Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

இராகு கேது | Rahu Ketu

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

இராகு-கேது என்கிற இந்த நிழல் கிரகங்கள் பின்னோக்கி செல்லும் இயல்புடையவை.

இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான் என்பது ஜோதிட விதி.

அதாவது –

ஒருவருக்கு இராகு திசை நடக்கிற காலத்தில் ஆரம்பத்தில் நல்லவற்றை தந்து வரும் இராகு பகவான், தனது திசை முடிகிற தருவாயில் அதுவரையில் தந்ததை பறித்து செல்வான்.

அதுபோல –

ஒருவருக்கு கேது திசை நடக்கிற காலத்தில் அந்த நபரை பல துன்பத்தில் மூழ்க வைக்கும் கேது பகவான், தனது திசை முடிகிற தருவாயில், அதுவரையில் தந்த துன்பங்களை அனுபவ பாடமாக்கி முன்னேற்றத்திற்கு வழிகாட்டிவிட்டு செல்வார்.

அதனால்தான், “இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான்” என்கிறது ஜோதிடக்கலை.

இராகு-கேது உருவான கதை

மந்திரகிரியை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் அமைத்து. திருமால் கூர்மமாகி மந்திரகிரியைத் தனது முதுகில் தாங்கி, பாம்பின் தலை பகுதியின் அருகில் அசுரர்களும், பாம்பின் வால் பகுதியை தேவர்களும் பிடித்துக்கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். அந்த பாற்கடலில் இருந்து அமிர்த கலசம் வெளிப்பட்டது.

ஒரு ஆயுதம், காவலர் கையில் இருந்தால் மற்றவர்களுக்கு அது பாதுகாப்பு. அதே ஆயுதம் ஒரு குற்றவாளியின் கையில் இருந்தால் அது ஆபத்து அல்லவா? அதுபோல, பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட அமிர்தம், அசுரர்களின் கையில் கிடைத்தால் அது தேவலோகத்தினருக்கு மட்டுமல்லாமல், பூலோக மக்களுக்கும் அது ஆபத்தில் முடியும் என்கிற காரணத்தால், அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் தர வேண்டும் என தீர்மானித்தார் ஸ்ரீமகாவிஷ்ணு.

அதனால், ஸ்ரீவிஷ்ணு பகவான் மோகினி அவதாரம் எடுத்து தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியாக அமரும்படி கூறி, தேவர்களுக்கு மட்டும் அமிர்தத்தை கொடுத்து வந்தார். இதைகண்ட அசுரர்களில் ஒருவன், தேவர்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்து அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டான்.

இதை பார்த்துவிட்ட சூரியனும் – சந்திரனும் விஷ்ணு பகவானிடம் சொல்லி விட்டார்கள். இதனால் கோபம் அடைந்த ஸ்ரீமகாவிஷ்ணு, அந்த அசுரனின் தலையை சட்டுவத்தால் வெட்ட, அந்த அசுரனின் தலையும் உடலும் இரண்டு துண்டுகளாகின. ஆனால் அவன் அமிர்தத்தை சாப்பிட்டு இருந்ததால் அவன் அழியவில்லை. அத்துடன் தேவர்களுக்கு இணையான சக்தியும் பெற்றான். நல்ல புத்தியும் பெற்றுவிட்டான்.

எப்படி முருகப்பெருமானால் தாக்கப்பட்ட சூரபத்மனின் உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுபகுதி கொடியாகவும் மாறியதோ, அதுபோல  அந்த அசுரனின் வெட்டுபட்ட தலைக்கு கீழே பாம்பின் உடலும், வெட்டுபட்ட உடலின் பகுதிக்கு பாம்பின் தலையும் அமைந்து இரண்டு தோற்றங்களாக மாறின. பாம்பின் உடல், மனித தலை அமைந்தவர் இராகு பகவான் எனவும், பாம்பின் தலையும் மனிதனின் உடலும் பெற்றவர் கேது பகவான் எனவும் அழைக்கப்படுகின்றனர். ஜோதிடத்தில் இராகு-கேது ஆகியவை முக்கிய கிரகங்களாக இருந்தாலும் அவை கண்களுக்கு தெரியாமல் இருப்பதால் சாயா கிரகங்கள் அதாவது நிழல் கிரகங்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

பரிகாரம்

இராகு-கேது பெயர்ச்சியால் அந்தந்த இராசி நிலைகளுக்கு ஏற்ப சிலருக்கு நன்மையும், சிலருக்கு பாதக பலன்களும் அமையும். அவை எதுவாக இருந்தாலும் இறைவனை வணங்கினால் நன்மையில் முடியும்.

அதனால் இராகு, கேது பரிகாரத்திற்கு இராகுக்கு உகந்த  உளுந்து பருப்பால் தயாரித்த வடை போன்ற உணவுகளை முடிந்த அளவில் தானம் செய்யுங்கள். அத்துடன், திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வணங்குங்கள். கோமேதக ரத்தினத்தை வெள்ளிலும் மோதிரமாக இடது கைவிரலில் அணியலாம். ஸ்ரீதுர்கை தேவி வழிபாடு மிக அவசியம். ஸ்ரீதுர்கைக்கு உகந்த இராகு காலத்தில் தீபங்கள் ஏற்றினாலும் இன்னல்களும், இராகு தோஷமும் விலகும்.

அதுபோல், கேது பகவானுக்கு கொள்ளுவில் தயாரித்த சுண்டல் படைத்து வணங்கலாம். விநாயகப் பெருமானை கட்டாயம் வணங்க வேண்டும். விநாயகரை போற்றி பாடல்களையும், மந்திரங்களையும் உச்சரிக்கலாம். வைடூரியம் என்ற ரத்தினத்தை வெள்ளிலும் மோதிரமாக இடது கைவிரலில் அணியலாம்.

இராகு பகவானை வழிபட திருநாகேஸ்வரம் சென்று வர வேண்டும்.

கேது பகவானுக்கு உகந்த திருக்காளஹஸ்தி  சென்று பரிகாரம் காண வேண்டும்.

எளிய பூஜை முறை

பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட.

ஈசனின் கழுத்தை நாகமே ஆபரணமாக அலங்கரிக்கிறது. சக்திதேவிக்கும் பாம்புதான் காவல். விநாயகரும் தன் வயிற்றில் பாம்பை ஒட்டியானம் போல் கட்டி வைத்திருக்கிறார். பாம்பு படுக்கைதான் ஸ்ரீமந் நாராயணனுக்கு. நாக வழிபாடு முக்கியம் என்பதை நாம் இவர்களின் மூலம் அறிகிறோம்.

இப்படி நம் இஷ்ட தெய்வங்களுக்கும் இஷ்டமானது பாம்பு. நம் கஷ்டம் தீர அவற்றை வழிபடுவது சிறப்பு.

இராகு-கேது பெயர்ச்சிக்காகவோ அல்லது இராகு கேதுவின் அருளை பெறவோ நாகத்திற்கு பூஜைகள் செய்தால் இன்னும் விசேஷம். ஆகவே உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுங்கள்.  அத்துடன் இராகு பகவானையும், கேது பகவானையும் வணங்குங்கள்.

ஸ்ரீ இராகு காயத்ரீ மந்திரம்

ஓம் நக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி |

தந்தோ ராஹு: ப்ரசோதயாத் ||

 ஸ்ரீ கேது காயத்ரீ மந்திரம்

ஓம் அச்’வ த்வஜாய வித்மஹே சூ’ல ஹஸ்தாய தீமஹி |

தந்ந: கேது: ப்ரசோதயாத் ||

இந்த காயத்ரீ மந்திரங்களை வழிபாட்டின்போது நம்பிக்கையுடன் உச்சரிப்பதால், இராகு-கேதுவால் ஏற்படும் திருமணதடை, கல்விதடை, ஆரோக்கியத்தில் குறை போன்ற தொல்லைகள் நீங்கும்.

இராகு-கேது அனைவரின் வாழ்விலும் நல்ல மாற்றத்தை தந்திட இறைவன் அருள் புரிவார்.!

உங்கள் இராசிக்குரிய இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் படிக்க இங்கே CLICK செய்யவும்.  

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation CLICK Here

© 2011-2016 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »