Sunday 17th November 2024

தலைப்புச் செய்தி :

காளிஅம்மன் கோயிலில் காசு வெட்டினால் எதிரி காலி

நிரஞ்சனா

மதுரையிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள திருப்பூவணம் என்ற சிற்றூரிலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் மடப்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் “அடைக்கலம் காத்த அய்யனார் – பத்ரகாளியம்மன் திருக்கோயில்.

பிரம்மன், விஷ்ணு, சிவனுடன் கௌரி அம்மனும் ஒரு காட்டுபகுதியில் வேட்டையாட வந்தார்கள். அது அடர்ந்த காட்டு பகுதி. இனி காட்டுக்குள் செல்ல செல்ல சூரிய வெளிச்சம் கூட இல்லாமல் இருக்கும். ஆகவே நீ இங்கேயே இரு என்று சிவபெருமான் கௌரியம்மனை கேட்டுக்கொண்டார். அம்மனின் காவலுக்கு அய்யனாரை அங்கு நிறுத்தினார் சிவன். தேவியும் சிவனின் உத்தரவுக்கேற்ப அந்த மடப்புரம் என்கிற அந்த இடத்திலேயே தங்கினார். அந்த இடம் அம்மனுக்கு மிகவும் பிடித்து இடமாக மாறியது.

பல வருடங்கள் கழித்து அந்த பகுதியில் அம்மன், சிலை வடிவில் இருப்பதாக ஊரில் செய்தி பரவியது. ஆனால் அடர்ந்த காட்டு பகுதியாக இருந்ததால் யாரும் அந்த அம்மனை பார்க்க செல்லவில்லை. ஆனால் ஒரு நபர் துணிச்சலுடன் அந்த காட்டு பகுதிக்குள் சென்று, அங்கு இருந்த அம்மனை தரிசித்தார். தன்னை தைரியமாக வந்து பார்த்ததை கண்டு மகிழ்ந்து, அந்த பக்தனுக்கு காட்சி தந்தாள் அம்மன். அம்மனை நேரில் கண்ட பக்தன், “தாயே நீங்கள் இந்த காட்டு பகுதியில் தனியாக இருக்கிறீர்களே.. உங்களுக்கு பாதுகாப்பாக நான் இங்கேயே இருக்கிறேனே.” என்றார்.

“நான் காளிதேவி. எனக்கு நீ காவலா? வேண்டாம்.” என்று மறுத்தாள் அன்னை. ஆனால் அந்த பக்தர் கேட்பதாக இல்லை. பிறகு அந்த பக்தரின் மனதிருப்திக்காக காளிதேவி, அந்த பக்தன் தன் இடத்திற்கு  காவலுக்கு இருக்க சம்மதித்தாள். எனக்கு வருங்காலத்தில் இந்த இடத்தில் கோயில் கட்டுவார்கள். ஆனால் என் கருவரையில் மேற்குறை இல்லாமல் இருக்கும். அதனால் நீ குதிரை வாகனத்தில் இருந்து, எனக்கு நிழல் தா.” என்று ஆசி வழங்கி, அந்த பக்தனை குதிரையாக மாற்றினாள் அம்மன். அந்த பக்தர்தான், சிவபெருமான் அம்மனின் காவலுக்கு நியமித்த அய்யனார். அதனால்தான் அடைக்கலம் காத்த அய்யனார் என்ற பெயர் அவருக்கு கிடைத்தது.

மருது சகோதரர்கள்

கி.பி பதினெட்டாம் நூற்றாண்டியில் சிவகங்கையை ஆண்டு வந்த வேலு நாச்சியாரும், அவருக்கு பாதுகாவலராக இருந்த மருது, சின்ன மருது சகோதரர்களும் போருக்கு செல்வதற்கு முன்னதாக மாலை வேளையில் மடப்புரம் காளி அம்மனையும், அய்யனாரையும் வணங்கிவிட்டுதான் செல்வது வழக்கம்.

ஒருநாள் ஆங்கிலேயர், மருது சகோதரர்களை கொல்ல பல இடங்களில் ஆள் அனுப்பி தேடினார்கள். ஆங்கிலேயரின் பார்வையில் இருந்து எங்கு மறைந்திருப்பது என்ற தெரியாமல் திணறினார்கள் மருது சகோதரர்கள். அந்த நேரத்தில் அவர்களை காப்பாற்ற அய்யனார் நேரிலேயே வந்து, மருது சகோதரர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார் என்றும் அதனாலும் இந்த அய்யனாருக்கு அடைக்கலம் காத்த அய்யனார் என்று பெயர் வந்ததாகவும் வரலாறு சொல்கிறது.

காளிஅம்மன் முன் காசு வெட்டி போடுகிறார்களே ஏன்?

ஒருநாள்  திருப்பூவணம் புதூரைச் சேர்ந்த கெட்ட குணம் கொண்ட ஒரு நில சுவான்தாரர், ஊர் மக்களுக்கு மிக தொல்லை கொடுத்து வந்தார். அவரின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத இந்த கோயில் பூசாரி, அம்மன் முன் கண்ணீர் விட்டு அழுது, “அவனுக்கு ஒரு முடிவு கட்டு தாயே” என்று  கூறி காசை வெட்டி போட்டார்.

யாராலும் அடக்க முடியாமல் துள்ளி திரிந்த காளையாக இருந்த நில சுவான்தாரருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டது. அவர் வீடு இடிந்து விழுந்தது. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. வாரிசு இல்லாமல் அந்த நிலச் சுவான்தாரர் செத்தார்.

இதன் பிறகுதான் தங்களால் அழிக்க முடியாத விராதிகளை அழிக்க அம்மன் முன் காசை வெட்டி போடும் வழக்கம் உண்டானது.

கந்தசஷ்டி படிக்க கூடாதவர்கள் யார்?

ஆனால் உண்மையான காரணம் இல்லாமல் தனக்கு பிடிக்காதவர் என்ற ஒரு காரணத்துக்காக நல்லவர்களுக்கு தீங்கு செய்ய எண்ணி இந்த காசு வெட்டி போடும் முறையை செய்தால், “பொல்லாதவரை பொடி பொடியாக்கு என்று மந்திரம் சொல்பவர்களே பொல்லாதவர்களாக இருந்தால் அந்த மந்திரம் அவர்களையே பொடி பொடியாக்கும் என்பதால் இந்த மந்திரத்தை கொண்ட கந்தசஷ்டி கவசத்தை பொல்லாதவர்கள் சொல்ல மாட்டார்கள். இந்த மந்திரத்தை படிக்கவும் மாட்டார்கள். பயப்படுவார்கள்.

அதுபோல்தான் நல்லவர்களுக்கு தீங்கு செய்ய காசை வெட்டி போட்டால், அப்படி போட்டவர்களுக்கே அந்த காளி அம்மன் பாதகத்தை கொடுத்து விடுவாள். உண்மைக்கும் நேர்மைக்கும்தான் தெய்வம் துணை இருக்கும் என்பதை மறக்கக் கூடாது.

திருமணம் பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த கோயிலுக்கு சென்று ஏழு வாரம் வெள்ளிகிழமையில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கு வைத்து கட்டி, அங்கு இருக்கும் வேப்பமரத்தில் கட்டினால் திருமண வரன் அமையும்.

எடுக்கும் முயற்சி வெற்றி பெற, இந்த காளி அம்மனையும் அய்யனாரையும் வணங்கிவிட்டு சென்றால் நிச்சயம் அந்த செயல் வெற்றி பெறும். அப்படி வெற்றி பெற்றவர்கள் தங்கள் பிராத்தனையை நிறைவேற்றிய தெய்வத்துக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கிறார்கள். அதுவும் அய்யனார் குதிரை வடிவில் இருப்பதால் அந்த குதிரை கழுத்தில் இருந்து அவர் பக்கத்தில் இருக்கும் இரண்டு பெரிய பூதகணங்கள் சிலை மேல் பட்டு, அது தொடர்ந்து அந்த எழுமிச்சை காளி அம்மனின் கழுத்து வரை செல்வது போல பெரிய எழுமிச்சை மாலையாக போடுகிறார்கள்.

அந்த பூதகணங்களின் பெயர் சித்திரைச் சரிதன் – வல்லபன். அந்த இரண்டு பூதகணங்களின் சிலை பழமை வாய்ந்தது. கி.பி பதினேழாம் நூற்றாண்டில் தென்தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்த மதுரை நாயக்க மன்னர் காலத்திற்கு முன்பே அவை இருந்தது என்ற ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

பழமை வாய்ந்த திருக்கோயிலுக்கு சக்தி அதிகம் என்பார்கள். இந்த காளி அம்மனையும் அய்யனாரையும் வணங்கினால் இன்னல் இல்லாத வாழ்க்கை நிச்சயம் அமையும்.♦

 

 

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 10 2011. Filed under அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech