வெகுஜன மக்களின் அபிமானத்துக்குரிய தலைவர் வாஜ்பாய்
டெல்லி : மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்த வாஜ்பாய் தனது 93 வயதில் மரணம் அடைந்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் 16ம் தேதி மாலை 5.05 மணியளவில் காலமானார்.
பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 15ம் தேதி இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொண்டர்களும் பதற்றத்தில் ஆழ்ந்தனர். அதன் பின்னர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வாஜ்பாய்க்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. 16ம் தேதி வாஜ்பாயின் உடல்நிலை மேலும் பின்னடைவு ஏற்பட்டதாகப் புதிய அறிக்கையை மருத்துவமனை வெளியிட்டது. இதனால், பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த நிலையில் மாலை 5.05-க்கு வாஜ்பாய் காலமானார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.
எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து வாஜ்பாய் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு பாஜக அலுவலகத்திலும் வைக்கப்பட்டு பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அடல் பிகாரி வாஜ்பாயியின் இறுதி ஊர்வலம் பாஜக கட்சி அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை முற்பகல் 2 மணியளவில் புறப்பட்டது. பாஜக கட்சி அலுவலகத்தில் தொடங்கிய அவரது இறுதி ஊர்வலம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது. ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்ட வாஜ்பாயியின் உடலுக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலை முழுவதும் மக்கள் வெள்ளம் போல காட்சியளித்தது. இறுதிச் சடங்கு நடைபெறும் ஸ்மிருதி ஸ்தல்லில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தின் போது வாஜ்பாயியின் உடலுடன் நடந்தே வந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வாகனத்தில் இருந்து வாஜ்பாயியின் உடல் இறக்கப்பட்ட போது கண்ணீர் விட்டு அழுதார். தங்கள் கட்சியின் மூத்தத் தலைவருக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
வாஜ்பாயியின் நெருங்கிய நண்பர் அத்வானி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பூடான் மன்னர், நேபாள, வங்கதேச, இலங்கை அமைச்சர்கள், ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அமித் கர்சாய் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் எரியூட்டி தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு வளர்ப்பு மகள் நமீதா கௌல் பட்டாச்சார்யா தீ மூட்டினார்.
வாஜ்பாயியின் மறைவைக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் பொது விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.