திடீர் மாரடைப்பு: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பாரத ரத்னா அப்துல்கலாம் காலமானார்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏவுகணை விஞ்ஞானியான 84 வயது அப்துல் கலாம், இந்தியாவின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை பெற்றவர். கல்வித்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். ஜனாதிபதியாக இருந்த போதும், பதவிக்காலம் முடிந்த பின்னரும் பள்ளிக்கூடங் கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு உரையாற்றி வந்தார். கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும் என்பதில் உறுதியாக இருந்த அப்துல் கலாம், நதிகள் இணைப்பு திட்டத்திலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
மேடையில் பேசிக்கொண்டிருந்த போது மாலை 6.30 மணி அளவில் அவர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவரை அங்கிருந்து அந்த பகுதியில் உள்ள பெதானி என்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மேகாலயா கவர்னர் சண்முகநாதன், தலைமைச் செயலாளர் பி.பி.ஓ.வார்ஜிரி, டி.ஜி.பி. ராஜீவ் மேத்தா ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அப்துல் கலாமை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்திராகாந்தி ராணுவ மருத்துவமனையில் இருந்தும் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அப்துல் கலாம் மரணம் அடைந்தார்.
இதுபற்றி பெதானி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஜான் எல்.சைலோ ரிந்தாதியாங் கூறுகையில், “கிட்டத்தட்ட முற்றிலும் நினைவிழந்த நிலையிலேயே அப்துல் கலாம் கொண்டுவரப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். என்றாலும் பலன் இல்லாமல் போய்விட்டது. அவர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருக்கக்கூடும் என்று கருதுகிறோம்” என்றார்.
அப்துல் கலாமின் உடல் ஷில்லாங்கில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை டெல்லி கொண்டு வரப்படுகிறது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் எல்.சி.கோயலுடன் தான் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது அப்துல் கலாமின் உடலை டெல்லி கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் டாக்டர் ஜான் எல்.சைலோ தெரிவித்தார்.