அருளும், பொருளும் தரும் ஈச்சனாரி விநாயகர்!
கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் சாலையில்- சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், ஈச்சனாரி என்னும் இடத்தில் இருக்கிறது இந்த ஈச்சனாரி விநாயகர் ஆலயம்.
இந்த கோயிலின் தலவரலாறு மிகவும் சுவையானது. கோவையில் புகழ்பெற்ற இன்னொரு கோயிலான பேரூர் பட்டீஸ்வரசாமி கோயிலுக்காக செய்யப்பட்ட விக்ரகம் இது. ஆறு அடி உயரம், மூன்று அடி பருமனும் உள்ளது. மதுரையில் இருந்து ஒரு மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்றி வந்தனர். வண்டியின் அச்சு இப்போது கோயில் இருக்கும் இடத்திற்கு அருகே வந்தபோது முறிந்துவிட்டது. வேறு வண்டியில் பிள்ளையாரை ஏற்றி பேரூருக்குக் கொண்டுசெல்ல முயன்றும் முடியவில்லை. விநாயகர் ஈச்சநாரியிலேயே தங்கிவிட்டார். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் இது. பிறகு அதே இடத்தில் சிறிய கோயில் அமைத்து வழிபடத் தொடங்கினர்.
இடைவெளி இல்லாத தரிசனம். ஆமாம். கோயில் காலை ஐந்து மணிக்கு தரிசனத்திற்குத் திறந்து வைக்கப்பட்டால், இரவு பத்துமணி வரை இடைவிடாமல் விநாயகரை தரிசிக்கலாம். இடையில் கோயிலை மூடுவதே இல்லை.
ஈச்சனாரி விநாயகரின் அலங்காரம்
ஈச்சனாரி விநாயகர் திருமுடியில் கிரீடம். தங்க விபூதிப்பட்டைகள். இடது கையில் மோதகம், கழுத்தில் உருத்திராட்சமாலை. அழகான அருகம்புல் மாலை.
ஒவ்வொரு நாளும் விநாயகரின் அலங்காரங்கள் வித்தியாசப்படுகின்றன. சந்தன அலங்காரம், விபூதி அலங்காரம், தங்கக் கவச அலங்காரம் என்று பலவிதமாக அலங்காரங்கள்.
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று செய்யப்படும் அன்னாபிஷேக அலங்காரம் மிகவும் வித்தியாசமானது. விநாயகருக்கு அஸ்வதி முதல் ரேவதி வரை உள்ள இருபத்தியேழு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்பட்டு நடத்தப்படும் நட்சத்திர பூஜை மிகவும் விசேஷமானது.
சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, சதுர்த்தி ஆகிய நாட்களில் மாலை ஏழு மணிக்கு சுவாமி திருவீதி உலா நடத்தப்படுகிறது.
தினசரி கோயிலுள் திருவீதி உலா
தமிழகத்திலேயே முதன்முறையாக விநாயகப் பெருமானுக்கு என்று தங்கத்தேர் செய்யப்பட்டு, நாள்தோறும் இடைவிடாமல் பக்தர்களால் வழிபாடாக தினசரி இரவு ஏழு மணிக்கு கோயிலுள் திருவீதி உலா நடக்கும் காட்சி, வேறு எந்த கோயிலிலும் காணமுடியாத ஒன்றாகும்.
சங்கடங்களைத் தீர்த்துவைக்கும் ஈச்சனாரி விநாயகரை தரிசித்து அருளும், பொருளும் பெருவோம்