வேடனை அரசனாக்கிய தாமரை
நிரஞ்சனா
ஒரு காட்டில் வேடனும் அவனுடைய மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அசுர காற்றும் மழையும் பலமாக வீசியது. மரங்கள் சாய்ந்தது. மழை நீர் கடல் போல வனத்தை சூழ்ந்தது. “இனி இங்கு வாழ முடியாது, வேறு எங்காவது சென்று விடலாம்“ என்று காட்டை விட்டு வெளியேறினார்கள்.
பசி உயிரை வலிக்கச் செய்தது. கால் போனபோக்கில் நடந்து போய் கொண்டிருந்தார்கள். ஒர் குளத்தில் அதிகமான தாமரை மலர்கள் பூத்து இருந்தது. இதை கண்ட வேடன், “நாம் இந்த மலர்களை பறித்து ஊருக்குள் சென்று இவற்றை விற்போம்“ என்றான்.
இருவரும் குளத்திலிருந்து தாமரை பூக்களை பறித்து ஊருக்குள் விற்பனை செய்தார்கள். ஆனால் யாரும் பூக்களை வாங்கவில்லை. அதனால் சோர்ந்து போன வேடனின் மனைவி,
“இன்னும் என்னால் சிறிது நேரம் கூட நிற்க முடியாது. பசியால் உயிரே போய்விடும் போல இருக்கிறது.“ என்று தன் கணவரிடம் கூறினாள். அப்போது, எங்கோ பாடல் இசை ஒலி கேட்டது.
“அங்கே திருவிழா நடப்பதை போல தெரிகிறது. வா அங்கு சென்று பார்ப்போம்“ என்று தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றான் வேடன்.
சிறிது தூரம் நடந்தார்கள். கோவில் திருவிழா விமர்ச்சையாக நடந்து கொண்டிருந்தது. மூலஸ்தானத்தில் இறைவனை கண்ட இருவரும் தங்கள் பசியை மறந்து தங்களிடமிருந்த தாமரை பூக்களை இறைவனுக்கு சமர்பித்தார்கள். கோயில் அன்னதானம் அவர்களின் பசியை போக்கியது.
இப்படியே தினமும் விற்பனைக்காக தாமரை மலர்களை பறித்து வருவதும் முதலில் இறைவனுக்கு சமர்பித்துவிட்டு வியபாரத்திற்கு செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்தார்கள். நல்ல வருமானத்தை பெற்றார்கள். முதிய வயதிலும் இறைவனின் மேல் பற்றுடன் தாமரை பூவை சமர்பித்து முக்தியடைந்தார்கள்.
மறுபிறவில், வேடன் “புஷ்பவாகனர்“ என்ற அரசனாகவும் அவன் மனைவி மறுபிறவிலும் புஷ்பவாகனருக்கு அரசியானாள். இப்படி தாமரை பூக்களை சமர்பித்த பயனால் நல்ல வாழ்க்கை பெற்றார்கள்.
தாமரை மலரின் மகத்துவத்தை அநுமான், பீமனுக்கு சொன்னார். அப்படி என்ன சொன்னார்?
திரௌபதி காட்டில் நடந்து சென்ற கொண்டு இருக்கையில் அவள் கால்களில் அழகான பூ தட்டுப்பட்டது. அதை பீமனிடம் காட்டி “இதைப் போல் பூ எனக்கு வேண்டும் என்றாள். சரி என்று பீமன் திரௌபதியிடம் இருந்து அந்த மலரை வாங்கிக் கொண்டு இது போல் எங்கு கிடைக்கும் என தேடிச் சென்று கொண்டு இருந்தான். ஒரு காட்டில் ஆஞ்சனேயர் தவத்தில் இருந்தார். அநுமனின் நீண்ட வால், பீமனின் வழியை தடுத்தது. ஆஞ்சனேயரின் வாலை நகர்த்தினால்தான் பீமனுக்கு போகும் வழி கிடைக்கும்.
ஆஞ்சனேயரிடம், “உங்கள் வாலை எடுக்கிறீர்களா இல்லை நானே எடுத்து தள்ளட்டுமா?“ என்றான் பீமன்.
“அது உன்னால் முடியும் எனில் என் வாலை தாராளமாக நகர்த்தி விட்டு செல்“ என்றார் ஆஞ்சனேயர். வாலை அசைக்க முடியாமல் பீமன் திணறி போனான்.
“சுவாமி தாங்கள் யார்?“ என்று பணிவாக கேட்டான்.
“நான் ஸ்ரீஇராம பக்தன் ஆஞ்சனேயன். நீ யார்?“
“நான் பாண்டவ சகோதரர்களின் ஒருவன். பீமன் என்பது என் பெயர். எனக்கு இந்தப் தாமரை பூவைபோல் ஒரு பூ வேண்டும். அதை தேடித்தான் போய்க் கொண்டிருக்கிறேன்“ என்றான் பீமன்.
“ஸ்ரீவைகுண்டம், இந்திரலோகம், குபேரபட்டினம் போன்ற இடங்களில்தான் இவ்வகைப் தாமரை புஷ்பங்கள் அதிகம் காணப்படும். தாமரைப் பூ எங்கு இருக்கிறதோ அந்த இடம் செல்வ வளத்துடன் இருக்கும். உன் கையில் இருக்கும் பூ குபேர பட்டினத்தை சார்ந்தது. அங்கு சென்றால் இதே போன்ற மலர் உனக்கு கிடைக்கும். பார்த்தாயா… இத்தனை வருடம் இந்த காட்டில் பாண்டவர்கள் ஆகிய நீங்கள் இருக்கிறீர்கள், இருந்தாலும் இன்றுதான் நீ என்னை சந்திக்க முடிந்தது. அதற்கு காரணம் இந்த தாமரை மலர்தான். இனி உங்களுக்கு எங்கும் வெற்றி நிச்சயம்.“ என்றார் பீமனிடம் ஸ்ரீமந்ஆஞ்சனேயர். தாமரை இருக்கும் இடத்தில் ஸ்ரீ மகாலஷ்மி வாசம் செய்வாள்.