கடலில் தத்தளிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்!
வங்கதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர், தாய்லாந்து அருகிலான கடல் பரப்பில் கரைசேர முடியாமல் தத்தளிக்கிறார்கள் என குடியேறிகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான ஐ ஓ எம் கூறுகிறது.
ரோஹிஞ்சா இன குடியேறிகள் சட்டவிரோதமாக வந்திறங்குவதைத் தாய்லாந்து அதிகாரிகள் அண்மைக்காலமாக தடுத்துவருவதால், ஆட்கடத்தும் ஏஜெண்டுகளால் அவர்களைக் கரைசேர்க்க முடியாமல் உள்ளது.
இதன் காரணமாக தற்போது எட்டாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளிலேயே தத்தளிக்கின்றனர்.
வட மேற்கு மலேஷியாவிலுள்ள லங்காவி என்ற சுற்றுலாத் தீவில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் திங்களன்று தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டின் போலீசார் கூறுகின்றனர்.
இந்தோனேஷியாவின் அச்சே தீவிலும் கடந்த இரண்டு நாட்களில் ரோஹிஞ்சாக்கள் என நம்பப்படும் ஆயிரத்துக்கும் மேலான குடியேறிகள் கரைசேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வங்கதேசத்திலிருந்தும் மியன்மாரிலிருந்தும் படகில் வெளியேறிய ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென அகதிகள் நலனுக்கான ஐநா ஆணையம் கூறுகிறது.