இங்கிலாந்தின் பிரபல ஹோட்டல் உரிமையாளர்களிடையே எழுந்துள்ள சொத்துப் பிரச்சினை
லண்டன், நவ. 19-
இங்கிலாந்தில் உள்ள பிரபலமான ராடிசன் புளூ எட்வர்டியன் ஹோட்டல் நிறுவனங்களின் உரிமையாளர் பஞ்சாபைச் சேர்ந்த பல் மொகிந்தர் சிங் (86) என்பவராவார். தனது இளமைக்காலத்தில் சில வருடங்களை ஆப்பிரிக்காவில் கழித்தபின், இங்கிலாந்திற்கு வந்த மொகிந்தர் சிங் ஹோட்டல் வியாபாரத்தில் நன்கு வளர்ச்சியடைந்தார்.
இவரது மகனான ஜஸ்மிந்தர் சிங் என்பவரே தற்போது இந்த ஹோட்டல் நிர்வாகங்களைக் கவனித்து வருகின்றார். இவர் மீதுதான் ஹோட்டல் நிர்வாகத்தை முழுமையாகத் தன் வசப்படுத்திக் கொண்டதாகவும், தங்களது சீக்கிய மத வழக்கப்படி சொத்துக்களை மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்க மறுப்பதாகவும் மொகிந்தர் சிங் வழக்குப் பதிவு செய்துள்ளார். லண்டன் உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகின்றது.
லண்டனின் அடையாளங்களாகக் கருதப்படும் வாண்டர்பில்ட், சவாய் கோர்ட் மற்றும் மேஃபேர் போன்ற இடங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பீடு 415 மில்லியன் பவுண்டுகளாகும். இவர்கள் இருவருமே அங்குள்ள ஆசிய சமூகத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகின்றவர்கள் ஆவர். ஒரே வீட்டில் வசித்துவரும்போதும் தற்போதுள்ள பிரச்சினையின் காரணமாக இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும், மொகிந்தர் சிங்தான் ஹோட்டல் நிர்வாகங்களை ஜஸ்மிந்தர் வசம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆயினும், தற்போதுள்ள வழக்கு மனுவில் கடந்த 2010-ம் ஆண்டில் தனது மகன் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாக நிர்வாகத்தை எடுத்துக்கொண்டார் என்று மொகிந்தர்சிங் குறிப்பிட்டுள்ளார். இது தனக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தருவதாகவும், இந்த நிலைமையினால் தனது உடல்நலமும் குறைந்துவிட்டதாகவும் மொகிந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.நடைபெறவிருக்கும் இந்த வழக்கில் அவர் வெற்றிபெறும் பட்சத்தில் குடும்ப சொத்துகளின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு அவருக்கு கிடைக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.