தடை நீங்கி மீண்டும் விற்பனைக்கு வருகிறது மேகி!
கோவா: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுதும் தடை செய்யபப்ட்ட மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என்று தற்போது, உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வருகிறது.
நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம், மோனோ சோடியம் குளுட்டாமேட் ஆகிய ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களை பல்வேறு மாநிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தின.
ஆய்வில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதனால், நெஸ்லேயின் ஒன்பது வித மேகி நூடுல்சுகளையும் “மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை” என்று அறிவித்தது மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம். இதையடுத்து இந்த மேகி வகைகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், கோவாவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆய்வு செய்ய அனுப்பியது. இந்த ஆய்வின் முடிவில், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவுதான் என தெரியவந்திருக்கிறது.. உணவு பாதுகாப்பு விதிகள் 2011 ன் படி, அனுமதிக்கப்பட்ட அளவில்தான் ரசாயன பொருட்கள் கலந்துள்ளன என்று உறுதியானது.
மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தற்போதைய ஆய்வு தெரிவிப்பதால், அதன் மீதான தடை நீக்கப்பட்டு விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
“முந்தைய ஆய்வின்படி, மேகி ஆபத்தானது என்று கூறப்பட்டது. இதையடுத்து பல இடங்களில் இருப்பில் இருந்த மேகியை கடைக்கார்கள் வீசி எறிந்தார்கள். தொடர்ந்து மேகி சாப்பிட்டு வந்த பலர், தங்களுக்கு என்னவிதமான பாதிப்பு வருமோ என்று பயந்துபோனார்கள். ஆனால் இப்போது அதே மேகி ஆபத்தானது இல்லை என்று இன்னொரு ஆய்வு சொல்கிறது. முதலில் வந்த ஆய்வு தவறு என்றால், தவறான தகவலை பரப்பி மக்களிடையே பீதீயை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று பொதுமக்களில் பலர் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேகி தடை செய்யப்பட்டபோதே, “நெஸ்லே பெரிய நிறுவனம். தான் உற்பத்தி செய்யும் மேகி மீதான தடையை தகர்த்து, மீண்டும் சந்தைக்கு வரும்” என்று பேசப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள்.
எப்படி ஆனாலும், முன்பு ஏன் தடை விதித்தார்கள், இப்போது எப்படி தடையை நீக்கினார்கள் என்பதை ஆய்வு செய்தவர்களும மத்திய அரசும் விளக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.