9% ஊதிய உயர்வு அளித்த சிடிஎஸ்; மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
இந்திய சந்தையில் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான சிடிஎஸ் தனது பணியாளர்களுக்கு 9 சதவீத ஊதிய உயர்வு அளித்துள்ளது. சந்தையில் பிற முன்னணி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ நிறுவனங்களை ஒப்பிடுகையில் காக்னிசன்ட் நிறுவனம் அதிகளவில் ஊதிய உயர்வு அளித்துள்ளதால் இந்நிறுவனப் பணியாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இந்நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கு 7% – 9% வரையிலும், வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வும் அளித்துள்ளது.
பிற நிறுவனங்களின் நிலவரபடி, டிசிஎஸ் நிறுவனத்தில் உள்நாட்டு ஊழியர்களுக்கு 8% சம்பள உயர்வும், வெளிநாட்டு ஊழியர்களுக்கு 2-4% சம்பள உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் சராசரியாக 6.7 சதவீதமும், விப்ரோ நிறுவனத்தில் 7 சதவீதமும் அளிக்கப்பட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜூலை 1ஆம் தேதி முதல் பணியாளர்களுக்குப் புதிய சம்பளம் மற்றும் பதவிகள் அளிக்கப்பட உள்ளது. மேலும் தற்போது பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெகிவித்தார். கடந்த மார்ச் மாதம் முடிந்த காலாண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தில் 62,000 பேர் இணைந்தனர், இதில் பெரும்பாலானோர் இந்திய கிளைகளில் இணைந்துள்ளனர். தற்போது இந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 217,700 ஆக உள்ளது.