Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

அரசருக்கு துணை நின்ற குபேரர் – சோமவார விரத மகிமை

விரதங்களும் அதன் கதைகளும்.

பகுதி – 7

 

சென்ற பகுதியை படிக்க 

 

நிரஞ்சனா

சேனன் என்ற அரசன் போர்களத்தில் எதிரியிடம் சண்டையிட்டு தோற்று, எங்கு தன்னையும் தன் மனைவியையும் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், காட்டில் தன் பத்தினியுடன் மறைந்து வாழ்ந்து வந்தான். இராஜயோக வாழ்க்கையை அனுபவித்த அரசனின் மனைவி, காட்டில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். அதை தன் கணவரிடம் சொல்லி வருந்தினாள். “ஏன் காட்டில் வாழ்வதாக நினைக்கிறாய். இதை அரண்மனையாக நினைத்து விடு. நேற்றுவரை நீ ஒரு நாட்டுக்கு அரசி. இப்போது இந்த காட்டுக்கு அரசி என்று சமாதானம் கொள். சீதாதேவி உன்னை போல் ராஜகுடும்பத்தில் பிறந்தவள்தானே. அவள் உன்னை போலவா வருந்தினாள்?. என்றான் அரசன். 

தன் கணவரின் பேச்சை கேட்டு இன்னமும் அதிகமாக வேதனை அடைந்தாள். “அப்படி என்றால் என்னையும் இராவணனை போல ஒருத்தன் தூக்கி செல்வானா?” என்றாள் விரக்தியாக.

“உன்னை தூக்கி செல்ல வேண்டுமெனில் அவன் இராவணனைவிட பலசாலியாக இருக்க வேண்டும். அதனால் பயப்படாதே. உன் உடல் எடை உன்னை காப்பாற்றும்.” என்றான் அரசன், வேதனையான நேரத்திலும் வேடிக்கையாக. அதை கேட்டு சிரித்துவிட்டாள் அரசி. அவள் இப்படி மகிழ்ச்சியாக சிரித்து பல நாட்கள் ஆனதால் அரசருக்கும் அவள் சிரித்த முகம் மகிழ்ச்சியை தந்தது.

“துன்பம் வரும்போது விரக்தி அடைந்தால் எதிலும் மீண்டு வர இயலாது. எது வந்தாலும் அதை அமைதியாக எதிர்கொள். எந்த ஒரு நிலையும் எவனுக்கும் நிரந்தரம் அல்ல. இதுவும் மாறும்.“ என்றான் அரசன்.

ஒருநாள், காலை நேர உணவுக்காக காய்கனியை பறிக்க சென்றாள் அரசனின் மனைவி. அவளின் காலில் முற்கள் பதம் பார்த்தது. முள் குத்திய வலியில், யாரோ அவளை கத்தியால் குத்தியதை போல அலறினாள். அந்த சமயம், அந்த காட்டின் வழியாக வந்த அகத்திய முனிவர், அரசியின் அபாய குரல் கேட்டு, ஒடி வந்து பார்த்தார். “அட இறைவா… காலில் முள் குத்தியதற்கா இவள் இப்படி கத்தினாள்?” என்று நகைத்தப்படி ஒரு தந்தையின் உணர்வோடு அரசியின் காலில் குத்திய முள்ளை எடுத்தார் அகத்திய முனிவர்.

“இதற்கு முன் உன் காலில் முள் குத்தியதே இல்லை என்று நினைக்கிறேன். அப்படி என்றால் உன் தந்தையும் உனக்கு வாய்த்த கணவனும் உன்னை தங்கள் உயிராக எண்ணி இதுநாள்வரை உன்னை பாதுகாத்து வந்திருக்கிறார்கள். நீ பெரிய இடத்து பெண் என்றும் நினைக்கிறேன். சரியா.?” என்றார் அகத்திய முனிவர்.

அதை கேட்ட அரசி விம்மி விம்மி அழுதுக் கொண்டே, தான் யார் என்பதையும் தானும் தன் கணவன் படும் துன்பத்தையும் சொல்லி அழுதாள். சித்தரான அகஸ்தியருக்கு அவள் கதை தெரியாத என்ன? இருந்தாலும் அவள் தன் கஷ்டங்களையும் துன்பத்தையும் சொல்ல சொல்ல பொறுமையாக கேட்டதற்கு காரணம், ஒருவரின் மனதில் உள்ள துக்கத்தை யாரிடமாவது சொல்லி அழுதுவிட வேண்டும். இல்லையெனில் அது மனநோயாக மாறும் என்று, மருத்துவமும் அறிந்தவர் அல்லவா அகஸ்தியர், அதனால் அமைதியாக அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டார்.

“கவலை வேண்டாம்…நீங்கள் ஏன் உமாமகேஸ்வரனை வணங்கி விரதத்தை அனுசரிக்கக் கூடாது?” என்றார். “இந்த காட்டில் எப்படி விரதத்தை கடைபிடிக்க முடியும்? அதற்கெல்லாம் முறையாக பூஜைசெய்ய வேண்டுமே… அந்த அளவுக்கு எங்களிடம் செல்வ வசதிகள் இல்லை” என்றாள் அரசி.

“மகளே… அர்ஜீனன் பல வண்ண மலர்களால் இறைவனை வணங்கினான். ஆனால் பீமனோ மானசீகமாக பூஜித்தான். அதை கண்ட அர்ஜீனனுக்கு ஆச்சரியம். “நான் பூக்களை போட்டு அர்ச்சிக்கிறேன். ஆனால் என் சகோதரனோ எதுவும் இல்லாமல் பூஜிக்கிறானே… இறைவனுக்கு எப்படி தெரியும் பீமன் தன்னை வணங்குவது” என்று சந்தேகம் ஏற்பட்டது. ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜீனனின் சந்தேகத்தை போக்க அங்கு வந்தார். “அர்ஜீனா.. நீ அர்ச்சனை செய்த மலர்களை விட, பீமன் செய்த மானசீகமான பூஜை மலர்களை பார்க்கிறாயா.” என்றார். தேவலோக மங்கையர் கூடை கூடையாக பீமன் அர்ச்சனை செய்த மானசீக  மலர்களை அள்ளி தேவலோகம் சென்றார்கள். அதுபோல்தான் மகளே நீ அதிக செலவில் பூஜித்தால்தான் இறைவன் கருணை காட்டுவான் என்று எண்ணாதே. உண்மையான பக்தியும் அன்பும்தான் இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது. அதனால் குழப்பம் இல்லாமல் உமாமகேஸ்வரனை நினைத்து விரதத்தை கடைபிடித்தாலே போதும். இன்னல்கள் சிதறி ஒடும்.” என்றார் அகஸ்தியர்.

முனிவரின் வார்த்தையை தெய்வ வாக்காக கருதிய அரசி, உமாமகேஸ்வர விரத முறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டாள். நடந்த விஷயத்தை ஒன்றுவிடாமல் தன் கணவரிடம் கூறினாள் அரசி. அதை கேட்ட சிந்துசேனன் மகிழ்ந்தார். “அகத்திய முனிவரை பார்ப்பதற்கே புண்ணியம் பல கோடி வேண்டும். ஆனால் நீயோ அந்த மகானிடமே நேரடியாக பேசி உபதேசம் பெற்றாய். இனி நமக்கு நல்ல நேரம் வர இருக்கிறது. கைவிட்டு சென்ற ராஜாங்கத்தை திரும்ப பெறவோம் என்று என் மனம் சொல்கிறது” என்று ஆனந்தம் அடைந்தார் மன்னர்.

அரசரும் – அரசியும் விரதத்தையும் பூஜையையும் தொடங்கினார்கள். இறைவனும் – இறைவியும் மகிழ்ந்தனர். குபேரன் தோன்றி பரமேஸ்வரரின் கட்டளையை ஏற்று, “இன்று முதல் இதுவரை நீங்கள் அனுபவித்த இன்னல்கள் மறையும். பகைவர்களை விரட்டியடித்து நீங்கள் இழந்த செல்வத்தை மறுபடியும் ஈசனின் நண்பனான நான் உங்களுக்கு மீட்டு தருகிறேன்” என்று அருளினார்.

மன்னரின் படைபலத்துக்கு முன்னின்று பகைவர்களை போரில் சந்தித்து அவர்களை அழித்து, மன்னர் சிந்துசேனனுக்கு மீண்டும் பட்டாபிஷேகம் செய்து மன்னர் என்கிற அதிகாரத்தை வழங்கி, அந்த நாட்டின் மக்களையும் செல்வ செழிப்போடு வாழ செய்து அத்துடன் மன்னரின் விருந்தாளியாக சில நாட்கள் அரண்மனையில் தங்கி இருந்து விடை பெற்றார் குபேரர்.

வழிப்படும் முறை

சோமவாரம் எனப்படும் திங்கள் கிழமை அன்று சிவபெருமானை வணங்கி விரதத்தை தொடங்க வேண்டும்.  ஒன்பதாவது வாரம் விரதத்தை முடிக்கும் முன்னதாக, சின்ன வெள்ளி தகடில் லிங்கம் வரைந்து, அதில் சந்தனம் – குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும். பிறகு சிவாலயம் சென்று சிவபெருமானுக்கும் அம்மனுக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல் தர வேண்டும். ஒன்பது பேர்களுக்கு அன்னதானமும் செய்ய் வேண்டும். பூஜித்த வெள்ளி லிங்க தகடை அந்த கோவிலில் இருக்கும் உண்டியலில் போட்டுவிட்டு, உங்கள் வேண்டுதல் கூடிய விரைவில் நடக்க வேண்டும் என்று உளமாற இறைவனையும் – இறைவியையும் பிராத்தனை செய்திட வேண்டும்.. இப்படி முறையாக விரதத்தை கடைபிடித்து சிவனையும் உமாமகேஸ்வரியையும் வணங்கினால் நலன்கள் பல கோடி தேடி வரும்.

என்ன இப்போதே உமாமகேஸ்வர பூஜையை செய்ய வேண்டும் என்று ஆவலாக இருக்கிறதா..? பொறுங்கள். திங்கள்கிழமை வரை காத்திருங்கள். சோமவாரம் சிவபெருமானுக்கு உகந்த தினம்.

அடுத்த பகுதியில்….

ஆயுள் பலம் தரும் சஷ்டி தேவி விரதத்தை அறிவோம். 

ஹரி ஓம்.                                            

(தொடரும்)

© 2011  bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 8 2011. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், விரதங்களும் அதன் கதைகளும். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »