பூசணிக்காய்க்கு உள்ளே ஒரு உயிர்
நிரஞ்சனா
அமாவாசை திதிகளில் வீடு, கடை அலுவலகங்களில் பூசணிக்காய் உடைப்பது வழக்கம். சம்சார வாழ்க்கைக்குள் நுழையும் போதும், சினிமா ஷீட்டிங் முடியும் போதும் பூசணிக்காயை உடைப்பார்கள். எதற்காக பூசணிக்காய் உடைக்கிறார்கள்.?
இது கூட தெரியாதா? திருஷ்டி கழிக்கத்தான் என்பீர்கள்.
சரிதான். ஆனால் அந்த பூசணிக்காய்க்கு உள்ளே ஒரு அசுரன் இருக்கின்ற கதை உங்களுக்கு தெரியுமா?
தேவர்களை எப்போதும் வம்புக்கு இழுத்து தொல்லைப்படுத்துவதே அசுரர்களின் அன்றாட வாடிக்கையாக இருந்தது. இவர்களில் கூச்மாண்டன் என்றொரு அசுரனும் ஒருவன். மற்ற அசுரர்களை விட தேவர்களுக்கு கூச்மாண்டன் பெரும் தலைவலியாக இருந்தான். ஒவ்வோரு நாளும் அல்லோலப்படுத்தி வந்தான். இனியும் பொறுமையாக இருந்தால் தேவலோகமே அசுரலோகமாக மாறிவிடும் என்பதால் மகா விஷ்ணுவிடம் சரண் புகுந்தனர் தேவர்கள்.
அவர்களின் நிலை கண்டு ஆதரவு கரம் நீட்டினார் ஸ்ரீமந்நாராயணன். தேவர் படைக்கு தலைமை ஏற்று போர்க்களத்தில் நின்றார்.
எதிரே கூச்மாண்டன்.
காக்கும் தெய்வத்தால் தன்னை அழிக்கவும் முடியுமோ? என்ற அகம்பாவத்தோடு கர்ஜித்தான் கூச்மாண்டன். பொறுமையை மறந்தவனாக மோதினான். மோதிய வேகத்தில் நெருப்பை தீண்டிய வண்டை போல சுருண்டு விழுந்தான். தன் உயிர் பிரியும் போது, இதுநாள் வரை தான் செய்த கொடுமைகளும் தவறுகளும் பாவம் என உணர்ந்தான். உயிர் பிரியும் முன்பாக வரம் ஒன்றை கேட்டான் கூச்மாண்டன்.
“நீ செய்த பாவங்களுக்காகவே அழிந்தாய். உனக்கு எப்படி வரம் தர இயலும்?” என கேட்டார் பரந்தாமன்.
“நாராயணா… நான் பாவி என்பதை உணர்ந்தேன். ஆனாலும், உன் திருக்கரங்களால் எனக்கு மரணம் சம்பவித்ததால் வரம் கேட்கிறேன்”
“சரி என்ன வரம்”?
“அழியாத புகழ் வேண்டும்”
“அழியாத புகழா? அதுவும் உனக்கா? சரி பூலோக மக்களின் துன்பம் துயரம் நீங்க உன்னை கல்யான பூசணியாக படைக்கிறேன். உன்னை தானமாக தந்தால் தந்தவன் துயரம் நீங்கும். நேத்திர திருஷ்டிகள் அகன்றோடும். அதிலும் அமாவாசை, பித்ருக்களின் திதி போன்ற நாட்களில் பூசணியாக பிறந்த உன்னை தானம் செய்தால் கஷ்டங்களும் வியாதிகளும் விலகும். ஆனால் ஒன்று… உன்னை தானம் தந்தவருக்கே யோகம். தானம் பெற்றவருக்கோ சகலமும் தோஷம் ஏற்படும்”. என அருளினார் வெங்கடேச பெருமாள்.
அதனால் பூசணிக்காயை தானமாக சிலர் பெறுவதில்லை. அதற்கு பதிலாக பூமித்தாய்க்கு காணிக்கையாக செலுத்துகிறோம். பூமித்தாய், பாரம் என்கிற சுமையை சுகமான சுமையாக நினைக்கவே, நமது கஷ்டங்களையும் தானே ஏற்றுக் கொள்கிறாள்.
இதில் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது முன்னொரு காலத்தில் மக்கள் வாழும் பகுதிகளில் துஷ்ட சக்திகள் அட்டகாசம் செய்து வந்தன. இதனால் மக்கள் பயந்து உயிர் பலியை தந்து வந்தார்கள். பிறகு காலமாற்றத்தால் உயிர் பலியை மக்கள் நிறுத்தி கொண்டு, அதற்கு பதிலாக பூசணிக்காயில் நிறைய குங்குமத்தை தடவி உடைக்க ஆரம்பித்தார்கள்.
அமாவாசையில் அந்த துஷ்ட சக்திகள் நகர் வலம் வருவார்கள். அந்த சமயம் யாருடைய வீட்டின் முன்பாக பலி தரப்படவில்லையோ அந்த குடும்பத்தை அவர்கள் தொல்லைப்படுத்துவார்கள்.
குங்குமத்தை தடவி வீட்டின் முன்பாக பூசணிக்காயை உடைத்திருக்கின்ற இல்லத்தை பார்த்து அந்த வீட்டுக்கு உரியவர் பலி தந்ததாக எண்ணி அந்த தீய சக்திகள் சென்ற விடுவதாக ஒரு நம்பிக்கையும் உண்டு.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved