காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை: கோர்ட் தீர்ப்பு
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
சங்கர ராமன் கொலை
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் 3.9.2004 அன்று அந்த கோவிலின் உள்ளே உள்ள தனது அலுவலகத்தில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இது தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், ரஜினிகாந்த், அம்பிகாபதி, பாஸ்கர், குமார், ஆனந்தகுமார், அனில்குமார், மீனாட்சி சுந்தரம், பழனி, குருவிரவி, ஆறுமுகம், தில்பாண்டியன், சதீஷ், தேவராஜ், அருண், ஆறுமுகம், சேகர், சில்வர் ஸ்டாலின், செந்தில்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரவி சுப்ரமணியம் அப்ரூவரானார்.
ஜெயேந்திரர் கைது
ஜெயேந்திரர் 11.11.2004 அன்று கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் 10.1.2005 அன்று ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயேந்திரர் வெளியே வந்த மறுநாள் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சங்கர ராமன் கொலை வழக்கு தொடர்பாக 21.1.2005 அன்று காஞ்சீபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் தனிப்படை போலீசார் 1873 பக்க குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். 370 சாட்சியங்களுடன் 712 ஆவணங்களும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது.
புதுச்சேரிக்கு மாற்றம்
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெற்று வந்த சங்கர ராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஜெயேந்திரர் தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 28.10.2005 அன்று சங்கர ராமன் கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. 2009-ம் ஆண்டு புதுச்சேரி கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. தற்போது புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
370 சாட்சியங்களில் வழக்கிற்கு தேவையான 189 பேரிடம் மட்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடந்தது. அப்போது சாட்சிகள் அளித்த வாக்குமூலம் தலைமை நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. இதில் அப்ரூவர் ரவிசுப்ரமணியம் உள்பட 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர்.
கதிரவன் கொலை
இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கதிரவன் கடந்த (2013) மார்ச் மாதம் 21-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது இறப்பு சான்றிதழை காஞ்சீபுரம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 4-ந் தேதி புதுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அன்றைய தினம் தங்கள் தரப்பு வாதம் அனைத்தும் முடிந்துவிட்டதாக சங்கராச்சாரியார்கள் தரப்பு வக்கீல்கள் கோர்ட்டில் தெரிவித்தனர்.
இதற்கிடையே சங்கர ராமனின் மகன் ஆனந்த் சர்மா தனக்கு வழக்கு விசாரணை குறித்த ஆடியோ வீடியோ நகல்கள் வேண்டும் என்று புதுவை கோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிலுவையில் இருந்ததால் வழக்கில் தீர்ப்பு வழங்குவது தள்ளிப்போனது.
இந்த நிலையில் புதுவை கோர்ட்டில் ஆஜர் ஆன ஆனந்த் சர்மா தனக்கு வழக்கு விசாரணை குறித்த ஆடியோ, வீடியோ நகல்கள் தேவையில்லை என்றும், தீர்ப்புகூற தனக்கு ஆட்சேபனையில்லை என்றும் தெரிவித்தார்.
அனைவரும் விடுதலை
இதைத்தொடர்ந்து சங்கர ராமனின் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். புதுச்சேரி கோர்ட்டில் நடந்த இந்த வழக்கினை நீதிபதிகள் சின்னபாண்டி, குமாரசாமி, ராமசாமி, முருகன் ஆகியோர் விசாரித்து உள்ளனர். நீதிபதி முருகன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட அனைவரையும் விடுதலை செய்துள்ளார். குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று நீதிபதி முருகன் கூறியுள்ளார்.