கூட்டத்தினரால் பிடித்து தள்ளப்பட்டார் ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியும், இந்தி திரைப்பட நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் நகை கடை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டது. இதனை தொடர்ந்து அழைப்பை ஏற்று அவர் லூதியானா நகருக்கு சென்றார். அந்நகரின் ராணி ஜான்சி சாலையில் சென்று இறங்கியவுடன் அவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
அப்போது பேசிய ஐஸ்வர்யா ராய், தன்னிடம் மிக அன்பாக இருக்கும் அனைவருக்கும் எனது நன்றி. அதனுடன் எனது கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் பச்சன் மற்றும் எனது மகள் ஆராதயா ஆகியோர் மீதும் அன்பும் ஆதரவும் காட்டி வருவதற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் இங்கு இருப்பதற்கு எனது ஆழ்ந்த மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து அவர் நகை கடை திறப்பு விழாவிற்கு சென்றார். அங்கு ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு நெருக்கினார்கள். இதில், அவர் கீழே விழும் அளவிற்கு கூட்டத்தினரால் பிடித்து தள்ளப்பட்டார். இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா ராய் அடுத்து நடக்க இருந்த ஊடகக்காரர்களுடனான சந்திப்பை ரத்து செய்து விட்டு அங்கிருந்து தான் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு திரும்பினார்.