திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்!
திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 18 படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்ளை பெரிதும் கவர்ந்தன.
உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை,முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார். ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், நடிப்புத்துறையிலேயே அவரது முழுக்கவனமும் இருந்தது. இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக்கம்பெனியை துவங்கினார். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நாடகத்தில், வில்லன் கேரக்டரில் நடித்தார். கிராம மக்கள் அனைவரும் சக்தியின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாது, அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.
சினிமா ஆசையில், சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிவந்தார். தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில், உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார். பின், 1972ம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குநராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமலஹாசன், தனது ஒவ்வொரு பேட்டியிலும், ஆர்.சி.சக்தியின் பெயரை குறிப்பிட தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.