பயணிகள் ரயில் கட்டணம் அதிகரிப்பு இல்லை
பயணிகள் ரயில் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ரயில்வே பட்ஜெட்டில், அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.
2015 – 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.
அமைச்சர் சுரேஷ் பாபு தனது ரயில்வே பட்ஜெட் உரையில், “பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை” என்றார்.
மேலும், “ரயில்வே துறை – இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.
ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன.
அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். ரயில்வே துறையை தொடர்ந்து முடக்கி வரும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
நாட்டின் மிகப் பெரிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையை பல்வேறு வகைகளிலும் மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது” என்றார் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.
ரயில் நிலையங்கள், ரயில்களின் சுகாதாரம், புதிய சேவை, வசதிகள் மற்றும் கட்டுமான மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், புதிய ரயில்கள் அறிவிக்கப்படாதது ஏன்? என்பது குறித்த விளக்கத்தை ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட் உரையிலேயே வெளியிட்டார்.
2015- 16 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் பகல் 12.10 மணிக்கு ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.