ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்
ரஷ்யாவில் கஸன் விமான நிலையத்தில் தரை இறங்கிய போயிங் ரக விமானம் தீப்பிடித்து எரிந்ததில் 50 பேர் உயிரிழந்தனர்.ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து போயிங் 737 ரக விமானம், ஊழியர்கள் 6 பேர் உட்பட 50 பேருடன் கஸன் நகருக்குச் சென்றது.
இரவு 7.25 மணிக்கு கஸன் விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்று முறை பத்திரமாக தரையிறக்க முயன்றும் முடியாததால், விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் இருந்த பயணிகள் தங்களது உயிரைக் காப்பாற்றும்படி அலறினார்கள். எனினும், விபத்து நடந்த சிறிது நேரத்தில் விமானத்தில் இருந்த 50 பேரும் உயிரிழந்தனர்.
மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்ததாக ரஷ்ய அதிகாரி விளாதிமிர் மார்க்கின் தெரிவித்தார். இந்த விபத்தில் தராஸ்தான் மாகாண அதிபரின் மகன் ஒருவரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை அடுத்து கஸன் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு தகுந்த நிவாரணம் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.