Friday 10th January 2025

தலைப்புச் செய்தி :

உச்சி பிள்ளையாரை வணங்கினால் உசத்தியான வாழ்க்கை ஏற்படும்

நிரஞ்சனா

திருச்சி உச்சி பிள்ளையார் கோயில்

திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. விநாயகப் பெருமான் மிகவும் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தரிசனம் தருவதால் உச்சிபிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவரை தரிசிக்க 400மேற்பட்ட படிகள் ஏறிதான் தரிசிக்க முடியும். இத்தனை உயரத்தில் விநாயகர்  அமர்ந்த காரணத்தை பார்ப்போம்.  

திருச்சிக்கு வந்து மலைமேல் அமர்ந்தார் உச்சிபிள்ளையார்

ஸ்ரீராமர், இராவணனிடம் போர் செய்து சீதையை மீட்டு வந்தார். சீதையை மீட்க விபீஷணனும் துணையிருந்ததால் அசுரகுலத்தில் பிறந்தவனாக இருந்தும் இராவணனுடைய தம்பியாக இருந்தும் நியாயத்தின் பக்கம் இருந்து  நல்ல எண்ணத்துடன் உதவி செய்ததால் ஸ்ரீராமர் விபீஷணன் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அதனால், ஸ்ரீராமர் வணங்கி வந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை விபீஷணனிடம் தந்து, “இந்த விக்கிரகத்தை நல்லமுறையில் நீ பூஜை செய்து வந்தால் பல நன்மைகள் ஏற்படும்.” என்று கூறி ஆசி வழங்கி விபீஷ்ணனிடம் ஸ்ரீரங்கநாதரின் சிலையை கொடுத்து, “இந்த விக்கிரகத்தை நீ இலங்கைக்கு சென்று சேரும் வரை எந்த இடத்திலும் வைக்க வேண்டாம். அப்படி வைத்தால் வைத்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் தங்கிவிடுவார். மீண்டும் விக்கிரகமாக உள்ள அவரை தூக்க உன்னால் இயலாது.” என்றார் ஸ்ரீஇராமர்.

அசுரகுலத்தில் பிறந்தவனிடம் ஸ்ரீரங்கநாதர் சிலையை தந்து அவன் முறையாக வழிப்பட்டால் நிச்சயம் விபீஷணன் யாரும் வெல்ல முடியாத அசுரகுல தலைவனாக திகழ்வான். அவன் நல்லவனாக இருக்கும் வரை அது நல்லதுதான். மாறுவது மனம் என்பார்களே அப்படி ஒருவேளை விபீஷணனின் நல்ல குணம் மாறி, தன்னுடைய பிறவி குணமான அசுரத் தன்மையை வெளிப்படுத்தினால் அது நமக்கு ஆபத்து என எண்ணிய தேவர்கள், ஸ்ரீஇராமர் விபீஷணனிடம் தந்த சிலையை எப்படியாவது வாங்கியே தீர வேண்டும் என்ற முடிவு செய்தார்கள்.

அதனால் தங்கள் பயத்தை விநாயகரிடம் சொல்லி முறையிட்டார்கள். “அமைதியாக இருங்கள். எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆத்மலிங்கத்தை இராவணனால் இலங்கைக்கு எடுத்து செல்ல முடிந்ததா? அதுபோல் விபீஷ்ணனும் ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்து செல்ல முடியாது” என்று தேவர்களுக்கு நம்பிக்கை தந்து அனுப்பினார்.

எதுவும் அறியாத விபீஷணன், ஸ்ரீரங்கநாதர் சிலையை இலங்கைக்கு எடுத்து சென்று கொண்டு இருக்கும் போது, மாலை நேரம் வந்ததால் இறைவனை பூஜிக்க வேண்டும் என்று கருதி காவேரி கரை பக்கம் வந்தார். இறைவனை பூஜிக்கும் முன் குளிக்க வேண்டுமே… எப்படி குளிப்பது? இந்த ஸ்ரீரங்கநாதர் சிலையை கீழே வைத்து விட்டால் அந்த இடத்திலேயே ஸ்ரீரங்கநாதர் அமர்ந்து விடுவார் என்றாரே நம் ஸ்ரீராமர். என்ன செய்வது?” என்று குழப்பத்தில் இருந்தார்.

அந்த நேரத்தில் மாடு மேய்த்துகொண்டு ஒரு சிறுவன் எதிரில் வந்து கொண்டு இருந்தான். அந்த சிறுவனை அழைத்து, “இந்த சிலையை பத்திரமாக கையில் பிடித்து கொள். நான் காவேரில் குளித்துவிட்டு வருகிறேன்.” என்றார் விபீஷ்ணர்.  

விபீஷ்ணர் குளித்து கொண்டு இருக்கும் போது, அந்த சிறுவன் ஸ்ரீரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டு ஒடினான். இதை கண்ட விபீஷ்ணர் கோபம் கொண்டு அந்த சிறுவனை துரத்திக் கொண்டு ஒடினார். அந்த சிறுவன் நிற்காமல் மிக வேகமாக ஓடி, ஒரு மலை உச்சியில் ஏறி அமர்ந்தான். அதிக வேகமாக ஓடியதாலும் வேகு தூரத்திற்கு அந்த சிறுவனை துரத்தி வந்ததாலும் களைப்பும் கோபமும் அடைந்த விபீஷ்ணர், அந்த சிறுவன் தலையில் ஓங்கி குட்டினார். குட்டுப்பட்ட அச்சிறுவன், “என்னை கண்டால் எல்லோரும் தன்னை தானே குட்டிக்கொள்வார்கள்… ஆனால் நீயோ என்னையே குட்டிவிட்டாயே.” என்று சிரித்து கொண்டே சிறுவன் விநாயகராக விபீஷணனுக்கு காட்சி தந்து  அந்த இடத்திலேயே சிலையாக அமர்ந்தார். இதனால் உச்சிபிள்ளையாருக்கு இன்றும் விபீஷணனிடம் தலையில் குட்டுப்பட்ட சிறுபள்ளம் இருக்கும்.

உச்சிபிள்ளையார் கோயில் உருவான கதை  

மகேந்திரவர்மன் பல்லவன் மலை பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த மலைபகுதியை கிழக்கு பக்கமாக பார்த்த போது யானை முகமாகவும், வடக்கிலிருந்து பார்க்கும் போது மயில் நிற்பது போலவும், தெற்கில் இருந்து பார்க்கும் போது யானை போலவும் காட்சி கொடுத்தது மலை. இதை கண்ட அரசர் இந்த மலையில் ஏதோ தெய்வீக சக்தி படைத்தது என்று கருதி மலை மீது ஏறிபார்த்தார். அங்கு ஒரு விநாயகர் சிலையை கண்டார். அதை தன் அரண்மனைக்கு எடுத்து செல்ல முயற்சித்தபோது சிலையை அசைக்க முடியவில்லை. அதனால் மலையிலேயே கோயில் கட்டினார்.

உச்சி பிள்ளையாரை வணங்கினால் உயரிய வாழ்க்கை அமையும்.

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 13 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பிற கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »