கோமாரி நோய் பாதிப்பால் மாடுகள் பலி
ஊத்தங்கரை அருகே கோமாரி நோய் பாதிப்பால் 5 மாடுகள் உயிரிழந்துள்ளன. இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளதால் உரிய நடவடிககை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாவக்கல் கிராமத்தைதச் சேர்ந்த விஜயரங்கன் 6 கறவை மாடுகளை வளர்த்து வந்தார். இதில் 5 மாடுகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தன. அரசு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி 5 மாடுகளும் உயிரிழந்தன. கோமாரி நோய் பாதிப்பால் மாடுகள் பலியானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உரிய சிகிச்சை அளிக்காததே இதற்கு காரணம் என மாட்டு உரிமையாளர் விஜயரங்கன் புகார் தெரிவித்தார்.
ஊத்தங்கரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இதுவரை 50க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோயால் உயிரிழந்துள்ளன என்றும் நூற்றுக்கணக்கான மாடுகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து மாடுகள் உயிரிழப்பைத் தடுகக வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாட்டுச் சந்தைகள் நடத்த 2 வாரங்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.