Sunday 22nd September 2024

தலைப்புச் செய்தி :

பெருமாளே நடத்திய கும்பாபிஷேகம்

நிரஞ்சனா

திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் திருச்சி – துறையூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பதினேழு கி.மீ. தொசைவில் உள்ளது. சோழநாட்டுத் திவ்விய தேசங்களில் நான்காவதாக அறியப்படுகிறது. திரேதாயுகத்தில் அயோத்தி நகரை சிபி சக்கரவர்த்தி அரசாண்டு வந்தார். ஒருநாள் நீலிவனம் பக்கமாக சென்று கொண்டு இருந்த அரசர், அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பன்றி அங்கும் இங்குமாக ஒடி கொண்டு இருந்தது. பன்றியாக இருந்தாலும் பார்க்க மிக வெள்ளையாக அழகாக இருக்கிறதே என்று நினைத்து, தாம் அரசர் என்பதையே மறந்து சிறு குழந்தை போல் அந்த பன்றியை பிடிக்க ஒடினார்.

காட்டில் சிறு குகைக்குள் அந்த பன்றி ஒடி மறைந்தது. இதை கண்ட சிபி சக்கரவர்த்தி ஆச்சரியம் அடைந்தார். பன்றியின் தலை கூட போகாத சிறு குகைக்குள் எப்படி அது உள்ளே போனது? என்று சிந்தித்து கொண்டு நடந்தார். அப்போது மார்கண்டய முனிவர் அந்த காட்டில் தவம் செய்து கொண்டு இருந்தார். முனிவரை பார்த்து மகிழ்ச்சியடைந்து அவர் அருகில் சென்று, “சுவாமி இங்கு ஒரு பன்றி வந்தது. அதை துரத்தி கொண்டு வரும் போது தலை கூட போகாத சிறு குகைகுள் ஒடி மறைந்தது. அது எப்படி?“ என்றார் அரசர் சிபி.

“வராக அவதாரம் எடுத்து இரணியனை கொன்ற இறைவனே பன்றி வடிவம் எடுத்து உன் முன் காட்சி கொடுத்து உள்ளார்.“ என்றார் முனிவர். அப்போது மகாவிஷ்ணு சிபிக்கும் மார்க்கண்டய முனிவருக்கும் காட்சி கொடுத்து, “இந்த இடத்தில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்கிறாள. ஆகவே நீங்கள் இந்த இடத்தில் கோயில் கட்டுங்கள். அத்துடன் 3700 வைணவர்களை குடி அமர்த்தி வையுங்கள்.“ என்று கூறி மறைந்தார். ஸ்வேதகிரி என்ற சிறு குன்றின் மேல் கோயிலை கட்டினார் அரசர். அங்கேயே இறைவனுக்கு தினமும் பூக்கள் கிடைக்க நந்தவனத்தையும் ஏற்பாடு செய்தார்.

பன்றியை விரட்டி வரும் போது, பன்றியை பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பன்றியின் மேல் அம்பை வீசி கொண்டே சென்றார் சிபி. அம்புப்பட்ட ஏழு இடங்களிலும் ஏழு தீர்த்தங்களை அமைத்தார். ஆலயத்தை சிறப்பாக கட்டி முடித்ததும் விஷ்ணு பகவான் கூறியது போல் 3700 வைணவர்களை அழைத்து வர வேண்டிய பொறுப்பை மார்க்கண்டேயரிடம் சிபி அரசர் ஒப்படைத்தார். கங்கை, யமுனை போன்ற நதிகள் ஒடும் இடங்களில் எல்லாம் அந்தணர்களை அழைத்து வந்தார் மார்கண்டேயர். “3700 பேர் இருந்தால்தான் ஆலய கும்பாபிஷேகம் செய்ய முடியும். இது விஷ்ணுவின் உத்தரவு. ஆனால் கிடைத்த அந்தணர்களோ 3699 பேர்தான். இன்னும் ஓரு அந்தணருக்கு எங்கு போவது? திருப்பணி நாள் நெருங்கி கொண்டு இருக்கிறதே..“ என்ற கவலை ஏற்பட்டது சிபி அரசருக்கும், மார்கண்டேயருக்கும்.  

இறைவனே நேரில் வந்தது போல் ஒரு வைணவர், அரசர் முன் நின்றார். “உங்களுக்கு ஒரு வைணவர் தேவை என்று கேள்விப்பட்டேன். அதனால் வந்திருக்கிறேன்.“ என்று கூறினார் அந்த புதிய நபர். அந்த குரலை கேட்டவுடன் மார்கண்டேயருக்கு மெய்சிலிர்த்துவிட்டது.. அந்த அளவுக்கு இனிமையான தெய்வீக குரல். இறைவனே நம் மன கஷ்டத்தை தெரிந்து ஒரு நபரை அனுப்பி இருக்கிறார் என்று மகிழ்ந்தார்.

கும்பாபிஷேகத்திற்கு தேவையான சாஸ்திரங்கள் சடங்குகளையும் சிறப்பாக செய்து முடித்தார்கள். தெய்வீக குரல் கொண்ட வைணவரை இறைவனுக்கு தீப ஆராதனை காட்ட சொன்னார் மார்கண்டேயர்.  அந்த வைணவர் ஆலய கருவறைக்குள் சென்று அப்படியே மறைந்தார். பிறகுதான் தெரிந்தது ஸ்ரீமந் நாராயணனே மனித உருவத்தில் வந்திருக்கிறார் என்கிற உண்மை. சிபி அரசரும் மார்கண்டேயரும் சுற்றி இருந்த மக்களும் பரவசமடைந்தார்கள்.

Posted by on Apr 4 2011. Filed under Home Page special, ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், பெருமாள் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

4 Comments for “பெருமாளே நடத்திய கும்பாபிஷேகம்”

  1. பாலசுப்பிரமணியன்

    தினம் தினம் ஓரு ஆன்மிக அனுபவம். நிரஞ்சனா அவர்களுக்கு வாழ்த்துகள்.

  2. Rajeshwari lakshman

    பெருமாளே நடத்திய கும்பாபிஷேகம் நன்றாக இருந்தது. இதுவரை எந்த பத்திரிக்கையிலும் வராத தகவல்.

  3. arun balaji

    nice article madam.

  4. கே.லதா

    திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயிலுக்கு ஒருமுறைதான் சென்றிருக்கிறேன். உங்கள் கட்டுரையை படித்த பிறகு குடும்பத்துடன் மீண்டும் போய் வரவேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டுள்ளது.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech