்ணர். இதை தெரிந்து கொண்ட தைத்திய வீரர்கள் துவாரகாபுரிக்கு படை எடுத்தார்கள். பட்டகாலிலேயே அடிபட்டுக்கொண்டிருந்தால் ரணம் ஆராமல் பாதிப்பு அதிகம் ஆகத்தானே செய்யும். அதுபோல் தைத்திய வீரர்கள் செய்யும் அட்டகாசத்தை கண்டு மனம் கலங்கினார் கிருஷ்ணர். தன் மனக்கவலையை உபமன்யு முனிவரிடம் சொல்லி வேதனைப்பட்டார்.
“கண்ணா…நீ ஈசனை நினைத்து பூஜைசெய். வில்வ இலையால் அர்ச்சனையும் செய். சிவனருளால் சகல சத்துருக்களையும் வென்று விடுவாய்.“ என்று ஆசி கூறினார் உபமன்யு முனிவர்.
முனிவர் கூறியது போல் சிவபூஜையை செய்ய துவங்கினார் ஸ்ரீ.கிருஷ்ணர்.
பரமாத்மாவின் பூஜையில் மகிழ்ந்த ஈசன் பார்வதியுடன் அருட்காட்சி தந்தார். “விரும்பிய வரத்தை கேள்“ என்றார் அகிலாண்டேஸ்வரன்.
“சர்வேஸ்வரா… எனக்கு எதிரிகளை சம்ஹாரம் செய்யும் மனோ தைரியத்தையும் உடல் வலிமையும் தந்தருளுங்கள்.“ என்றார் கிருஷ்ணர்.
“எனக்கு இஷ்டமான வில்வ இலையால் என்னை அர்ச்சித்ததால் இன்னும் பல வரன்களையும் தருகிறேன். கருமை நிற கண்ணா, உன்னை பார்ததும் விரும்பும்படியான வசீகரத் தேஜஸ்சையும், தனதானியத்துடன் நீ சௌபாக்கியமாக வாழ நல்வரத்தையும் தருகிறேன்.“ என்றார் ஈசன்.
உடனிருந்த பார்வதிதேவி, “உங்களை வணங்குவோருக்கு சுகமான வாழ்க்கையும் அழியாத புகழும் கிடைக்கப்பெறும்.“ என்றார்.
நூறு பேர்களுக்கு மேல் பலசாலியும், சகுனியை போல் புத்திசாலித்தனமும் கொண்ட கௌரவர்களை வெறும் ஜந்து பேர் கொண்ட பாண்டவர்கள் கிருஷ்ணனின் துணையுடன் கௌரவர்களை வென்றார்கள். கிருஷ்ணர் வில்வ இலையால் ஏழு மாதம் சர்வேஸ்வரனை அர்ச்சனை செய்து வணங்கியதால் “வில்வேஸ்வரர்“ என்ற பெயரும் சிவலிங்கத்திற்கு உண்டு.
நாமும் வில்வ இலையால் ஈசனை அர்ச்சனை செய்தால் சகல பாக்கியங்களும் வற்றாத செல்வங்களும் சிவனருளால் பெறுவோம். ****