சாலையில் பண மழை.. அள்ளி சென்ற மக்கள்!
ஹாங்காங்கில் சுமார் 68 மில்லயன் டாலர்கள் மதிப்பிலான பணத்தை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து, சாலையில் விழுந்து சிதறிய பண நோட்டுக்களை எடுத்துச் சென்றவர்கள் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
பணத்தை ஏற்றி வந்த லாரி சாலை விபத்தில் சிக்கியதையடுத்து சுமார் முப்பத்தியைந்து மில்லியன் ஹாங்காங் டாலர்கள் (சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பெறுமதியான பண நோட்டுகள் சாலையில் சிதறி விழுந்தன.
இதைப் பார்த்தவர்கள், ஒடி வந்து தங்களால் முடிந்த அளவுக்குப் பணத்தை அள்ளிச் சென்றிருக்கிறார்கள். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த ஆயுதம் தாங்கிய காவல்துறையினர், லாரியில் இருந்த மீதிப் பணத்தை மீட்டனர்.
சாலையில் விழுந்த நோட்டுக்களில் பாதிக்கும் அதிகமானவை மீட்கப்பட்டு விட்டன. பணத்தை எடுத்துச் சென்றவர்கள் உடனடியாக அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்யாவிட்டால் அது பெரும் குற்றம் என்றும் காவல்துறை தற்போது எச்சரித்துள்ளது.
ஹாங்காங்கின், முக்கிய வர்த்தகப் பகுதியான வான் சேயில், உணவு நேர இடைவெளையின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அந்த சாலைவழியே காரில் சென்றவர்கள் கூட, தம்முடைய கார்களை நிறுத்திவிட்டு நோட்டுக்களை பொறுக்கியதால் அங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
பண நோட்டுகள் தனித் தனியாகவும், 500 ஹாங்காங் டாலர்கள் நோட்டுக் கட்டுகளாகவும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு பெண், தன் கைகளால் கொண்டு போக முடிந்த அளவுக்கு 10 நோட்டுக் கட்டுக்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பணத்தை எடுத்துச் சென்றவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் அப்படிச் செய்யாதவர்கள் திருடிய குற்றச்சாட்டின் கீழோ அல்லது மோசமான குற்றச் செயல்களுக்கான சட்டத்தின் கீழோ நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் வான் சியு ஹாங் எச்சரித்துள்ளார்.