சனி பகவானின் தொல்லை தீர்க்கும் திருநீறு
விபூதியின் மகிமைகள்
நிரஞ்சனா
வங்கதேசத்தில் “புஜபலன்“ என்ற அரசன் நேர்மையாக ஆட்சி செய்து வந்தான். இந்த அரசன் தன் பிறந்தநாள் அன்று அந்தணர்களுக்கு ஏராளமான தானங்களை வழங்கினான். இதை கேள்விப்பட்ட அந்தணர்கள் திரண்டு வந்தார்கள்.
விதர்ப்ப தேசத்தில் இருந்து “சுசீலன்“ என்ற அந்தணரும் வந்தார். இவரை கண்ட மற்ற அந்தணர்கள் “அரசே நீங்கள் சுசீலனுக்கு பரிசு வழங்கி விடுங்கள். அவர் வாங்கிய பிறகு நாங்கள் பெற்றுக்கொள்கிறோம். இவர் சகல சாஸ்திரங்கள் தெரிந்தவர். உலகநாயகனான ஈசனை வணங்குபவர். இவருக்கே முதல் மரியாதையை வழங்குங்கள்“ என்றனர் மற்ற அந்தணர்கள்.
“சரி… உங்கள் விருப்பமே என் விருப்பம்“. என்று கூறி சுசீலனுக்கு முதலில் தானம் கொடுத்தார் அரசர்
“அரசரே… நீங்கள் தானம் செய்யும் முன் விபூதியை பூசிக் கொண்டு தானம் செய்தால் உங்களுக்கு புண்ணியம் எற்படும். விபூதி செல்வத்தின் சின்னம். மங்களகரமான திருநீறில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்கிறாள் என்கிறது சாஸ்திரம்“ என்றார் சுசீலன்.
“தானம் வாங்க வந்த நீ எனக்கு உபதேசம் செய்கிறாயா.? உன் ஆலோசனை எனக்கு வேண்டாம்“ என்றார் மன்னர்.
“விபூதியை மதிக்காமல் நீ கொடுக்கும் தானத்தை நான் ஏற்று கொள்ளமாட்டேன். விபூதி வேண்டாம் என்று ஆணவமாக கூறிய உன் வாயாலேயே… “திருநீறு கொடுங்கள்“ என்று என்னிடம் கேட்கும் காலம் வெகுதொலைவில் இல்லையப்பா” என்றார் அந்தணர்.
சில வருடங்கள் நகர்ந்தது. ஒருநாள்… எதிர்நாட்டு அரசன் புஜபலனின் நாட்டை கைபற்றி புஜபலனை கொல்ல படையோடு வந்தான். எதிரிகளிடம் மாட்டினால் உயிர் போய்விடும் என்பதை உணர்ந்து தன் மனைவியை அழைத்து கொண்டு நாட்டை விட்டே ஒடிவிடடான் புஜபலன். யார் ஆதரவும் இல்லாததால் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான். ஒரு நாள் புஜபலன், ஒருவரின் அருகில் தயங்கி தயங்கி வந்தான். அங்கே அந்தணர் சுசீலன் நின்றுகொண்டிருந்தார்.
புஜபலனை அடையாளம் கண்டுக்கொண்டார். “என்ன அரசரே… சௌக்கியமா?“ என்றார் சசீலன்.
“உன் சாபத்தால் நான் இப்படி சௌக்கியமாகவே இருக்கிறேன்“ என்று தன் கையில் இருந்த திருஒட்டை காட்டி பேசினான் புஜபலன்.
“அய்யா… என் சாபத்தால் உங்களுக்கு இந்த நிலையில்லை. எல்லாம் ஈசனின் விளையாட்டு.. சரி நடந்தது நடந்தைவையாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிப்பவனே அறிவாளி. நீ இப்போதாவது என் பேச்சை கேள். நான் உனக்கு திருநிறு தருகிறேன். அதை நீ உடல் முழுவதும் பூசிக்கொண்டால் மீண்டும் நல்ல நிலையை பெறுவாய்.“ என்றார் சசீலன். அதன் படி செய்தான் புஜபலன். பிச்சைகாரனாக காட்சி தந்த அவன் முகம், இப்போது ஆயிரம் சூரியன் கூடி நிற்பதை போல் பிரகாசமாக இருந்தது.. தன் மனைவியை அழைத்து கொண்டு தன் நாட்டுக்கு சென்று அங்கு இருந்த தன் விஸ்வாசியான மந்திரிகளையும் நண்பர்களையும் சந்தித்து மறுபடியும் போர் புரிந்து தன் நாட்டை கைப்பற்றினான் புஜபலன்.
“சனி பகவானின் தொல்லை நீங்க வேண்டும் என்றால் விபூதியை அணிய வேண்டும்.“ என்கிறார் ஷுத்வா முனிவர்.
கிருபானந்தா வாரியார் சுவாமிகள், விபூதியின் மகிமையை அற்புதமாக வர்ணித்து இருக்கிறார். மற்ற பொருட்களை நெருப்பில் சுட்டால் கருப்பாகும். ஆனால் சங்கையும் சானத்தையும் சுட்டால் வெள்ளையாகவே காட்சி தரும். வெண்மை ஸ்ரீ மகாலஷ்மியின் நிறம். விபூதியை செல்வம், பஞ்சாச்சரம் என்பார்கள். நீர் – நெருப்பு – காற்று – ஆகாயம் – பூமி இவைகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் சிவபெருமான். அவருக்கு பிடித்த விபூதியை பூசிக்கொண்டால் மனம் செம்மையாகும். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை.
தங்கம் போன்று தங்க பஸ்பமும் முக்கியமானது. இது மருத்துவ குணம் கொண்டது. அதுபோல், தெய்வமாக வழிபடும் பசுவின் சாணத்தை விட சாணத்தின் பஸ்பமான விபூதிக்கு அதிக சக்தி நிறைந்தது. மற்றவர்களுக்கு தானம் செய்யும் முன் நெற்றியில் விபூதியை பூசி கொண்டு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பிறருக்கு கொடுக்கும் தானத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
என்னதான் மின்சாரத்தை வீட்டுக்குள் இணைப்பு தந்தாலும், அதற்கு முறையாக “எர்த்“ கொடுக்க வேண்டும் அல்லவா? “எர்த்“ சரியாக இருந்தால் ஆபத்தில்லைதானே? “எர்த்“ இல்லை என்றால் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது – “சுவிட்சை“ போட்டவன் அந்த வீட்டில் இருக்க மாட்டான் அவ்வளவுதான்.
அதுபோலதான், நம் கைகளால் ஒருவருக்கு தானம் செய்த பிறகு நம் கைகளில் அடு்த்த நிமிடம எதுவும் இல்லாமல் வெறும் கையாகதானே இருக்கும். அதனால்தான் செல்வத்திலேயே உயர்ந்த செல்வம் விபூதி. அதை நெற்றியில் இட்டுக் கொண்டு தானம் செய்ய வேண்டும். ஆனால் விபூதியை அதிகாலையிலோ அல்லது மாலை விளக்கு வைக்கும் நேரத்திலோ நம் வீட்டில் இருந்து விபூதியை வெளியாட்டுகளுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் ஸ்ரீமகாலஷ்மியை நம் வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு சமமானது என்கிறது சாஸ்திரம்.
“விபூதியை அணிந்து கொண்டால் ஸ்ரீருத்திரனின் ஆசியால் சகல காரியங்களும் தடையில்லாமல் நடக்கும்“ என்று தர்மருக்கு பீஷ்மர் விபூதியின் மகிமையை பற்றி கூறினார்.
விபூதியை எந்த விரலால் தொடக்கூடாது.?
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டுவிரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரலாலும் – கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
I Thanks Niranjana madam realy wonder i get more information about vibuthi.
It is great protective prasatham of god.