குடியரசு துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு தேர்வு
நாட்டின் 13-ஆவது குடியரசு துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி பொது வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். புதிய குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு வரும் 11-ம் தேதி பதவியேற்க உள்ளார்.
நடுத்தர விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்து, நாட்டின் உயரிய அரியணையில் அமரப் போகும் வெங்கய்ய நாயுடுவுக்கு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கப் போகும் அவரது தலைமையின் கீழ் புதிய தேசம் மலரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அந்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள வெங்கய்ய நாயுடு, அரசியல் சாசனத்தைக் கட்டிக் காத்து கண்ணியத்தை நிலைநாட்டுவேன் என்று உணர்வுப்பூர்வமாக உறுதியளித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியை வகிக்க இருக்கும் 13-ஆவது தலைவர் வெங்கய்ய நாயுடு ஆவார். இவர், மாநிலங்களவையின் தலைவராகவும் செயல்படுவார். தேர்தல் வெற்றி குறித்து வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
விவசாயக் குடும்ப பின்னணியில் பிறந்த நான், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. இந்திய அரசியல் அமைப்பில் விவசாய பின்னணியைக் கொண்டவர்கள் அதிகம் இடம்பெறவில்லை. இந்த நிலையில், தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்த பிரதமர் மோடிக்கும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடியரசுத் தலைவரின் கரங்கûளை வலுப்படுத்துவதற்கு எனது பதவியைப் பயன்படுத்துவேன். மேலும், எனது பதவிக்குரிய கண்ணியத்தையும் காப்பாற்றுவேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், தனக்கு கிடைத்த வாக்குகள், கருத்துச் சுதந்திரத்துக்கு கிடைத்த ஆதரவு என்று கோபால கிருஷ்ண காந்தி கூறியுள்ளார்.
தேர்தல் முடிவு வெளியான பிறகு, தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடுவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தேர்தல், இரண்டு விதமான வெற்றியைக் கண்டுள்ளது. ஒன்று, வெங்கய்ய நாயுடுவுக்கு கிடைத்த வெற்றி; இரண்டாவது, கருத்துச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். இரண்டாவது வெற்றி, மக்களுக்கான வெற்றியாகும். கருத்து சுதந்திரத்தையும், நாட்டின் பன்முகத்தன்மையும் பேணிக் காப்பதற்காக, எனது எதிர்பார்ப்பையும் மீறி எனக்கு வாக்களித்த எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.