சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை – ரூ.100 கோடி அபராதம்?
பெங்களூர்
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991–ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு சொத்து சேர்த்ததாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு தொடர்ந்தனர். சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை பெங்களூரில் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு இடமாற்றம் செய்யுமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழக்கு ஆவணங்களை மாற்றம் செய்யவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் வசதியாக காலஅவகாசம் தேவைப்பட்டதால் வழக்கின் தீர்ப்பை 27ந் தேதிக்கு (அதாவது இன்று) தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதன் படி இந்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். காலை 11 மணி அளவில் தீர்ப்பை நீதிபதி டி குன்ஹா வாசித்தார். தீர்ப்பு பிற்பகல் வெளியானது: அதில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூர் தனி நீதி மன்றம் அறிவித்து உள்ளது.