அண்ணா அணிவித்த மோதிரத்துடனே கலைஞர் உடல் அடக்கம் !
சென்னை : திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் (7-ம் தேதி) மாலை 6.10 மணியளவில் காலமானார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முழு அரசு மரியாதையுடன், மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
சமாதியின் அருகில் கருணாநிதியின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் கருணாநிதி சமாதிக்கு வந்தார். சமாதியில் மாலை வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
கவிஞர் வைரமுத்து இன்று காலை கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். பேராயர் எஸ்றா சற்குணமும் இன்று கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று கருணாநிதி நினைவிடத்துக்கு ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கருணாநிதியின் சமாதியை சுற்றிலும் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகில் நின்ற படி பொதுமக்கள் சமாதியை பார்த்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். மாலை, மலர் வளையம் வைக்க விரும்புபவர்கள் உள்ளே சென்று சமாதியில் வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதனிடையே திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா அணிவித்த மோதிரத்துடனே அடக்கம் செய்யப்பட்டது.
1959ஆம் ஆண்டு மாதம் சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. கருணாநிதியால் இந்த வெற்றி கிடைத்தது என்று அவருக்கு, அண்ணா ஒரு தங்க மோதிரம் ஒன்றை பரிசாக அணிவித்தார். கருணாநிதி இறுதி வரை அந்த மோதிரத்தை பொக்கிஷமாக கருதினார். எந்த சூழ்நிலையிலும் அதை தனது விரலில் இருந்து கழற்றியதே இல்லை எனக் கூறப்படுகிறது.
உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் மோதிரத்தை கழற்றுமாறு கூறியிருக்கிறார்கள். ஆனால் அப்போதும்கூட மோதிரத்தை கழற்ற கருணாநிதி மறுத்துவிட்டார். இறுதியில் அந்த மோதிரத்துடனே கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக எம்.ஜி.ஆரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது அவருடன் கைக்கடிகாரம் புதைக்கப்பட்டது. அதுபோல ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது கைக்கடிகாரமும் புதைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2011-2018 bhakthiplanet.com All Rights Reserved