நல்ல வாசனை உள்ள இடத்தில் தெய்வம் குடியிருக்கும்
நிரஞ்சனா
அம்மன் திருமணம்
1. திருவுடை அம்மன் திருமணம் செய்யாமல் தவத்திலே இருந்தார். இதை கண்ட சிவன் மனம் வருந்தி பல முறை அழைத்தும் தேவி தவத்தை களைப்பதாக இல்லை. அதனால் சிவபெருமான், முல்லை பூ வாசம் உள்ள இடத்தில் வந்து அமர்ந்தார். தவத்தில் இருந்த அம்மனுக்கு மலர் வாசம் வீசியதால் தவம் கலைந்தது. நறுமனம் வீசும் திசை நோக்கி சென்றாள் அம்பிகை. அங்கு சிவபெருமானை கண்டு மகிழ்ந்து அவரை திருமணம் செய்து கொண்டார். இப்படி வாசனை உள்ள இடத்தில்தான் நல்ல சிந்தனையும் சுப நிகழ்ச்சியும் நடக்கும்.
கம்சம் உடலில் இரத்த வாடை
2. கம்சனின் உடலில் எந்த நேரமும் ரத்த வாடை வீசிக் கொண்டே இருக்கும். இதை பலமுறை சாஸ்திர வல்லுனர்கள் – ஜோதிடர்கள் கம்சனுக்கு தயக்கத்துடன் சொன்னார்கள். “இப்படி இரத்த நீச்ச வாடை உடலில் அடித்தால், அது மிக பெரிய துரதிஷ்டத்தை கொடுத்துவிடும்.“ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அலட்சியப்படுத்தினான் கம்சன். கம்சனின் முடிவு நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்படி துஷ்ட வாசனையானது துஷ்ட சக்திகளை – தரித்திர தேவதைகளை அழைத்து கொண்டு வந்துவிடும். ஒருவரின் உடலில் நல்ல வாசனை இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களை சைத்தான் பிடித்து கொள்ளும்.
கோயிலில் சாம்பிரானி ஏன்?
3. இறைவனாக இருந்தாலும் ஆலயத்தின் கருவறையில் இரண்டு வேலை சாம்பிரானி புகை போடுவார்கள். எதற்காக அப்படி செய்கிறார்கள்? கோயிலுக்கு பலர் வருவார்கள். அவர்களின் மீது இருக்கும் தீய சக்தி, அந்த கோயிலில் இறங்கி விடுகிறது. சில துஷ்ட சக்திகள் இறைவனையே தாக்க முயலும். அப்படி இயலாத பட்சத்தில் விரும்பதகாத செயல்களை அந்த கோயிலில் செய்யும். இதனால் அப்படிபட்ட தீயநிலைகள் அந்த கோயிலுக்கும் – பக்தர்களுக்கும் – இறைவனுடைய வாசத்துக்கும் பங்கம் வராமல் தடுக்கவே திருக்கோயில்களில் சாம்பிரானி புகை போடுவது வழக்கம். இதனால் எந்த தீய சக்திகளும் யாரையும் நெருங்காது.
வீட்டிலும் சாம்பிரானி புகை போட்டால் தீய சக்திகள் விரட்டப்படும். ஒரு வீட்டில் நாற்றம் அடித்தால் அந்த வீட்டில் துஷ்டசக்தி வாசம் செய்யும். சில மந்திரவாதிகள் குட்டி சாத்தானை வசியம் செய்ய, மலத்தை தன் உடலில் பூசி கொண்டு ஜெபம் செய்வார்கள். இப்படி செய்தால்தான் அந்த மந்திரவாதிகளுக்கு துஷ்ட சக்திகள் – குட்டிசாத்தான் போன்றவை வசியம் ஆகும். ஆனால் நல்ல வாசனை உள்ளவர்களை தீய சக்தி நெருங்காது.
அனுமன் அருள்வாக்கு
4. வீட்டில் நல்ல வாசனை இருந்தால் வளமை ஏற்படும். காட்டில் நடந்து வரும் வழியில் திரௌபதியின் கால்களின் கீழே தாமரை மலர் கிடைத்தது. அந்த மலரை போன்றோரு மலர் வேண்டும் என்றாள் தன் கணவர் பீமனிடம். பீமனும் திரௌபதி தந்த தாமரையை வாங்கிக்கொண்டு அதுபோல் இன்னொரு தாமரையை தேடி புறப்பட்டான். வழியில் அஞ்சனேயரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. “தாமரை உயர்ந்த இடத்தில்தான் இருக்கும். குபேரப்பட்டினமான இந்திரலோகத்தில்தான் கிடைக்கும். தாமரை உள்ள இடத்தில் லட்சுமிவாசம் செய்கிறார். இனி உங்களுக்கு தைரியலஷ்மியே பரிபூரணமாக துணை நின்று ஆசி தருவார்.“ என்று கூறினார் ஸ்ரீஅனுமன். இதன் பிறகு பாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
தண்ணீரில் தாமரை
5. வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, தாமரை பூவை போட்டு அத்துடன் எழுமிச்சை பழத்தையும் போட்டு வைத்தால் துஷ்டசக்திகள் விலகும். துஷ்டசக்திகள் விலகி வீடும் சுத்தமாக இருந்தால் அஷ்டஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.
பச்சை கற்பூர தீர்த்தம்
6. பச்சை கற்பூரத்தை தண்ணீரில் கலந்து வீட்டில் தெளித்தால் நல்ல பலனை கொடுக்கும். பெருமாளுக்கு பச்சை கற்பூரத்தால் அபிஷேகம் செய்வார்கள். தீர்த்தத்திலும் சிறிது பச்சை கற்பூரத்தை போட்டுதான் வைத்திருப்பார்கள்.. பெருமாள் கோவிலில் பச்சை கற்பூரத்தின் வாசம் லஷ்மி கடாக்ஷம்.
நெய் வாசனை ஸ்ரீமகாலஷ்மி வாசம்
7. வீட்டில் வாரத்தில் ஒருநாளாவது நெய்யினால் இனிப்பை தயாரிக்க வேண்டும். திருப்பதியில் லட்டு தயாரிக்கும் இடத்தில் எந்நேரமும் நெய்வாசம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அந்த இடத்தில் ஸ்ரீ மகாலஷ்மியே நேரிடையாக வந்து மேற்பார்வை செய்வதாக ஐதீகம்.
இப்படி நல்ல வாசனைக்குதான் இறைவன் பணிவான். அதனால்தான் விபூதியாவது நெற்றில் வைத்து கொள்ள வேண்டும. விபூதியின் வாசம் ராட்சச சக்திகளிடம் இருந்து காப்பாற்றும். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு விபூதியை தண்ணீரில் கலந்து குளிக்க சொன்னால் நீண்ட காலம் தொல்லை கொடுத்த வியாதி நீங்கும் என்று அனுபவத்தில் கண்டு சொன்னார்கள் பெரியோர்.
© 2011 bhakthiplanet.com All Rights Reserved