வறுமையை துரத்தும் விநாயகரின் மகள்
ஸ்ரீசந்தோஷி மாதா.
விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 4
நிரஞ்சனா
வீட்டில் எத்தனை ஆண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால்தான் அந்த இல்லத்திற்கே ஒரு அழகு – மகிழ்ச்சியுண்டாகும் என்று பிள்ளையாரின் பிள்ளைகள் தன் தந்தையிடம் சொன்னார்கள். அதை கேட்ட விநாயகர், “திடிரென பெண் குழந்தைக்கு நான் எங்கு செல்வேன்“ என்று தன் மனைவியர் சித்தி – புத்தியை பார்த்து சிரித்தார். எதுவும் அறியாத குழந்தைகள், “எங்களுக்கு இப்போதே தங்கை வேண்டும். பூலோகத்தில் அவரவர்களின் அண்ணன்களுக்கு அவர்களின் தங்கைகள் கையில் கயிறு கட்டி சகோதர பந்தத்தை கொண்டாடுவது போல் எங்களுக்கும் எங்கள் கையில் கயிறுகட்ட ஒரு தங்கை வேண்டும்.“ என்று பிடிவாதம் பிடித்தார்கள். அவர்களின் தொல்லை தாங்காமல் தன் சக்தியால் அழகான பெண் குழந்தையை உருவாக்கினார் கணபதி.
அந்த பெண் குழந்தை பிறந்த நாள் வெள்ளிகிழமை. அந்த அழகான பெண் குழந்தை தன் இருகரங்களால் தன்னுடைய அண்ணன்மார்களுக்கு ராக்கி கட்டியவுடன் அழுத பிள்ளைகள் சிரித்தன. இதை கண்ட விநாயகர், “மற்றவர்களை சந்தோஷப்படுத்திய இந்த குழந்தையின் பெயர் “சந்தோஷி“ என்று அழைக்கப்படட்டும்.!“ என்றார்.. இதை கேட்டே நாரதர், “இனி வெள்ளிகிழமை தோறும் சந்தோஷியை பூலோகவாசிகள் வணங்கினால் அவர்களின் இன்னல்கள் மின்னல் வேகத்தில் மறைய வேண்டும். அதற்கு உங்களின் ஆசி, உங்களின் மகளுக்கு கிடைக்க வேண்டும்“ என்று வேண்டினார். “உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும் நாரதா“ என்று ஆசி வழங்கினார் கணபதி.
சந்தோஷியை வணங்கி சந்தோஷமான வாழ்க்கையை பெற்றவள் யார்?. அதற்கு பல உதாரண சம்பங்கள் இருந்தாலும் சிறப்பான இந்த சம்பவத்தை பார்ப்போம்.
போலாநாத் என்பவருடன் சுனீதிக்கு திருமணம் நடந்தது. போலா நாத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அந்த ஆறு பேருமே போலாநாத்தை வெறுத்தார்கள். அதன் காரணம், அவன் கொடியவன் என்ற எண்ணத்தால் அல்ல. அதனினும் கொடியது அவனிடம் இருப்பதால். அது –
வறுமை.
அவ்வையும் சொல்லியிருக்கிறார் கொடியது வறுமை. அதனினும் கொடியது இளமையில் வறுமை. போலாநாத் வறுமையில் வாடினார். சுனீதிக்கு அவளின் மாமியாரின் செயல் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எல்லா பிள்ளைகள் சாப்பிட்ட மிச்சத்தை தன் பிள்ளை என்று கூட பார்க்காமல் என் கணவருக்கு கொடுக்கிறாரே என்று மனம் வருந்தினாள்.
வேலைக்காக ஊருக்கு செல்லும் பிள்ளை வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டு வந்தாய்? என்று தந்தை கேட்பார். சாப்பிட்டாயா? என்று அன்புடன் தாய் கேட்பாள். ஆனால் இந்த வீட்டில் எல்லாம் தலைகீழாக இருக்கிறதே.? என்று வருந்தி, தன் மனகஷ்டத்தை கணவரிடமே கூறினாள். மனைவி சொல்லே மந்திரம் என்று நினைக்கும் அப்பாவியல்ல போலாநாத். தன் மனைவி கூறியது உண்மையா? என்று அறிய தன் தாயின் செயலை ஒருநாள் முழுவதுமாக கண்காணித்தான். தன் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல மரியாதை தரும் அம்மா, தன்னை வேண்டா வெறுப்பாக நடத்துவதை உணர்ந்தான்.
“இனி நான் இங்கு இருப்பது நல்லதல்ல. இப்போதே வெளி ஊருக்கு சென்று வேலை தேடி உன்னையும் அழைத்து செல்கிறேன்.“ என்று தன் மனைவிடம் கூறி வேறு ஒரு ஊருக்கு வேலை தேடி சென்றான். மரியாதை இல்லாத இடத்தில் இருந்தால் எப்படியெல்லாம் கேவலப்பட வேண்டுமோ அந்த அளவிற்கு சுனீதிக்கு அவமானங்கள் ஏற்பட்டது. அதை எல்லாம் பெரிதுப்படுத்தாமல், “இராமர், சீதையை மீட்டு சென்றது போல் நமக்கும் நல்ல நேரம் வரும்“ என்ற ஒரே நம்பிக்கையில் ஸ்ரீ சந்தோஷிமாதாவை தினமும் வணங்குவதை தவறவில்லை. கோபுரத்த்தின் மேல் சந்திரகாந்த கல்லை வைத்தால் அது சந்திரனிடம் இருந்து ஒவ்வோரு துளியாக தண்ணீரை இழுத்து கொண்டு வருவதை போல். சுனீதியின் பக்தி, தன் கணவர் வேறு ஊரில் இருந்தாலும் அவனுக்கு சக்தியை கொடுத்துக் கொண்டு இருந்தது. பசியை மறந்தான். எப்படியாவது வேலையை தேட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் நடந்தான்.
அவன் வரும் வழியில் ஒரு கடையில் திருடர்கள், கடையின் முதலாளியை தாக்கி கொண்டு இருந்தார்கள். இதை கண்ட போலாநாத், அந்த திருடர்களை அடித்து விரட்டினான். அவனின் தைரியத்தை பாராட்டி கடையில் வேலை கொடுத்தார் முதலாளி. பல வருடம் அதே கடையில் வேலை பார்த்தான். முதலாளிக்கு வாரிசு யாருமில்லை. நல்ல உழைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் குணமும் கொண்டவர் முதலாளி. போலாநாத்தின் நாணயத்தை கண்டு அந்த கடையை அவருக்கே கொடுத்தார் கடை முதலாளி.
அதை பெற்று மகிழ்ந்த பிறகு படிபடியாக உயர்ந்தான். சொந்தமாக அரண்மனை போல வீட்டை கட்டினான். தன் மனைவியின் நினைவு வந்தது. ஊருக்கு திரும்பினான். தன் மனைவியை அழைத்து கொண்டு அரண்மனை போல் இருக்கும் வீட்டில் தங்கினார்கள் தம்பதிகள்.
நல்ல வாழ்க்கை அமைய விரதம் இருந்ததாகவும் உயர்வான வாழ்க்கையை நல்லபடியாக கொடுத்ததற்காக ஸ்ரீ சந்தோஷி மாதாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தம் சக்திக்கேற்ப சிறப்பான பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பூஜை ஒன்றை தொடங்கினாள் சுனீதி. அதற்காக தன் கணவரின் குடும்பத்தாரையும் அழைத்து விருந்து கொடுத்தாள்.
“பஞ்ச பரதேசியாக இருந்தவள் இன்று அரசர்களுக்கு இணையாக செல்வத்துடன் வாழ்கிறார்களே“ என்ற பொறாமையால் எரிந்தார்கள் சில உறவினர்கள். போலாநாத் – சுனீதி தம்பதியரின் வளர்ச்சிக்கு ஸ்ரீசந்தோஷி மாதா விரதம்தான் காரணம் என்பதை உணர்ந்தார்கள் அவர்கள்.
ஸ்ரீசந்தோஷி மாதாவுக்கு புளிப்பு ஆகாது. இந்த விஷயம் தீய குணம் கொண்ட அந்த சில உறவினர்களுக்கு தெரியும். அதனால் ஒரு சதிதிட்டம் தீட்டினார்கள்.
(தொடரும்)