காற்றழுத்த தாழ்வு நிலை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
சென்னை, நவ.18 – காற்றழுத்த தாழ்வு நிலை பரவியதால் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் நேற்று மதியம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
புயல் சின்னம் கரையை கடந்தபோது பலத்த காற்று வீசியது. கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரத்தில் 70 மில்லி மீட்டர் மழை பெய்தது. காரைக்கால், பரங்கிப் பேட்டை, கொள்ளிடத்தில் 50 மி.மீ. நெய்வேலி, கடலூரில் 40 மி.மீ. மழை பெய்தது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரியில் 30 மி.மீ. மழை பெய்தது.
ஒரத்தநாடு, பெரம்பலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் 20 மி.மீ. மழை பதிவானது. நன்னிலம், நீடாமங்கலம், வலங்கைமான், திருவாரூர், விழுப்புரம், மகாபலிபுரம், பாபநாசம், திருச்சி, அரியலூர் பகுதிகளில் 10 மி.மீ. மழை பெய்தது.
கரையை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும், தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக பரவி உள்ளது. இதன் காரணமாக வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும். தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.